என் மலர்
உலகம்

ஆற்றில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி: பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
- ஸ்வாட் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியாகினர்.
- சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஸ்வாட் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதி கோடை வாசஸ்தலமாகத் திகழ்கிறது.
எனவே அண்டை மாகாணங்களைச் சேர்ந்தவர்களும் அங்கு சுற்றுலாவுக்கு படையெடுத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் அங்குள்ள ஸ்வாட் ஆற்றில் சுற்றுலா பயணிகள் பலர் குளித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக அங்கு தொடர் மழை பெய்து வருகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் மழை குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததைவிட மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஸ்வாட் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. இதில் 18 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். விசாரணையில், பலியான அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சுற்றுலா சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவர்களது மறைவுக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வெள்ளப் பெருக்கில் மாயமானவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






