search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    இஸ்ரேல் - அமீரகம் இடையே பயணிகள் விமான சேவை - வாரத்துக்கு 28 விமானங்களை இயக்க முடிவு

    இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவிவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கும், அபுதாபியிலிருந்து டெல் அவிவ் நகருக்கும் வாரத்துக்கு 28 பயணிகள் விமானங்களை இயக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவுகளை இயல்பாக்கும் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு மாதம் கையெழுத்தானது.

    இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3-வது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆனது.

    இதையடுத்து இரு நாடுகளும் தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் நட்பு மேலும் வலுப்பெறும் விதமாக விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது.

    அந்த வகையில் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் விமான சேவையை தொடங்குவது தொடர்பான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.

    அதன்படி இஸ்ரேலின் முக்கிய தலைநகரம் டெல் அவிவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கும், அபுதாபியிலிருந்து டெல் அவிவ் நகருக்கும் வாரத்துக்கு 28 பயணிகள் விமானங்களை இயக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் வாரந்தோறும் இரு நாடுகளுக்கிடையில் 10 சரக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் இரு நாடுகளுக்கு இடையிலான பயணிகள் விமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேற்கூறிய தகவல்களை இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×