என் மலர்tooltip icon

    உலகம்

    • போர் நிறுத்தம் குறித்து நாங்கள் இல்லாமல் ஆலோசிப்பதா?
    • பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    கீவ்:

    நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே சவுதி அரேபியாவில் நேற்று அமெரிக்கா, ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நடந்தது.

    இதில் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், நல்லுறவை மேம்படுத்துவதற்கும் பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா-ரஷியா இடையேயான பேச்சுவார்த்தை குறித்து கூறியதாவது:-

    சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காததால் அதில் எடுக்கப்படும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு பேச்சு வார்த்தையும் நியாயமானதாக இருக்க வேண்டும்.

    பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்த துருக்கி உட்பட ஐரோப்பிய நாடுகள் இடம்பெற வேண்டும். எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

    உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உக்ரைன் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. சவுதி அரேபியாவுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த பயணத்தை மார்ச் 10-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் ரஷிய அதிபர் புதினை இந்த மாதத்தில் சந்திப்பேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
    • இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்?

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்டவற்றில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இதற்கிடையே இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.182 கோடி) நிதியை நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை அறிவித்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிதி உதவியை நிறுத்தியது குறித்து டிரம்ப் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும்? அவர்களிடம் நிறைய பணம் இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிக வரி விகிதங்களைக் கொண்ட இந்தியாவிற்கு அத்தகைய நிதி உதவி தேவையில்லை.

    எங்களைப் பொறுத்த வரை உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் நாங்கள் அங்கு தொழில் செய்ய முடியாது. இந்தியா மற்றும் பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    இந்தியர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அவர்களுக்கு ஏன் நாம் பணம் கொடுக்க வேண்டும்? அங்கு வாக்குப்பதிவுக்கு 21 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அமெரிக்கர்களின் வரி பணத்தை செலவழிப்பதை விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.


    சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே ஆட்டோ மொபைல், செமிகண்டக்டர், மருந்து இறக்குமதிகளுக்கு சுமார் 25 சதவீத வரி விதிக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம்.
    • நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாங்ஐகுன் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார்.

    மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.

    இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பியோவோ கூறுகையில், இந்த கலசம் என்னுடையது. நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம். நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.

    • விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தலைநகர் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையம் அருகே அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் விமானம் வெடித்து சிதறி 67 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் நிர்வாக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் சங்கம் கூறுகையில், அரசின் இந்த நடவடிக்கையால் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் விபத்துகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • வதந்திகளை பரப்ப வேண்டாம் என பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியதல்.
    • உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது.

    இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர்.

    ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், இறந்தவர்களில் "பிபாஸ் குடும்பம்" - இரண்டு இளம் சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயார் அடங்கும். இஸ்ரேல் அவர்களின் மரணங்களை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஹமாஸின் அறிவிப்புக்குப் பிறகு "புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் வதந்திகளை" பரப்ப வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் பொதுமக்களை வலியுறுத்தியது.

    போரின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறிய ஷிரி பிபாஸ் மற்றும் அவரது மகன்கள் கிஃபிர் மற்றும் ஏரியல் குறித்து இஸ்ரேல் நீண்ட காலமாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கணவரும் தந்தையுமான யார்டன் பிபாஸ் தனித்தனியாக கடத்தப்பட்டு இந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிக்கப்பட உள்ள ஆறு பணயக்கைதிகள் எலியா கோஹன், தல் ஷோஹாம், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் மற்றும் அவேரா மெங்கிஸ்டு என்று பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

    இந்த வாரம் ஆறு பேரின் விடுதலையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை துரிதப்படுத்தும். சனிக்கிழமை ஹமாஸ் உயிருள்ள மூன்று பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து மேலும் மூன்று பேரை விடுவிக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் படி, முதற்கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அது கூறியது.

    பணயக்கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலர் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

    • சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது.
    • இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.

    சீனாவில் உள்ள சுற்றுலாதளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.

    சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது. இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.

    ஆனால், அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

    இதனையடுத்து அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.

    • எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
    • அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் ஆவணமில்லாமல் தங்கியிருக்கும் பிற நாட்டவர்களை வெளியேற்றும் பணியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். நாடு கடத்தல் உத்தரவை ஏற்க அடிபணியாத நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுபவர்கள் எந்த நாட்டவராக இருந்தாலும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடோர், பனாமா, குவாத்தமாலா, ஆகிய மத்திய அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து மற்றொரு மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா, நாடு கடத்தப்படும் எந்த நாட்டை சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவைகளை நாடு கடத்துவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க கோஸ்டாரிகா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

    இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களின் முதல் குழு புதன்கிழமை கோஸ்டாரிகாவில் ஒரு வணிக விமானத்தில் வந்து சேரும். அங்கு அவர்கள் பனாமா எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    பின்னர் புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம். இந்த செயல்முறைக்கான செலவுகளை சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) மேற்பார்வையின் கீழ் அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது
    • ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் இந்த சண்டை முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. போர் நிறுத்தத்தை ஏற்படுத்த டிரம்ப் தலைமையான அமெரிக்க அரசு முயற்சித்து வருகிறது.

