search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் தொற்றில் மக்கள்
    X
    கொரோனா வைரஸ் தொற்றில் மக்கள்

    கொரோனா வைரசால் வந்த வினை - இந்தியாவில் 50 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பிரிந்து கிடக்கும் கொடுமை

    கொரோனா வைரசால் 50 லட்சம் பேர் இந்தியாவில் இடம் பெயர்ந்து பிரிந்து கிடக்கும் கொடுமை நிலவுகிறது.
    நியூயார்க்:


    கொரோனா வைரஸ் தொற்று என்ற மனித குலத்தின் மாபெரும் அவலம், இந்திய மக்களை இடம் பெயர்ந்து பிரிந்து கிடக்க வைத்துள்ளது.

    இதுவரை சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு கொடுமை இந்திய மக்களுக்கு நேர்ந்தது இல்லை.

    ஆனால் கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார வைரஸ் தொற்று, சுமார் 50 லட்சம் மக்களை இப்படி உள்நாட்டுக்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர வைத்து உள்ளது.

    இந்த தகவலை ஐ.நா. சபையின் புள்ளி விவரம் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

    இந்தியா உள்பட ஏறத்தாழ 200 உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலக மக்கள் பலரும் பல்வேறு நாடுகளுக்குள்ளும், சொந்த நாட்டுக்குள்ளும் பிரிந்து கிடக்கின்றனர். இது ஒரு இயற்கைப் பேரழிவு போல ஆகி விட்டது. 2019-ம் ஆண்டில் கொரோனா வைரஸ், மோதல்கள், வன்முறைகள் மக்களை எப்படி இடம் பெயர வைத்துள்ளன என்பது குறித்து ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு ஆராய்ந்து, ‘லாஸ்ட் அட் ஹோம்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை அளித்துள்ளது.

    இடம் பெயர்ந்த மனித குலம்


    இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2019-ம் ஆண்டில் மாத்திரமே உலகமெங்கும் சுமார் 3 கோடியே 30 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் 2½ கோடிப்பேர் கொரோனா உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இடம் பெயர்ந்துள்ளனர். 85 லட்சம் பேர் வன்முறை மற்றும் மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

    * இவற்றில் குழந்தைகளையும் தொடர்பு படுத்திய இடப்பெயர்வுகள் என்று பார்த்தால், அது 1 கோடியே 20 லட்சம் இடப்பெயர்வுகள் ஆகும். இவர்களில் 38 லட்சம் பேர் வன்முறை, மோதல்களால் இடப்பெயர்வுக்கு ஆளாகி உள்ளனர். 82 லட்சம் பேர் வானிலை தொடர்பான இயற்கை பேரழிவுகளால் இடப்பெயர்வுக்கு ஆட்பட்டுள்ளனர்.

    * 2019-ல் கிழக்கு ஆசியாவில் புதிதாக 1 கோடிப்பேர் இடம் பெயர்ந்துள்ளனர். பசிபிக் நாடுகளில் இது 39 சதவீதமாகவும், தெற்கு ஆசியாவில் 95 லட்சமாகவும் உள்ளது.

    * இந்தியா, பிலிப்பைன்ஸ், வங்காளதேசம், சீனா ஆகிய அனைத்து நாடுகளும் இயற்கை பேரழிவால் இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளன. இது 69 சதவீதம் ஆகும். இது உலகளாவிய பேரழிவுகளான வெள்ளம், புயல் உள்ளிட்டவற்றால் ஏற்பட்டுள்ளன.

    * 82 லட்சம் பேரழிவுடன் தொடர்புடைய இடப்பெயர்வுகள் குழந்தைகளுடனானது.

    * இந்தியாவில், 2019-ம் ஆண்டில் புதிதாக 50 லட்சத்து 37 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். இந்த இடப்பெயர்வு உள்நாட்டுக்குள் நடந்துள்ளது. இதில் 50 லட்சத்து 18 ஆயிரம் பேர் இயற்கை பேரழிவுகளால் (குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று) இடம் பெயர்ந்துள்ளனர். 19 ஆயிரம் பேர் மோதல்களாலும், வன்முறைகளாலும் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

    * பிலிப்பைன்சில் புதிதாக 42¾ லட்சம் பேர் புதிதாக இடம் பெயர்ந்துள்ளனர். வங்காளதேசத்தில் இந்த எண்ணிக்கை 40 லட்சமாகவும், சீனாவிலும் 40 லட்சமாகவும் உள்ளது.

    * குழந்தைகள் அதிகளவில் இடம் பெயர்ந்திருப்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகமாக உள்ளது. சுமார் 1 கோடியே 90 லட்சம் குழந்தைகள் இப்படி தங்கள் சொந்த நாடுகளுக்குள் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.

    * 2019-ம் ஆண்டின் இறுதியில் 4 கோடியே 60 லட்சம் பேர் மோதல், வன்முறைகளால் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். குறிப்பாக இதுவரை இல்லாதவகையில் மோதல், வன்முறையால் இந்த இடம் பெயர்வு நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா வைரசின் உலகளாவிய பரவலை குறிப்பிட வேண்டும்.

    * தங்கள் வீடுகளில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்ட குழந்தைகள், உலகில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

    * கொரோனா வைரஸ் தொற்று இன்னும் பலவிதமான பாதிப்புகளை கொண்டு வந்துள்ளது. முகாம்கள், முறைசாரா குடியேற்றங்களில் கூட்டம் அலைமோதுகிற நிலை ஏற்படுகிறது. சமூக இடைவெளியை பராமரிப்பது சாத்தியமற்றுப்போகிறது. கொரோனா வைரஸ் தொற்று போன்ற புதிய பிரச்சினைகள் ஏற்படுகிறபோது அவற்றினால் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    * மோதல்களால் உள்நாட்டில் அதிகளவில் இடம் பெயர்ந்த குழந்தைகள், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா, சகாரா ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த பகுதியில் 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் இடம் பெயர்தலுக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக சிரியா, ஏமன், ஈராக் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள். சகாரா ஆப்பிரிக்கா பகுதியில் 10-ல் 4 பேர் இடப்பெயர்வுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் குழந்தைகள் ஆவர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×