search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டொனால்டு டிரம்ப்
    X
    டொனால்டு டிரம்ப்

    இந்தியாவிலும், சீனாவிலும் டெஸ்ட்-களை அதிகரித்தால் கொரோனா எண்ணிக்கையும் அதிகரிக்கும்: டிரம்ப் சொல்கிறார்

    இந்தியாவிலும், சீனாவிலும் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
    வாஷிங்டன், ஜூன்.7-

    கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியபோதும், அது அமெரிக்க நாட்டில்தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலக அளவில் நேற்று மதிய நிலவரப்படி 67 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 19 லட்சம் ஆகும். உலகமெங்கும் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கர்கள் ஆவர். அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவில் 40 லட்சமாக இருக்கிறது.

    இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும், சீனாவில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா நிலவரம் பற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மைனே மாகாணத்தில் உள்ள பியூரிட்டன் தொழிற்சாலையை பார்வையிட்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்காவில் 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 40 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனை நடந்துள்ளது. தென்கொரியாவிலோ 30 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடந்து இருக்கிறது.

    நாம் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை செய்திருக்கிறோம். எவ்வளவுக்கு எவ்வளவு அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை செய்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் அதிகமாக சோதிப்பதால் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கு ஆளானோர் இங்கு பதிவாகிறார்கள்.

    இந்தியாவிலும் சரி, சீனாவிலும் சரி, பிற இடங்களிலும் சரி அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தால், அங்கேயெல்லாம் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்கிறேன். அமெரிக்க பொருளாதாரம் மீண்டு வருகிறது. அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்போது மாதாந்திர வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகும். அடுத்த ஆண்டு அமெரிக்காவுக்கு மிகச்சிறப்பானதொரு நிகழ்வை அடையப்போகிறோம். வரப்போகிற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக இருக்கப்போகிறது. ஏனென்றால், நீங்கள் ஒரு தவறான ஜனாதிபதியை தேர்ந்தெடுத்தால், உங்கள் வரிகள் உயர்த்தப்படும். உங்களின் எல்லைகள் திறக்கப்படும். இதனால் நம் நாட்டுக்குள் பிற நாட்டினர் வந்து குவிவார்கள்.

    அமெரிக்காவில் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் ஊழியர்கள்

    கடந்து 3 ஆண்டுகளில் நான் அமெரிக்க பொருளாதாரத்தை வலுவானதாக கட்டி எழுப்பி உள்ளேன். ஆனால் அது கொரோனா வைரஸ் தொற்றால் மோசமான நிலையை அடைந்துளளது. இந்த தொற்றுக்கு எதிரான போராட்டம், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் தேசத்தின் மிகப்பெரியதொரு போராட்டம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை தோற்கடிக்க அமெரிக்க நிர்வாகம் மற்றும் அமெரிக்க தொழில்துறையின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி உள்ளோம்.

    நிச்சயமாக கொரோனா ஒரு எதிரிதான். இது சீனாவில் இருந்துதான் வந்துள்ளது. இதை சீனாவில் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஆனால் இதை அவர்கள் செய்யவில்லை.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.
    Next Story
    ×