search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air-India"

    • கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
    • விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

    நாடு முழுவதும் வேலையின்மை பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. குறைந்தபட்ச காலியிடங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் போட்டியிடும் அவலம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் குஜராத்தின் அங்கலேஷ்வரில் 10 பணியிடங்களுக்கு 1,800 பேர் விண்ணப்பிக்க முண்டியடித்தனர். தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மும்பை விமான நிலையத்தில் 600 காலி பணியிடங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    விமானத்தில் பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் பேக்கேஜ் பெல்ட்கள் மற்றும் ராம்ப் டிராக்டர்களை இயக்குதல். ஒவ்வொரு விமானத்திற்கும் பொருட்கள், சரக்கு மற்றும் உணவுப் பொருட்களைக் கையாள குறைந்தபட்சம் 5 பேர் தேவை.

    விமான நிலையத்தில் பொருட்களை ஏற்றிச் செல்வோரின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரம் பணி செய்து ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார்கள். வேலைக்கான கல்வி அடிப்படை தகுதி. ஆனால் விண்ணப்பத்தாரர்கள் உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும்.

    வேலைக்கு ஆட்கள் தேவை என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலுவலகத்தின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். இதையடுத்து, அனைவரின் சுயவிவரங்கள் அடங்கிய ரெஸ்யூம்களை வாங்கிக் கொண்டு, தகுதியுள்ளவர்களை நேர்முக தேர்வுக்கு அழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த பிரதமேஷ்வர் என்பவர் நேர்காணலுக்காக 400 கிலோமீட்டர்கள் பயணம் செய்து வந்துள்ளார். ஹேண்டிமேன் பணிக்கு விண்ணப்பிக்க வந்துள்ளேன், ரூ.22 ஆயிரத்து 500 சம்பளம் தருவதாக கூறி இருந்தார்கள் என்றார். பிரதமேஷ்வர் பிபிஏ இரண்டாமாண்டு மாணவர் என்பதால் வேலை கிடைத்தால் படிப்பை நிறுத்திவிடுவீர்களா என்று கேட்டதற்கு, "என்ன செய்வது? வேலையில்லா திண்டாட்டம் அதிகம். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கூறினார்.

    பிஏ பட்டம் பெற்ற மற்றொருவர், தனக்கு ஒரு ஹேண்டிமேன் வேலையைப் பற்றி அதிகம் தெரியாது, ஆனால் "வேலை தேவை" என்று கூறினார். மற்றொருவர் ராஜஸ்தானின் அல்வாரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்துள்ளார். அவர் எம்காம் பட்டம் பெற்றுள்ளார். ஆனால் அடிப்படைக் கல்வித் தேவையுள்ள வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். "நானும் அரசு வேலை தேர்வுக்கு தயாராகி வருகிறேன், இங்கு சம்பளம் நன்றாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னார். அதனால் வந்துள்ளேன்." என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று நாடு திரும்பியது.
    • உலகக் கோப்பையுடன் டெல்லி வந்தடைந்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படாசில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர். உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசில் ஏற்பட்ட புயல் மழையால் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க்கில் இருந்து புதுடெல்லிக்கு இயக்க திட்டமிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்துசெய்யப்பட்டது.

    அந்த பயணிகள் விமானம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை அழைத்துச் செல்ல பார்படாசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

    ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை விமானத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாற்று விமானம் எதுவும் வழங்கப்படவில்லை என பயணிகள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை டிஜிசிஏ கோரியுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • 'இந்து மீல்ஸ்', ‘இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன?
    • ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா?

    ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவு பட்டியலில் 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், 'இந்து மீல்ஸ்', 'இஸ்லாமியர் மீல்ஸ்' அப்படி என்றால் என்ன? ஏர் இந்தியாவை சங்கிகள் கைப்பற்றிவிட்டனவா? இதுகுறித்து இந்திய விமான போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு ப்ளேடு இருந்ததாக வந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இந்திய விமான போக்குவரத்துத்துறை ஏன் அமைதியாக உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.

    • விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்ததாக பகிர்ந்துள்ளார்.
    • அதிகாரி ராஜேஷ் டோக்ரா உணவில் பிளேடு இருப்பதை உறுதிப்படுத்தினார்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9ம் தேதி AI 175 என்கிற ஏர் இந்தியா விமானம் சென்றது.

    இந்த விமானத்தில் பயணித்த பத்திரிக்கையாளர் மதுரஸ் பால் என்பவர், தான் அனுபவித்த வேதனையான அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்ததாக குறிப்பட்டுள்ளார்.

    மேலும், அவர், " ஏர் இந்தியாவின் இன்-ஃப்ளைட் கேட்டரிங் வழங்கும் அத்திப்பழ சாட் உணவில் பிளேடு இருப்பதை கண்டுபிடித்தேன். உணவு சாப்பிட்டபோது, அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்ற நிலையில், ஏதோ கூர்மையான பொருள் தட்டுப்படவே வாயில் இருந்து எடுத்தபோது அது பிளேடு என்பதை உணர்ந்தேன்.

    இதுதொடர்பாக விமான பணிப்பெண்ணிடன் புகார் அளித்தபோது, அவர் மன்னிப்புக் கேட்டதுடன், வேறு ஒரு கொண்டைக்கடலை உணவை கொண்டு வந்தார்.

    எந்தவொரு விமானத்திலும் உணவில் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பினேன் என்றார்.

    இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு புகார் அனுப்பிய நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சில நாட்களுக்குப் பிறகு, பத்திரிக்கையாளருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளது.

    அதில் இழப்பீடாக "உலகில் எங்கு வேண்டும் என்றாலும் பயணிக்கும் வகையில் இலவச வணிக வகுப்பு பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு" வழங்கியதாகவும், ஆனால் அது லஞ்சம் வழங்குவதற்கு சமம் என்றும் அதை நிராகரித்ததாக குறிப்பிட்டார்.

    மேலும், டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா, இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டு, தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உணவில் பிளேடு இருப்பதை உறுதிப்படுத்தினார்.

    இதுகுறித்து ராஜேஷ் டோக்ரா கூறுகையில், "அந்த பிளேடு துண்டு கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறி பதப்படுத்தும் இயந்திரத்தில் இருந்து வந்தது என்பதை கண்டறிந்துள்ளோம். செயலியை அடிக்கடி சோதனை செய்வது உட்பட, குறிப்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

    • போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன.
    • கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுனத்தில் பணிபுரியும் கேபின் ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி இரவில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். நிர்வாகம் தங்களை தவறாக நடத்துவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அன்றைய தினம் ஏர் இந்தியாவின் 85 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலைக்கு திரும்புவதாக ஊழியர்கள் கூறினர். ஆனால் அவர்கள் பணிக்கு திரும்பாத காரணத்ததால் நேற்று 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து கேரள மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநில விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கண்ணூர், கரிப்பூர், கொச்சி ஆகிய 4 விமான நிலையங்களில் பல விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட வேண்டிய மஸ்கட் விமானம் இயக்கப்படவில்லை.

    இதேபோல் ஷார்ஜா விமான சேவையும் பாதிக்கப்பட்டது. கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், ரியாத், ராசல் கைமா, தம்மாம் , தோஹா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், குவைத், தோஹா, பஹ்ரைன், ராசல்ஹைமா ஆகிய விமான சேவைகள் ரத்தாகின. இதேபோன்று கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4, கண்ணூரில் 8, கரிப்பூரில் 6, கொச்சியில் 4 என 22 விமான சேவைகள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பி வருபவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

    • 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி.
    • 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு சொந்த மாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு வாங்கியது.

