search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இத்தாலியிடம் இருந்து ரூ.620 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் முடக்கம் - துருக்கி அறிவிப்பு

    இத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.620 கோடி) மதிப்பில் பயிற்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை முடக்கி வைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

    அங்காரா:

    ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகிய இருவரும் அண்மையில் துருக்கி நாட்டுக்கு சென்றிருந்தனர்.

    அங்கு இவர்கள் இருவரும் தலைநகர் அங்காராவில் அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகனை சந்தித்தனர்.

    அப்போது சந்திப்பு நடந்த இடத்தில் 3 நாற்காலிகளுக்கு பதிலாக 2 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.‌ இதனால் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனியாக நின்றார்.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதிபர் தாயீப் எர்டோகன் வேண்டுமென்றே ஐரோப்பிய தலைவர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனை சர்வாதிகாரி என்றும் அவரது நடத்தை பொருத்தமற்றது என்றும் சாடினார்.‌ இது இரு நாடுகளின் தூதரக உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது‌. இத்தாலி பிரதமர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என துருக்கி அதிகாரிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.‌

    இந்த நிலையில் இந்த விவகாரத்தின் எதிரொலியாக இத்தாலியிடம் இருந்து 83 மில்லியன் அமெரிக்க டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.620 கோடி) மதிப்பில் பயிற்சி ஹெலிகாப்டர்களை வாங்கும் ஒப்பந்தத்தை முடக்கி வைப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. துருக்கியின் இந்த அதிரடி நடவடிக்கை இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இது குறித்து இத்தாலி உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×