search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கான்
    X
    இம்ரான் கான்

    அமெரிக்காவை அனுமதித்தால் பயங்கரவாதிகள் எங்களை குறிவைப்பார்கள் -இம்ரான் கான்

    பாகிஸ்தான் பிரதேசத்தின் எந்த ஒரு தளத்தை பயன்படுத்தவோ, இங்கிருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கையையோ நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என இம்ரான்கான் கூறினார்.
    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியபின்னர், பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்களை பயன்படுத்தி, அங்கிருந்தபடி எல்லை தாண்டிச் சென்று தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி கேட்டதாக தகவல் வெளியானது. 

    இது தொடர்பாக பாகிஸ்தானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதாக சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும், ஒப்பந்தம் ஏற்பட சாத்தியக்கூறு இருப்பதாக சில அதிகாரிகள் கூறியதாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது. 

    ஆனால், ராணுவ தளங்களை வழங்குவதற்கு சாத்தியம் இல்லை என 
    பாகிஸ்தான்
     திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தெளிவுபடுத்தினார். பாகிஸ்தான் பிரதேசத்தின் எந்த ஒரு தளத்தை பயன்படுத்தவோ, இங்கிருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கையையோ நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என இம்ரான் கான் கூறினார்.

    ஜோ பைடன்

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன், ஆப்கானிஸ்தான் உயர் மட்ட தலைவர்கள் இந்த வார இறுதியில் சந்தித்து பேச உள்ள நிலையில், வாஷிங்டன் போஸ்ட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேட்டி வெளியாகி உள்ளது. அதில், பாகிஸ்தான் தளங்களை அமெரிக்காவுக்கு வழங்காததற்கான காரணத்தை விளக்கமாக கூறி உள்ளார்.

    “போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் குண்டு வீசவும், ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் தொடங்கவும் ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டால், பயங்கரவாதிகள் பாகிஸ்தானை மீண்டும் பழிவாங்க இலக்கு வைப்பார்கள். நாங்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்துவிட்டோம். 

    மிக சக்திவாய்ந்த ராணுவ பலத்தைக் கொண்ட அமெரிக்கா, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து போரை வெல்ல முடியாவிட்டால், எங்கள் நாட்டில் உள்ள தளங்களில் இருந்து அதை எவ்வாறு செய்யும்?’ என கேள்வி எழுப்பினார் இம்ரான் கான்.
    Next Story
    ×