search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு
    X
    அமெரிக்க மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு

    கொரோனா எதிரொலி : அமெரிக்க மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு - சீனா அறிவிப்பு

    கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு சீனா வரி விலக்கு அளித்துள்ளது.
    பீஜிங்:

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடக்கிறது.

    சீன பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பரஸ்பரம் பல்லாயிரம் கோடி டாலர் வரிகளை கூடுதலாக விதித்தன. அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும்கூட இருதரப்பு வர்த்தக பிரதிநிதிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் பலனாக கடந்த ஆண்டு இறுதியில் இருநாடுகளுக்கும் இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து, சீனா இறக்குமதி பொருட்கள் மீது விதிப்பதாக இருந்த கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது.

    இதற்கு பிரதிபலனாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பை ரத்து செய்தது. ‘எனினும் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

    முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை கடந்த மாதமே தொடங்க இருநாடுகளும் முடிவு செய்திருந்தன.

    ஆனால் அதற்குள் சீனாவில் கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் தாக்கியது. இந்த கொடிய நோயால் அங்கு இதுவரை 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் 72 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் நோயால் சீனா பொருளாதார ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கொரோ னா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்காவில் இருந்து இறுக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென சீன நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

    நீண்ட ஆலோசனைக்கு பிறகு சீன அரசு இதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் மருத்துவ உபகரணங்களுக்கு சீனா வரி விலக்கு அறிவித்துள்ளது.

    இந்த வரி விலக்கு வருகிற 2-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், குறிப்பிட்ட காலம் வரை அமலில் இருக்கும் என்றும் சீன வரிவிதிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்கும் கருவிகள், ரத்தமாற்றம் செய்யும் கருவிகள் மற்றும் ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் ஆகியவை உள்பட மொத்தம் 696 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    மருத்துவ உபகரணங்கள் மட்டுமின்றி பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சோயாபீன்ஸ், கோதுமை, சோளம் ஆகிய உணவு பொருட்களும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு, டீசல் மற்றும் பிற எரிபொருள் எண்ணெய்களும் வரி விலக்கு பட்டியலில் அடங்கும் என சீன வரி விதிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×