    அதன்படி ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோரும், டொனால்டு டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோரும் இன்று சவுதியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் இதில் உக்ரைன் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவில்லை. எனவே உக்ரைன் தனது பங்கேற்பு இல்லாமல் செய்யப்படும் எந்த அமைதி ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்காது என்று ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

    இந்நிலையில் தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் விளாடிமிர் புடின் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    ரஷிய அதிபர் மாளிகையான கிரம்லின் செய்தித்தொடர்பாளர் இன்று டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகங்களுக்கு இன்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, தேவைப்பட்டால் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதினே கூறினார். இருப்பினும் ஜெலன்ஸ்கி வகிக்கும் அதிபர் பதவியின் சட்டப்பூர்வமான தன்மை கேள்விக்குறிதான்.

    ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இருப்பினும், உக்ரைன் சட்டத்தின்படி, ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ரஷியா அவரை ஒரு சட்டப்பூர்வமான ஜனாதிபதியாகக் கருதவில்லை.

    உக்ரைன் நேட்டோவின் அங்கமாக மாறுவதைத் தொடர்ந்து எதிர்ப்போம். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பாக ரஷியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது அந்த நாட்டின் இறையாண்மை உரிமை. யாரும் மற்றொரு நாட்டிற்கு ஆணையிட முடியாது. நாங்கள் அவ்வாறு செய்யத் திட்டமிடவில்லை. ஆனால் பாதுகாப்பு பிரச்சனைகள் மற்றும் ராணுவ கூட்டணி என்று வரும்போது நிலைமை மாறலாம் என்று தெரிவித்தார். 

    • 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார்.
    • கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.

    ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

    இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.

    இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
    • கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம்

    அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.

    இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன.

    அரசின் வீண் செலவை குறைக்க ஆயிரக்கணக்காக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், மக்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துதல் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் ஆலோசனையில் பேரில் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவைடிகைகளை மேற்கொண்டு வருகிறதார்.

    மேலும் பிறப்பால் குடியுரிமை பெறுவதை ரத்து செய்தது, திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது.

    இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர். ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.

    50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.

    கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.    

    டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளி எலான் மஸ்க் ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டில் கூட்டாட்சி அமைப்பையும் அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர்.

    டிரம்பை அகற்று, மஸ்க்கை அகற்று போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். டிரம்பை ஒரு சர்வாதிகாரி என்றும் கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    • லாரி டிரைவர் பலி, போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
    • நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள குர்ரம் மாவட்டத்தில் இரு பிரிவு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. வன்முறை பாதிக்கப்பட்ட குர்ரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தால் பகுதியில் இருந்து குர்ரமுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அணிவகுத்து சென்றன. அப்போது ஓச்சிட் என்ற பகுதியில் மர்ம நபர்கள், லாரிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஒரு லாரி டிரைவர் பலியானார். ஒரு போலீஸ்காரர் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

    இதேபோல் பாகன், மண்டோரி, டாட் கமர் மற்றும் சார் கேல் உள்பட பல இடங்களிலும் தாக்குதல் நடந்தது. இதையடுத்து நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகள் வேறு பாதையில் திரும்பி விடப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதல்-மந்திரி லி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியைக் குலைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
    • தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிப்பு.

    கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு (வயது 88) உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 14-ந்தேதி இத்தாலியின் ரோமில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்றுப்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் போப் பிரான்சிக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுவதால் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிசுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சுவாசக் குழாயில் பாலிமைக்ரோபியல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டு இருக்கிறது என உறுதியாகி உள்ளது.

    இதையடுத்து சுவாசக்குழாய் தொற்றுக்கான சிகிச்சையை டாக்டர்கள் மாற்றியுள்ளனர், தேவைப்படும் வரை போப் பிரான்சிஸ் ஆஸ்பத்திரியில் இருப்பார். அவருக்கு காய்ச்சல் இல்லை. உடல்நிலை சீராக உள்ளது. அவர் சில வேலைகளைச் செய்தார். பத்திரிகைகளைப் படித்தார்" என்று தெரிவித்துள்ளது.

    ×