search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMk Coalition"

    அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளதையடுத்து யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது. #ADMK #BJP

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க. வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, த.மா.கா.வுக்கு 1, புதிய தமிழகம் கட்சிக்கு 1, புதிய நீதிக்கட்சிக்கு 1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன.

    பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 தொகுதிகள் உறுதியாகிவிட்டன. 5-வது தொகுதி எது என்பதில்தான் இழுபறி நிலை இருந்தது. வடசென்னை, திருச்சி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் இருந்து ஒன்றை பா.ஜ.க. கேட்டு வந்தது.

    ஆனால், அ.தி.மு.க. தலைமை பா.ஜ.க.வின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ராமநாதபுரம் தொகுதியை தருவதாக வாக்குறுதி அளித்தது. இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது, ராமநாதபுரம் தொகுதியை பெற பா.ஜ.க. சம்மதம் தெரிவித்துவிட்டது.



    இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடும் சுமுகமாக முடிவடைந்துள்ளது. இனி யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பட்டியலை அ.தி.மு.க. தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு இன்று (சனிக்கிழமை) வெளியாகும் என தெரிகிறது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியலை வெளியிட இருக்கின்றனர்.#ADMK #BJP
    எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன்பிறகு தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களாக இந்த கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், தே.மு.தி.க. 4 தொகுதிகள், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஜி.கே.வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு இன்று ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கீடு செய்துள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    புதுச்சேரி தொகுதியை தோழமைக்கட்சியான என். ஆர்.காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்து இருப்பதால் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் களம் இறங்குகிறது. எனவே சுமார் 15 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் நேரடி பலப்பரீட்சை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த சில தினங்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    90 சதவீதம் அளவுக்கு இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுவிட்டது. ஓரிரு தொகுதிகள் தொடர்பாக மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இன்று காலை அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.


    கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்குகிறார்கள். கூட்டத்தில் அ.தி.மு.க. தோழமைக்கட்சி தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், சுதீஷ், கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய பிரசாரத்தை மேற்கொள்வது என்பது பற்றி தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். அனைத்துக்கட்சி தலைவர்களும் பங்கேற்கும் கூட்டங்களை எந்தெந்த நகரங்களில் நடத்துவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

    முக்கிய தொகுதிகள் பற்றியும் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் தெளிவானதும் உடனடியாக வேட்பாளர்களை அறிவிக்கவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அ.தி.மு.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடந்து முடிந்து விட்டது.

    அது போல பா.ம.க.விலும் வேட்பாளர் பட்டியல் தயாராக உள்ளது. தே.மு.தி.க.விலும் வேட்பாளர்களை அறிவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    எனவே இந்த வார இறுதிக்குள் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம் தெரிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #EdappadiPalaniswami #ADMK

    ×