என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார்
    • பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க கொலம்பியா பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் யூத மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறியது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கொலம்பிய பல்கலைக்கழகம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

    இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக அரசு நிர்வாகத்தால் வழங்கப்படும் ரூ.3,400 கோடியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் கொலம்பியா பல்கலைக்கழகம், டிரம்ப் நிர்வாகத்தின் சில உத்தரவுகளை ஏற்றது. அதன்படி பல்கலைக்கழக வளாக போலீசாருக்கு மாணவர்களை கைது செய்ய அதிகாரம் வழங்கப் பட்டது.

    இந்த நிலையில் ஆராய்ச்சி நிதியை திரும்ப பெற டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த கொலம்பியா பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், மனித உரிமை மீறல்களுக்கு இழப்பீடாக டிரம்ப் அரசுக்கு ரூ.1,700 கோடியை செலுத்த பல்கலைக் கழகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்திற்கும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அடுத்த வாரம் அதிபர் டிரம்ப்பை சந்தித்து இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்பின் மிரட்டலுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அடிபணிந்து உள்ளது.

    • குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    • டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார்

    ஐரோப்பிய யூனியன் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% புதிய வரியை ஆகஸ்ட் 1 முதல் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மெக்சிகோவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

    மெக்சிகோ தென் அமெரிக்காவின் போதைப்பொருள் மைதானமாக மாறி வருவதாக டிரம்ப் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐரோப்பிய யூனியன் வரி கொள்கைகளால் அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகள், அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான தனது 2024 தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, டிரம்ப் தற்போது 24 நாடுகள் மற்றும் 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு புதிய வரி விதிப்பை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.
    • விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.

    270 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இந்த 15 பக்க அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.

    விபத்து நடந்த இடத்தின் ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோகிராஃபியை ஆய்வு செய்து விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் அதிகபட்ச வேகமான 180 நாட்களை எட்டியது. இதைத் தொடர்ந்து, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டன.

    எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டன. சிறிது நேரத்திலேயே சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது.

    விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சை ஏன் அணைத்தீர்கள் என்று ஒரு விமானியிடம் கேட்டபோது, மற்ற விமானி தான் அவ்வாறு செய்யவில்லை என்று பதிலளிப்பதை குரல் பதிவில் கேட்க முடிகிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விமானி வேண்டும் என்றே ஸ்விட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போயிங் 737 விமானங்களில் எஞ்சினுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்ச் குறித்து அமெரிக்க அரசின் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அமைப்பு 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட எச்சரிக்கை கவனம் பெற்று வருகிறது.

    டிசம்பர் 2018 வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது. அகமதாபாத்தில் விபத்தை ஏற்படுத்திய போயிங் 737-8 விமானத்திலும் இதே சுவிட்ச் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • H-1B (வேலை விசாக்கள்) மற்றும் J (பார்வையாளர் விசாக்கள்) ஆகியவற்றுக்கு பொருந்தும்.
    • தற்போது, அமெரிக்க பி-1/பி-2 விசாவுக்கு 185 டாலர் (சுமார் ரூ. 15,800) செலவாகிறது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்த 'பிக் பியூட்டிஃபுல் பில்' மசோதா கடந்த ஜூலை 4 அன்று சட்டானது.

    இந்த சட்டத்தின்கீழ் குடியேற்றம் அல்லாத விசாக்களுக்கு 250 டாலர் (சுமார் ரூ. 21,400) புதிய விசா கட்டணத்தை (Visa Integrity Fee) டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

    இந்த புதிய கட்டணம், ஏற்கனவே உள்ள விசா செலவுகளுடன் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் இது திரும்பப் பெற முடியாத கட்டணமாகும். இது 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

    இந்தக் கட்டணம் B-1/B-2 (சுற்றுலா மற்றும் வணிக விசாக்கள்), F மற்றும் M (மாணவர் விசாக்கள்), H-1B (வேலை விசாக்கள்) மற்றும் J (பார்வையாளர் விசாக்கள்) ஆகியவற்றுக்கு பொருந்தும். A மற்றும் G பிரிவுகளில் உள்ள விசாக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்தியர்கள் உட்பட அமெரிக்காவுக்குச் செல்லும் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகப் பயணிகள் அனைவரும் இந்தக் கூடுதல் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள்.

