என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள்"

    • சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
    • முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.

    இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது.
    • விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது.

    இனி விமானப் பயணத்தின் போது பயணிகள் பவர் பேங்குகளைப் பயன்படுத்தக் கூடாது என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் DGCA அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, விமானத்தில் பவர் பேங்க் கொண்டு செல்லலாம், ஆனால் விமானத்திற்குள் அதைப் பயன்படுத்தவோ அல்லது சார்ஜ் செய்யவோ அனுமதி இல்லை.

    லித்தியம் பேட்டரிகள் கொண்ட பவர் பேங்குகள் விமானத்தின் உள்ளே தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பவர் பேங்குகளை செக்-இன் லக்கேஜ்களில் வைக்க அனுமதி கிடையாது. அவற்றை பயணிகள் தங்கள் கையோடு வைத்திருக்கும் கேபின் பேக்குகளில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

    விமானம் பறக்கும் போது அவற்றை எலக்ட்ரானிக் சாதனங்களுடன் இணைப்பதோ அல்லது பயன்படுத்துவதோ முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால், விமானப் பாதுகாப்பு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
    • டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.

    வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.

    ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.
    • சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

    தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.

    வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.

    கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.

    அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.

    இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.

    அந்த வகையில் சுற்றுலா செல்வதில் இந்தியர்களை அடித்துக் கொள்ள முடியாது. அது பக்கத்தில் ஊரில் உள்ள மொட்டைப் பாறையாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி அவரவர் சக்திக்கு ஏற்றவாறு சுற்றுலா சென்றவண்ணம் தான் உள்ளனர்.

    சேரனின் தவமாய் தவமிருந்து படத்தில் மகனை டூருக்கு அனுப்ப காசில்லாத தந்தை ராஜ்கிரண் அவர்களை அதே ஊரிலேயே குளத்தில் குளிப்பது, நாடகம் பார்ப்பது என சிறு சிறு விஷயங்களில் உள்ள இன்பத்தை அனுபவிக்கச் செய்வார்.

    அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய அதன் இயக்குனர் சேரன், ஒரு ஊருக்குள்ளேயே இத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்த்தவே அந்த சீக்வன்ஸ் என்று கூறியிருப்பார்.

    ஆனால் இப்போது நகர்வாசிகளாகிவிட்ட மனிதர்களுக்கு அதுவும் கிடைப்பது அரிதே. எனவே இந்த வெற்றிடத்தை சசுற்றுலா இட்டு நிரப்புகிறது என்றே கூறலாம்.

    அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் விரும்பிச் சென்ற நாடுகளைப் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

    2025-ஆம் ஆண்டில் இந்தியர்களின் வெளிநாட்டுப் பயண ஆர்வம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

    வழக்கமான சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, ஜப்பான், தென் கொரியா, ஜார்ஜியா போன்ற புதிய நாடுகளையும் இந்தியர்கள் தேடிச் சென்றுள்ளனர்.

    இருப்பினும், இந்திய சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இப்போதும் முதலிடத்தில் இருப்பவை பாரம்பரியமான சில நாடுகளே.

    மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் பயணித்த முதல் 10 நாடுகளின் இவைதான்...

    பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஐக்கிய அரபு அமீரகம். சுற்றுலா, தொழில் நிமித்தமான பயணங்கள் மற்றும் அங்கு வசிக்கும் உறவினர்களைக் காணச் செல்வது என சுமார் 7.78 மில்லியன்(77 லட்சம்) இந்தியர்கள் இந்த ஆண்டு அமீரகத்திற்குப் பயணம் செய்துள்ளனர்.

    ஐக்கிய அரபு அமீரகம்

    துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை இந்தியர்களின் விருப்பமான இடங்களாகத் தொடர்கின்றன.

    இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா உள்ளிட்ட புனிதப் பயணங்கள் மட்டுமின்றி, தொழில் மற்றும் குடும்பப் பயணங்களுக்காகவும் சுமார் 3.42 மில்லியன் இந்தியர்கள் இந்தாண்டு இங்கு சென்றுள்ளனர்.

    சவூதி அரேபியா

    சுற்றுலா, கல்வி மற்றும் குடும்ப உறவுகளை இந்தியர்கள் சந்திக்கச் செல்வதில் அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    அமெரிக்கா 

    டிரம்ப் அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதும், அதை இம்மியளவும் சட்டை செய்யாமல் இந்த ஆண்டில் சுமார் 2.14 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    நான்காவது தாய்லாந்து. குறைந்த செலவில் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பும் இந்தியர்களின் சொர்க்கமாகத் தாய்லாந்து உள்ளது.

    தாய்லாந்து

    ஆன்மிகச் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு என சுமார் 1.91 மில்லியன் இந்தியர்கள் இவ்வாண்டு தாய்லாந்தை கண்டு ரசித்துள்ளனர்.

