search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: காவல்துறை கூடுதல் ஐ.ஜி. உடல் சிதறி பலி
    X

    பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: காவல்துறை கூடுதல் ஐ.ஜி. உடல் சிதறி பலி

    பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் காவல்துறை கூடுதல் ஐ.ஜி. உயிரிழந்தார்.
    பெஷாவர்:

    பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் இன்று காவல்துறை தலைமையிடத்து கூடுதல் ஐ.ஜி. அஷ்ரப் நூர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவரது காரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் இருந்தார். அவரது காரைத் தொடர்ந்து மற்றொரு காரில் பாதுகாவலர்கள் சென்றனர்.

    அப்போது போலீஸ் வாகனங்களை முந்திக்கொண்டு சீறிப்பாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள், கூடுதல் ஐஜி சென்ற காரின் மீது மோதியது. அப்போது கார் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. உடன் சென்ற போலீஸ் வாகனமும் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்து வெடித்துச் சிதறிய பாகங்கள், சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீதும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. சாலையோர மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



    இந்த சம்பவத்தில் காருக்குள் இருந்த கூடுதல் ஐ.ஜி. அஷ்ரப் நூர் மற்றும் அவரது பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 போலீசார் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இது போலீஸ் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் என நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த  தாக்குதலுக்கு பிரதமர் அப்பாஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×