    தற்போது, அமெரிக்க B-1/B-2 விசாவுக்கு 185 டாலர் (சுமார் ரூ. 15,800) செலவாகிறது. புதிய கட்டணம் அமலுக்கு வந்தால் மற்ற செலவுகளுடன் சேர்ந்து மொத்த செலவு சுமார் 472 டாலராக (ரூ. 40,502) ஆக உயரும். இது தற்போதைய விசா செலவை விட 2.5 மடங்கு அதிகம்.

    • காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
    • மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    காசா மற்றும் மேற்குக் கரை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸை அமெரிக்கா தடை செய்துள்ளது.

    காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

    அண்மையில் அவர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெருநிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

    இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் லாபம் ஈட்டிய பெறுநிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்து குற்றவியல் விசாரணை நடத்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். எனவே அல்பானீஸை மவுனமாக்க டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக "அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக" குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

    இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப்படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறினார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தார்.

    • அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சூரிய குளியல் மீது எனக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என தெரிவித்தார்.

    ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.

    • 2022ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
    • 2023 மே மாதம் லிண்டாவை சிஇஓ-வாக நியமித்தார்.

    உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்னர் டுவிட்டர் பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். கடந்த 2023ஆம் ஆண்டு மூத்த விளம்பர நிர்வாகியான லிண்டா யாக்காரினோவை சிஇஓ-வாக நியமித்தார்.

    சுமார் இண்டு வருடம் பணியாற்றிய நிலையில், லிண்டா தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்த அவர் "எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் xAI (Chatbot Grok உருவாக்கிய நிறுவனம்) உடன புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்த எக்ஸ் இன்னும் சிறந்ததை எட்டவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    • பெரும்பாலான விமானங்கள் ரத்தும், ஒரு சில விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.
    • சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

    சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் தெரிவிக்கும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள் ரத்தும், ஒரு சில விமானங்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில், விமானத்தில் பயணிக்க தயாரான போது பயணி ஒருவர் சக பயணியிடம் 'என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு' என்று தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து வர்ஜீனியாவுக்கு செல்லவிருந்த விமானத்தில் 27 வயது வாலிபர் ஒருவர், சக பயணியிடம் "என் லேப்டாப் ஒரு வெடிகுண்டு" என்று கூறியதை அடுத்து அவர் அவசரமாக தரையிறக்கி விடப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

    இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் கூறிய வாலிபர் தாஜ் மாலிக் டெய்லர் என அடையாளம் காணப்பட்டு அவரிடம் FBI விசாரணையை தொடங்கியது.

    • ஆகஸ்ட் 1 முதல் 14 நாடுகளுக்கு 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • கூறுதல் வரிவிதிப்பது இன்று முதல் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.

    ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    ஜப்பான், தென்கொரியா, மியான்மர், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, வங்கதேசம், செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 கூடுதல் நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.

    அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் தேதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

    இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

    • குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ வெளியாகியுள்ளது.
    • 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதாவது சில மாதங்கள் பெய்ய வேண்டிய மழை சில மணிநேரங்களில் பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பலர் வீடுகளின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. 160க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், கனமழையால் குவாடலூப் நதியின் நீர்மட்டம் சில நிமிடங்களில் கிடுகிடுவென உயரும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 2 மணிநேரத்தில் 33 அடி வரை நதியின் நீர் மட்டம் உயர்ந்ததாக டெக்சாஸ் அரசு கூறியுள்ளது.

    • அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
    • பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் அமைப்பு. கடந்த வருடம் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆகியவை இணைந்தன. இந்த வருடம் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பிரிக்ஸ் நாடுகளுக்கு விரைவில் 10% வரி விதிக்கப்படும்" என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

    பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவில் உள்ளதால் இந்தியாவுக்கும் டிரம்ப் 10% வரி விதிப்பாரா? என்று அச்சம் எழுந்துள்ளது.

    ×