    சிங்கப்பூர்

    ஐந்தாவது சிங்கப்பூர். பாதுகாப்பு, எளிதான போக்குவரத்து மற்றும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக்கூடிய இடங்கள் அதிகம் இருப்பதால், சிங்கப்பூர் இந்தியர்களின் டாப் 5 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

    பிரிட்டன்

    ஆறாவது பிரிட்டன். லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் காணவும், கல்வி மற்றும் வணிக ரீதியாகவும் இந்தியர்கள் பிரிட்டனை அதிக அளவில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

    கத்தார்

    ஏழாவது கத்தார். கத்தாரின் எளிமையாக்கப்பட்ட விசா நடைமுறைகள் மற்றும் தோஹா வழியாகச் செல்லும் சர்வதேச விமான இணைப்புகள் காரணமாக, இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது.

    கனடா 

    எட்டாம் இடத்தில் கனடா. சுற்றுலா மற்றும் அங்கு குடியேறியுள்ள உறவினர்களைச் சந்திக்கச் செல்வதற்காகக் கனடா இப்போதும் இந்தியர்களின் விருப்பமான நாடாகவே நீடிக்கிறது.

    ஓமன்

    ஒன்பதில் ஓமன்.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் கலாச்சார அனுபவங்களுக்காக இந்தியர்கள் ஓமனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டது இதற்கு முக்கியக் காரணமாகும்.

    மலேசியா

    பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடிக்கிறது மலேசியா. பட்ஜெட் பயணங்கள் மற்றும் குடும்பச் சுற்றுலாவுக்குஉகந்த நாடாக மலேசியா பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    மலேசியா 

    இந்தியர்களுக்கான விசா விலக்கு மற்றும் சிறந்த விமான போக்குவரத்து வசதிகள் மலேசியாவை இந்தியர்களின் விருப்பமான இடமாக தொடர்ச் செய்துள்ளது.

    மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டை இனிதே இந்தியர்கள் கழித்துள்ளனர். விசா நடைமுறைகள் எளிதாக்கப்படுவதும், நேரடி விமான சேவைகள் அதிகரிப்பதும் வரும் ஆண்டுகளில் இந்தப் பட்டியலை இன்னும் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
    • தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.

    இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இப்பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

    தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

     

    • கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும்
    • 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள்

    நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 37 ரயில்களில் கூடுதலாக 116 பெட்டிகளை இணைத்துள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள் ஸ்லீப்பர், ஏசி, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என வழித்தடத்தை பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

    வடக்கு ரயில்வே மண்டலம் 5 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஒரு பயணத்திற்கு 30,780 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட 18 பெட்டிகள் கொண்ட 30 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள், சிறப்பு ரயில்கள் மூலம் 26 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இருந்து கோவை, சேலம், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.  

    • அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
    • மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

    2025 ஆகஸ்டு மாதத்தில் 99.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2025 அன்று 4,09,590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    2025, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 48,71,627 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 2,24,246 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,13,759 பயணிகள் (Single journey Paper QR /Token 21,74,413; Static QR 3,10,521; Whatsapp - 6,12,757; Paytm 4,28,846; ONDC – 7,58,871; PhonePe – 3,45,562; CMRL Mobile App 1,82,789) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இதற்கிடையே, மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மைசூர் காலனி ரெயில் நிலையம் வந்த மோனோ ரெயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதி வழியின் நின்றது. இதனால் ரெயில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ரெயிலில் சிக்கி இருந்தவர்களை நீள ஏணிகளின் மூலம் பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்குத்திட்டை கிராம பஸ் நிறுத்தத்தில் சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடி மகளிர் இலவச பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பின்பக்க படிக்கட்டின் கீழ் உள்ள டயரில் இருந்து அதிக அளவில் புகையும் துர்நாற்றமும் ஏற்பட்டதால் உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

    பஸ் டயர் தேய்மானம் ஆகி உள்ளே உள்ள டியூப் ஆகியவை சூடு ஏறி புகை வந்துள்ளது என தெரிகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டது.

    இந்நிலையில் பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் நீண்ட நேரமாக காத்திருந்தும் மாற்று பஸ் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு பயணிகள் பழுது இல்லா பஸ்சை இயக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
    • பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

    லண்டன்:

    விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.

    இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

    • நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர்.
    • கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

    சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு போதிய பஸ்கள் இல்லாததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.

    நேற்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 936 சிறப்பு பஸ்களை சேர்த்து மொத்தம் 3028 பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணம் செய்து உள்ளனர். கிளாம்பாக்கத்தில் நேற்று இரவும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கடந்த 4 நாட்களில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்து 26 அரசு பஸ்களில் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேர் பயணம் செய்து இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது, கடந்த 4 நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்பவும், முன்பதிவு அடிப்படையிலும் போதுமான பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.

    தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும். பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்களை இயக்கிட வழி வகை செய்யப்படும் என்றனர்.

    ×