search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலிபான்கள்
    X
    தலிபான்கள்

    சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் தூதரகத்தை திறக்கும் தலிபான்கள்

    தலிபான்களின் அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரும் இடம் பெற வேண்டும் என்றும் பெண் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.

    புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதில் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    தலிபான்களின் அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரும் இடம் பெற வேண்டும் என்றும் பெண் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு தலிபான்கள் செவி சாய்க்காததால் அவர்களது ஆட்சியை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க மறுத்து வருகின்றன.

    அதே வேளையில் தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மற்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் நாட்டு தூதரகத்தை திறக்க தலிபான்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக தலிபான்கள் தங்களது தூதரை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி உள்ளனர்.

    ஆனால் அந்த அதிகாரிக்கு முறையான தூதர் பதவி இருக்காது என்றும் தூரக செயலாளர் அல்லது பொறுப்பாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “தலிபான்களின் சமீபத்திய நியமனம் தூதரக செயல்பாடுகளை உறுதிப்படுத்துவதற்காகும்.

    பாகிஸ்தானில் ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் உள்ளனர். மேலும் விசா பிரச்சினைகளும் உள்ளன” என்று கூறி உள்ளது. தலிபான்களின் தூதராக முகமது சோயிப் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் குவெட்டா மற்றும் பெஷாவரில் உள்ள தூதரகங்களை இயக்கவும் இரண்டு அதிகாரிகளை தலிபான்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ளனர்.

    பெரும்பாலான நாடுகள் தலிபான்களுக்கு அங்கீகாரம் வழங்காததால் ஆப்கானிஸ்தான் தூதரகங்கள் முந்தைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தூதரால் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×