    இதற்கிடையே ஊதியம், போனசில் பாகுபாடு காட்டு வதாகவும், புதிய வேலை வாய்ப்பு விதிமுறைகளை எதிர்த்தும் ஏர் இந்தியா ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் திடீரென்று உடல் நலக்குறைவு விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    ஊழியர்கள் இன்று 2-வது நாளாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் ஊழியர்கள் 30 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு அனுப்பப் பட்ட பணிநீக்க கடிதத்தில், அதிகளவில் விடுப்பு எடுத்தது எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட வேலையில் இருந்து விலகியிருப்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகப் கூறி விடுமுறை எடுத்துள்ள மீதமுள்ள ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்குள் பணியில் சேர வேண்டும். இல்லையென்றால் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே கேபின் குழு உறுப்பினர்களுடன் ஏர் இந்தியா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் அவதி.
    • இந்தியா முழுவதும் சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதனால், பெங்களூரு- டெல்லி, கோழிக்கோடு- துபாய் குவைத்- தோகா விமானங்களும், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூரில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா கண்ணூரில் இருந்து தனது விமானங்களை ரத்து செய்தது. அதன்படி, கண்ணூரில் இருந்து மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, கொச்சி விமான நிலையத்திலிருந்து நான்கு சேவைகள் நிறுத்தப்பட்டன.

    அறிக்கைகளின்படி, திருவனந்தபுரம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இருந்து சுமார் 70 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கச் சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்தாலும், அதன் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தான் ரத்து செய்ய வழிவகுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை மீண்டும் தொடங்கியது.
    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவை வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கி இருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்லவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.
    • டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவையை நிறுத்தியது.

    இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு செல்லும் விமான சேவையை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    அதன்படி டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு செல்லும் நேரடி விமானங்கள் அனைத்தும் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் டெல் அவிவ் இடையில் ஒவ்வொரு வாரம் நான்கு விமானங்களை ஏர் இந்தியா இயக்கி வருகிறது.

    இஸ்ரேல் நகரின் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது.

    அதன்பிறகு கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி தான் டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா விமான சேவைகளை மீண்டும் துவங்கியது. 

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • விமானியை பயணி தாக்கும் காட்சி இணையத்தில் வைரல்
    • பயணி மன்னிப்பு கேட்ட நிலையில், அதனை ஏற்க மறுத்த விமானி அவர் மீது புகார் அளித்தார்

    டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று 110 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. மேலும் 79 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவா செல்லவிருந்த விமானம் கடும் பனிமூட்டத்தால் பல மணி நேரம் தாமதமானது.

    இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வந்த விமானியை சாஹில் கட்டாரியா என்ற பயணி தாக்கியுள்ளார். விமானியை பயணி தாக்கும் காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமானத்தில் இருந்த அந்த பயணி வெளியேற்றப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து சாஹித் கட்டாரியா, விமானி அனுப் குமாரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பை ஏற்க மறுத்த விமானி அவருக்கு எதிராக புகார் அளித்தார். சாஹித் கட்டாரியா மீது ஐபிசியின் பிரிவு 323, 341மற்றும் 290 மற்றும் விமான விதிகளின் பிரிவு 22 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியானது.
    • அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    பொதுவாக மழைக்காலத்தில் மக்கள் குடை இல்லாமல் வெளியில் செல்வது கிடையாது. ஒருவேளை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்த பல்வேறு சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

    இதேபோன்று ஒரு சம்பவம் விமானத்தில் ஏற்பட்டது என்றால் நம்புவீர்களா?. நம்பித்தான் ஆக வேண்டும். ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இருக்கைகைளுக்கு நடுவே மழைநீர் கொட்டுவதுபோல் நீர் கொட்டியது.

    மழைநீர் கொட்டுவதை அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவுடன் "ஏர் இந்தியா.. எங்களுடன் பறந்து செல்லுங்கள்- இது ஒரு பயணமாக மட்டும் இருக்காது, ஒரு மிகச் சிறந்த அற்புதமான அனுபவமாகவும் இருக்கும்" என்று அதன் விளம்பரத்தை கேலி செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார்.

    ஆனால், இந்த விமானம் எங்கிருந்து எங்கே சென்றது என்பதை அவர் குறிப்பிடவில்லை. பொதுவாக விமானத்தில் காற்று கூட புகாதவாறு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் நிலையில் மழை நீர் எவ்வாறு? என கேள்வியும் எழும்பத்தான் செய்கிறது. தொழில் நுட்பகோளாறாகக் கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், விமான நிறுவனம் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

    தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபோதிலும், ஒன்றுமே நடக்காதது போல் பயணிகள் பயணித்தனர். இதுகுறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    ×