என் மலர்tooltip icon

    உலகம்

    • ஸ்டாா்மி டேனியல்ஸ், டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
    • கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்டு டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11 கோடி) டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்டு டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.

    அமெரிக்க அதிபராக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்த நிலையில், குற்ற வழக்கில் டொனால்டு டிரம்ப்புக்கான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.

    எனினும், அதனை எதிா்த்து டிரம்ப் சாா்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை பரிசீலித்த மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் எம். மொ்சன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கில் டிரம்ப்புக்கான தண்டனை அறிவிக்கப்படுவது உறுதியாகி விட்டது. எனினும், இதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டிரம்ப் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.

    • பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    அண்டைநாடான பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் பெரும் தொகையை கடனாக பெற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை ஏற்று பாகிஸ்தானுக்கு கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.

    அதே சமயம் கடனை வழங்க பாகிஸ்தான் அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. அதில் முதன்மையானது பாகிஸ்தான் அரசு தனது செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகவும். எனவே செலவுகளை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் நிதி மந்திரி முகமது அவுரங்கசிப் "அரசு துறைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து, 1½ லட்சம் வேலைகளை ஒழிக்க அரசு முடிவு செய்திருக்கிறது" என கூறினார்.

    • காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ராணுவ வீரர்களின் இந்த செயல் லட்சக்கணக்கானோரின் விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    ஷெங்கன் பிராந்தியத்தின் எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் ருமேனியாவும், பல்கேரியாவும் கடந்த 1-ந்தேதி ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக மாறியது. இதனையடுத்து ஹங்கேரி-ருமேனியா இடையே புதிய எல்லை சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.

    அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற ஒரு நாய் அதனை சாவகாசமாக கடந்து சென்றது. இதன்மூலம் ஹங்கேரி-ருமேனியா சோதனைச்சாவடியில் முதன்முதலாவதாக நாய் நுழைந்தது.

    இதனையடுத்து அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் இரு நாட்டின் தேசியக்கொடிகளை ஏந்தியும், கை தட்டியும் அந்த நாய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ராணுவ வீரர்களின் இந்த செயல் லட்சக்கணக்கானோரின் விருப்பங்களையும் பெற்றுள்ளது.



    • பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கான தேதி குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.
    • இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    கொழும்பு:

    பிரதமர் மோடி இந்த ஆண்டிற்குள் இலங்கைக்கு வருகை தருவார் என்று இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்த தேதிகள் இன்னும் இருதரப்பில் இருந்தும் முடிவாகவில்லை. இது குறித்து கொழும்பிவில் உள்ள இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி இலங்கை பயணத்துக்கான தேதி குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

    கடந்த மாதம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்த இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, பிரதமர் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 2 இருமுறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

    அதன்பின்னர் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இலங்கை செல்ல இருக்கிறார் பிரதமர் மோடி. அனுர குமார திசநாயக விரைவில் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்தப் பயணத்திற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
    • வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    பீஜிங்:

    சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் திங்ரி முகாமில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம், திங்ரியில் அமைந்துள்ள சீன அறிவியல் அகாடமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையத்தில் நிலநடுக்கத்தால் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டதாகவும், அதுதவிர வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
    • உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த நவம்பர் 5-ந்தேதி நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மையான இடங்களில் டிரம்ப் சார்ந்த குடியரசு கட்சி கைப்பற்றியது. டிரம்ப் வருகிற 20-ந்தேதி அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கிறார்.

    இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு, உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    இதில் கிழக்கு கடற்கரையில் இருந்து சென்று பகவத் கீதை மீது பதவி பிரமாணம் எடுத்த முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஷ் சுப்ரமணியம் பெற்றுள்ளார்.

    இதனை காண்பதற்காக அவருடைய தாயார் நேரில் சென்றார். இதுபற்றி சுப்ரமணியம் கூறும்போது, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு விர்ஜீனியாவில் இருந்து உறுப்பினராக பதவி பிரமாணம் எடுத்து கொண்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி மற்றும் தெற்காசிய உறுப்பினராக என்னுடைய தாயார் பெருமை பொங்க என்னை பார்த்தார்.

    உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை தாயாரிடம் முதலில் தெரிவிக்கும்போது, நம்ப முடியாதவராக அவர் காணப்பட்டார். ஆனால், விர்ஜீனியாவின் முதல் உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். இது நிச்சயம் கடைசி அல்ல. இதற்காக நான் அதிக பெருமை கொள்கிறேன் என சுப்ரமணியம் கூறினார்.

    • பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள்
    • திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும்

    பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஓர் நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், "நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமையாகவும் தேவையற்ற செலவுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது" என்று தெரிவித்தார்.

    • இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக சீனா செல்கிறார்.
    • வரும் 14ம் தேதி தனது பயணத்தை தொடங்குகிறார் என தெரிவித்தார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசநாயக அந்நாட்டு புதிய அதிபராக பதவியேற்றார்.

