என் மலர்
இந்தியா

அகமதாபாத் விமான விபத்துக்கு யார் காரணம்? - உச்சநீதிமன்றத்தை நாடிய விமானியின் தந்தை
- விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
- உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஜூன் 12 ஆம் தேதி, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் AI 171, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
விபத்தில், 230 பயணிகளில் 229 பேர், பணியாளர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் விமானம் மோதியதில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.
இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்ச் பழுது காரணமாக எரிபொருள் விநியோகம் நின்று விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் விமானி இன்ஜினுக்கு எரிபொருள் அனுப்பும் ஸ்விட்சை வேண்டுமென்றே ஆஃப் செய்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமித் சபர்வாலின் தந்தை, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP) உடன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "விமான விபத்து குறித்து நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், சுயாதீன விமானப் போக்குவரத்து நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்" என்று கோரியுள்ளார்.
மேலும், விமான விபத்து குறித்த புலனாய்வுப் பணியாகத்தின் (AAIB) முதற்கட்ட அறிக்கை "பாரபட்சமாகவும் குறைபாடுகளுடனும் உள்ளது என்றும் விமான விபத்துக்கு விமானி தான் காரணம் என்றும் கூறுகிறது. ஆகவே விமான விபத்து குறித்து புலனாய்வுப் பணியாகத்தால் (AAIB) நடைபெற்று வரும் விசாரணையை முடித்து வைக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






