என் மலர்
உலகம்
- கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
- எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுத்தது. ஈரான் விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமேனி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசியது. இதில் அத்தளங்கள் முழுமையாக அழிந்ததாக டிரம்ப் அறிவித்தார்.
தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை ஈரான் தாக்கியது. இதைதொடர்ந்து பின்வாங்கிய டிரம்ப், ஈரான்- இஸ்ரேல் இடையே 12 நாள் போர் முடிவடைந்ததாக அறிவித்தார். இதை இரு நாடுகளும் தாமதமாக ஏற்றன. மோதல் குறித்து பேசிய காமேனி, ஈரான் இந்த போரில் வெற்றி பெற்றதாகவும், அமெரிக்காவின் கன்னத்தில் ஈரான் அறைந்துவிட்டதாகவும் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
இந்நிலையில் இதுகுறித்து நதனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், " போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டின் "உச்ச தலைவர்" என்று அழைக்கப்படும் ஆயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேலுடனான போரை வென்றதாக இவ்வளவு வெளிப்படையாகவும் முட்டாள்தனமாகவும் ஏன் கூறுகிறார். அவரது கூற்று பொய் என்று அவருக்குத் தெரியும். மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதராக, அவர் பொய் சொல்லக்கூடாது.
அவரது நாடு அழிக்கப்பட்டது, அவரது மூன்று தீய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன, மேலும் அவர் எங்கு அடைக்கலம் புகுந்தார் என்பது எனக்குத் தெரியும், மேலும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது உயிரை முடிவுக்குக் கொண்டுவர அனுமதிக்கவில்லை.
நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன், அதற்காக அவர் "நன்றி, அதிபர் டிரம்ப்!" என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையில், போரின் இறுதிச் கட்டத்தில் , இஸ்ரேல் விமானங்கள் நேரடியாக தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்தன, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும், மேலும் பல ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
இதுவரை நடந்த போரின் மிகப்பெரிய தாக்குதலாக இது இருந்திருக்கும். ஆனால் அவ்விமானகளை மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்ப நான் கோரினேன். கடந்த சில நாட்களாக, ஈரான் பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் பிற விஷயங்களைப் பற்றி நான் ஆலோசித்து செய்து கொண்டிருந்தேன். இது ஈரானுக்கு முழுமையான, விரைவான மீட்சியைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்திருக்கும். ஆனால் வெறுப்பு அறிக்கையால் நான் உடனடியாக நிவாரணம் மற்றும் பலவற்றைக் கைவிட்டேன்.
ஈரான் உலக ஒழுங்கு ஓட்டத்தில் மீண்டும் இறங்க வேண்டும், இல்லையெனில் விஷயங்கள் அவர்களுக்கு மோசமாகிவிடும். அவர்கள் எப்போதும் மிகவும் கோபமாகவும், விரோதமாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அது அவர்களுக்கு என்ன கொடுத்தது என்பதைப் பாருங்கள் - எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அது இன்னும் மோசமாகிவிடும்! வினிகரை விட தேன் மூலம் நீங்கள் அதிகம் பெற முடியும் என்பதை ஈரானின் தலைமை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது.
- செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது
இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
"சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது" என்று ஆசிப் கூறினார்.
- இதில் 10 பேர் உதவி விநியோக மையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள்
- இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை சுமார் 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது.
மேலும் மத்திய காசா நகரமான டெய்ர் அல்-பாலாவில் உள்ள உணவு விநியோக மையத்தில் இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெய்ர் அல்-பாலாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து கோதுமை மாவு மூட்டைகளைப் பெற வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் அரங்கேறி உள்ளது.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 56,331 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 132,632 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காசாவில் மனிதாபிமான உதவி கோரி வந்த பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள் உத்தரவிட்டதாக வெளியான செய்தியை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மறுத்துள்ளார்.
- ஸ்வாட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகினர்.
- சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதி கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது.
எனவே அண்டை மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சுற்றுலாவுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் சுற்றுலா பயணிகள் பலர் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததைவிட மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்வாட் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 18 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். விசாரணையில், பலியான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்களது மறைவுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வெள்ளப் பெருக்கில் மாயமானவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சுங்கத்துறைக்கு சொந்தமான நாய் ஹமேத் என்பவரின் உடைமையைப் பார்த்து குரைத்தது.
- இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, சுங்கத்துறைக்குச் சொந்தமான நாய் எகிப்தில் இருந்து சென்ற ஹமேத் என்ற நபரின் உடைமையைப் பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹமேத் அந்த நாயை எட்டி உதைத்தார்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது உடைமையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் சுமார் 45 கிலோ தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் இருந்தன. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஹமேத்தை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நாயின் சிகிச்சைக்கான செலவு சுமார் ரூ.70 ஆயிரத்தைச் செலுத்த உத்தரவிட்டது.
- கனடா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
- இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.
வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.
- பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.
- விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.
தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
2017-ல் நடந்த இந்த கொடூர சம்பவத்தை விசாரித்த நீதிமன்றம், 2020-ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்வார்.
இறந்தவர்களில் எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பின்னரே அவர் அவர்களைக் கொன்றதாக விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் காதலன் இதைப் பற்றி அறிந்ததும், அவரையும் கொன்று, ஆதாரங்களை அழிக்க முயன்றார்.
2017ல் போலீசார் ஷிரைஷியின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது இந்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
வீட்டை சோதனை செய்தபோது, குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது உடல்கள் துண்டிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். விசாரணையின் போது, ஷிரைஷி தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.
ஜப்பானில் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக தற்கொலை விகிதங்களில் ஜப்பான் ஒன்று. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துள்ளது.
- ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
- 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி தீவிரம்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் இழுத்துச் செல்லப்பட்டனர். மீட்புப் படையினர் ஐந்து வெவ்வேறு இடங்களில் அவர்களை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 18 பேரில் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது. ஸ்வாட் ஆறு, பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வற்றாத நதிகளில் ஒன்றாகும்.
- காமேனியை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார்.
- ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.
ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இஸ்ரேலின் 'சேனல் 13' உடனான சமீபத்திய நேர்காணலில் பேசிய காட்ஸ், "நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடிக்குச் சென்றார். ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதில் புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்" என்று காட்ஸ் கூறினார்.
மேலும் காமேனியினயை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார். காமேனியை கொல்லும் யோசனையை அமெரிக்கா வீட்டோ செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.
கூடுதலாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
- மைக்ரோசாஃப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட்டின் நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்கங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 69 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆக்டிவிஷன் பிலிசார்ட் கையகப்படுத்தலுக்குப் பிறகு லாபத்தை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் எக்ஸ்பாக்ஸ் பிரிவு மீது விழுந்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் மற்றும் தி வெர்ஜ் அறிக்கைகளின்படி, எக்ஸ்பாக்ஸ் பிரிவில் உள்ள மேலாளர்கள் கணிசமான பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.
டியூக் நியூகெமின் இணை நிறுவனர் மற்றும் அனுபவம் வாய்ந்த கேமிங் துறை நிபுணரான ஜார்ஜ் புரூசார்ட், 1000 முதல் 2000 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்றும், இது எக்ஸ்பாக்ஸ் பணியாளர்களில் சுமார் 10% பேரைப் பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சில ஸ்டுடியோக்கள் முற்றிலுமாக மூடப்படலாம் என்றும் கூறப்படுவதால் டெவலப்பர்கள் மத்தியில் மிகுந்த கவலை எழுந்துள்ளது.
இது கடந்த 18 மாதங்களில் எக்ஸ்பாக்ஸ் பிரிவில் நடைபெறும் நான்காவது பெரிய பணிநீக்க நடவடிக்கையாகும்.
முன்னதாக மே மாதம், மைக்ரோசாப்ட் தனது கேமிங் பிரிவு மற்றும் பிற வணிகங்களில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த மாத தொடக்கத்திலும் 300க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.
ஈரானுடன் நடந்த 12 நாள் போரில் இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் அணுஆயு தங்களை தயாரி ப்பதாகவும், அது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப்பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங் கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக இஸ்ரேலின் வான் கவச பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்நிலையில், ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை. ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் 3 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடுத்தால் சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் நிதியமைச்சர் பெசாலல் ஸ்மோட்ரிச் கூறுகையில், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு 12 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
- டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
- 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே நோக்கமாகும்.
இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சமீபத்தில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானதை நினைவு கூர்ந்து, அடுத்த பெரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் இருக்கலாம் என்று கூறினார்.
"எல்லோரும் எங்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். நேற்று சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களைச் செய்கிறோம்.
விரைவில் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் வரப்போகிறது. அது மிகப் பெரியது. நாங்கள் இந்திய சந்தைகளைத் திறக்கிறோம்" என்று டிரம்ப் கூறினார்.
சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
இதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அதிகாரிகளும், வர்த்தக அமைச்சகத்தின் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை தற்போதைய 190 பில்லியன் டாலர்களிலிருந்து 500 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பதே இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது.