    இலங்கை அதிபராக பதவியேற்ற அனுர குமார திசநாயகவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

    இதற்கிடையே, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிபர் பதவியேற்றதும் அனுர திசநாயக பயணித்த முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

    இந்நிலையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார் என அந்நாட்டு அமைச்சர் நலிந்த ஜெயதிசா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அதிபர் அனுர திசநாயக 3 நாள் பயணமாக வரும் 14ம் தேதி சீனா செல்ல உள்ளார் என தெரிவித்தார்.

    • இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது
    • மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவர் மயக்க மருந்து செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மரணதண்டனையை ஏமன் உச்சநீதிமன்றம் 2022 இல் உறுதி செய்தது.

    இதற்கிடையே கடந்த மாதம் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்ததாக கடந்த மாத இறுதியில் தகவல் வெளியானது.

     

    இந்நிலையில் ஜனாதிபதி எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

    திங்களன்று, இந்தியாவில் உள்ள ஏமன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் கொடுக்கவில்லை.

    செவிலியரின் முழு வழக்கும் நாட்டின் ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகளால் கையாளப்படுகிறது. பிரியா தற்போது தலைநகர் சனாவில் ஹவுதி போராளிகளின் அதிகாரத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக இந்திய அரசாங்கம் எல்லா உதவிகளையும் அவருக்கு வழங்கி வருகிறது. இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார்.

    பாதிக்கப்பட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். 

    • மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் அதி கனமழை பெய்துள்ளது.
    • அதிகபட்சமாக அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    பாலைவன நாடான சவுதி அரேபியாவில் பெய்த மிக கனமழையால் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது.

    புனித நகரங்களான மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டாவில் பெய்த அதி கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மிமீ மழையும் ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மிமீ மழையும் மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மிமீ மழையும் அதன் அருகிலுள்ள குபா மசூதியில் 28.4 மிமீ மழையும் பெய்துள்ளது.

    மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் மிக கனமளிக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    • திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • அங்குள்ள ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத், நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதால் அப்பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

    மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

    திபெத்தின் ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர் என தகவல் வெளியானது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இந்நிலையில், திபெத் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது எனவும், 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை
    • டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன்லாந்து என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு என்ற பெருமை கொண்டது. இது டென்மார்க்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

    22 லட்சம் (2.2 மில்லியன்) சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த தீவின் பெரும் பகுதி பனிபடர்ந்து இயற்கை எழிலுடன் காட்சியளிக்கும் வனமாக உள்ளது.

    இங்கு துலே என்ற இடத்தில் அமெரிக்காவின் விமான படை தளம் உள்ளது. ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். எனவே விமான படை தளத்துக்கு அமெரிக்கா வாடகை செலுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் 2019 இல் அவர் அதிபராக இருந்தபோதே விருப்பம் தெரிவித்தார்.

    அதற்கு டென்மார்க் கடும் கண்டனம் தெரிவித்தது. 2020 இல் நடந்த தேர்தலில் டிரம்ப் ஜோ பைடனுடன் ஆட்சியை பறிகொடுத்தார்.

    ஆனால் 2024 நவம்பரில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். எனவே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக கிரீன்லாந்து தீவை வாங்கும் பேச்சை கொளுத்தி போட்டுள்ளார்.

    கிரீன்லாந்து அமெரிக்க உரிமை, அதன் மீதான முழுமையான கட்டுப்பாடு தேவை என்று தனக்கு சொந்தமாக ட்ரூத் சமூக வலைதளத்தில் கடந்த மாதம் டிரம்ப் பதிவிட்டார்.

    இதற்கு கடும் கண்டம் தெரிவித்த டென்மார்க் பிரதமர் Múte Egede, கிரீன்லாந்து எங்களுடையது, நாங்கள் விற்பனைக்கு இல்லை, ஒருபோதும் விற்பனைக்கு வரமாட்டோம். சுதந்திரத்திற்கான நீண்ட போராட்டத்தை நாம் இழக்கக் கூடாது என்று தெரிவித்தார்

    இந்நிலையில் தற்போது டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். 

    கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த அரச கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தில் அவற்றில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன.

    புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு [raam] குறியீடு இடம்பெற்றுள்ளது.

    முன்னதாக டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் இடையே உள்ள கல்மார் யூனியன் மரபை குறிக்கும் விதமாக முந்தைய அரச கோட்கள் ஆப் ஆர்ம்ஸ் சின்னம் இருந்தத நிலையில் தற்போது அதை மாற்றி டென்மார்க் ராஜ்ஜியத்திற்குள் இருக்கும் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தனது விருப்பத்தை மன்னர் ஃபிரடெரிக் தெளிவாகக் காட்டியுள்ளார்.

    முன்னதாக அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    கனடாவை நாடு என்ற அந்தஸ்தில் இருந்து குறைத்து அமெரிக்காவின் மாகாணமாக மாற்றுவோம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இவ்வாறு வெளிநாடு அரசுகளில் டிரம்ப்பின் அதிக பிரசங்கித்தனம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ×