search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஈரானில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா - அதிபர் ரவுகானி அதிர்ச்சி தகவல்

    ஈரானில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.
    தெஹ்ரான்:

    அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் பொருளாதாரத்தடைகளை சந்தித்து வரும் ஈரானில் மருத்துவ உள்கட்டமைப்பு போதிய வளர்ச்சி அடையவில்லை.

    தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் அந்நாட்டு வைரசை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 

    குறிப்பாக ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. 
    குறைவான எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனைகளே இதற்கு காரணம்.

    இந்நிலையில், 8 கோடி மக்கள் தொகையை கொண்ட ஈரானில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

    ஹசன் ரவுகானி

    இது குறித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய அதிபர் ரவுகானி,’ நமது கணக்கீட்டின் படி தற்போது வரை
    2 கோடியே 50 லட்சம் ஈரானியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வரும் மாதங்களில் இன்னும் கூடுதலாக 3 முதல் 3 1-2 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தியை நாம் இன்னும் அடையவில்லை. கொரோனா சமூக பரவலாக மாற காரணமான சங்கிலித்தொடரை நாம் இணைந்து முறியடிக்க வேண்டும். நமக்கு வேறு வழியில்லை.

    ஈரானில் சராசரியாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1,000 பேரில் 500 பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்’ என்றார்.

    அதிபர் எந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்தார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபரின் கருத்துக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.

    ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டில் இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், வைரஸ் தாக்குதலுக்கு ஈரானில் இதுவரை
    13 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×