என் மலர்
தலைப்புச்செய்திகள்
- மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது.
- இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் நிறுவனத்தின் முதல் ஓபன் இயர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) நத்திங் இயர் (ஓபன்) அறிமுகம் செய்யப்பட்டது.
இந்வ மாடல் காப்புரிமை நிலுவையில் உள்ள டயாபிராம், டைட்டானியம் கோட்டிங், அல்ட்ரா-லைட் டிரைவர் மற்றும் ஸ்டெப்டு டிசைன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தனித்துவ வடிவம் ஆடியோ சிதைவை குறைத்து, லோ ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்துகிறது. இதன் இயர் ஹூக் நிக்கல்-டைட்டானியம் வயர் கொண்டுள்ளது. இது நெகிழ்வானதாகவும் உறுதியாகவும் மாற்றுகிறது.
ஆட்டோமேடிக் பேஸ் என்ஹான்ஸ் அல்காரிதம் குறைந்த ஃப்ரீக்வன்ஸியை மேம்படுத்தி சிறப்பான பேஸ் அனுபவத்தை வழங்குகிறது. இந்த ஹெட்செட் சாட்ஜிபிடி ஒருங்கிணைப்பு மற்றும் தெளிவான அழைப்புகளை உறுதி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் ஏஐ சார்ந்த பிராசஸிங்கை பயன்படுத்துகிறது. இது 28 மில்லியனுக்கும் அதிகமான இரைச்சல் சூழ்நிலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த பிளேபேக்கிற்கு 30 மணிநேரம் அல்லது 24 மணிநேரம் வரையிலான டாக்-டைம் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது 2 மணிநேரயிலான பிளேபேக்கை உறுதி செய்கிறது.
நத்திங் இயர் (ஓபன்) வைட் நிறத்தில் வருகிறது. இந்திய சந்தையில் இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 9,999 ஆகும். இது இப்போது பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
- கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
- ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது.
'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதி 2 படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான கூலி திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனையடுத்து ஆமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கவிருந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகின. பின்னர், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கையைவிட்டு சென்றுள்ளது.
இந்த வரிசையில் தற்போது கைதி 2 படமும் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி படத்துக்காக ரூ.50 கோடி சம்பளம் பெற்ற லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்திற்கு ரூ.75 கோடி வரை கேட்டதாகவும் இதனை கேட்டு தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
அதே சமயம் கைதி 2 படம் கைவிடப்பட்டதா என்பது குறித்து எவ்வித அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட படம்.
- இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது. இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பீம்ஜி அண்ணா மற்றும் இயக்குநர், என்னை நம்பியவர்கள், என் சக நடிகர்கள் மிகவும் அன்பானவர்கள்.
தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும். மிக முக்கியமாக, எனது பயணத்தை ஆதரித்த எனது அன்பான பார்வையாளர்களுக்கு... இது உங்கள் அனைவருக்கும் நன்றி.. என கூறியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட 'ப்ளூ ஸ்டார்' படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் நிலவி, பின்பு வலுகுறையக்கூடும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும்.
இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் 25-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதற்கிடையே இன்று முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் 24- ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு இந்தியாவில் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நகரங்களில் ஒன்று.
குறிப்பாக பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது இச்சாலையில் 1 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் 2 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூர் வெளிவட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி உதவியை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நாடியுள்ளார்.
இதுகுறித்து அசிம் பிரேம்ஜிக்கு சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விப்ரோ நிறுவன வளாகத்தின் வழியே சில குறிப்பிட்ட வாகன இயக்கத்தை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக என்பதை ஆராய விரும்புகிறேன்.
ஒருவேளை அப்பாதையில் வாகனங்கள் பயணித்தால் பெங்களூரு வெளிவட்ட சாலைகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் 30% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
- உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது.
- இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் முற்றிலும் புதிய மின்சார SUV-யை அறிமுகப்படுத்தும் என்று ஹூண்டாய் நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் உலகளாவிய மின்சார வாகனங்கள் வரைபடத்தில் புதிய மாடல் இடம்பெற்றுள்ளது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காம்பாக்ட் எஸ்யூவி, ஹூண்டாய் இந்தியாவின் வரிசையில் கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படு. கிரெட்டா EV மாடலில் பெரிய, அம்சங்கள் நிறைந்த குடும்ப EV-யை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட போதிலும், இந்த புதிய மாடல் குறைந்த விலையில் ஒரு சிறிய, நகரத்திற்கு ஏற்ற மின்சார எஸ்யூவியை தேடுபவர்களை ஈர்க்கும்.
உலகளவில், ஹூண்டாய் அதன் மிகச்சிறிய மின்சார எஸ்யூவி-யான இன்ஸ்டெரை விற்பனை செய்கிறது. இன்ஸ்டெர் மாடல் பெரிய பேட்டரி ஆப்ஷனுடன் 355 கிலோமீட்டர்கள் வரை WLTP-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் வழங்குகிறது.
இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் காம்பாக்ட் எஸ்யூவி ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 300 கிலோமீட்டர்கள் வரை செல்லும். அம்சங்களைப் பொறுத்தவரை, கனெக்டெட்டகார் தொழில்நுட்பம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த காம்பாக்ட் SUV, உலகளாவிய மாடலின் நேரடி தழுவலாக இல்லாமல், இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஹூண்டாயின் முதல் மின்சார வாகனமாக இருக்கும். கிரெட்டா EV மிட் ரேஞ்ச் மின்சார எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்படுவதால், இந்த மாடல் காம்பாக்ட் SUV வகையை இலக்காகக் கொண்டிருக்கும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் வரவிருக்கும் மாடல்களுடன் போட்டி தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன.
- ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந்தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் கூறும்போது, இந்த கல்வியாண்டில் 2-ம் பருவம் அக்டோபர் 6-ந்தேதி அன்று தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60 ஆயிரத்து 960 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 5 ஆயிரத்து 211 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 749 மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.
- தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம்.
- தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி, கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆர்.டி.இ. நிதி அதிக பங்கீடு மாநில அரசுதான் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். 60:40 என்ற விகிதாசாரம் இருக்கும்போது மாநில அரசு எப்படி முழுமையாக நிதி கொடுக்க முடியும்?
அவர் சொல்வது அரைகுறையாக கொடுத்து நிறுத்துங்கள் என்பது போல உள்ளது. ஆர்.டி.இ. ஆக்ட் என்பது உச்சநீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் படிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. இதில் யாரும் தலையிட முடியாது. ஒரு அரசாங்கம் வருடம் தோறும் அதற்கான நிதியை மட்டுமே வெளியிட வேண்டும். ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் சொல்வதையே கேட்காமல் உள்ளது. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக அந்த பணத்தை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். ஒரு வருடத்தில் 1 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளால் அந்த இணையதளத்தையே திறக்க முடியாத நிலை உள்ளது.
இந்தியாவில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டதை தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிக்கிறார். தமிழ்நாடு தனித்தன்மையான மாநிலம். இங்கு இரு மொழிக் கொள்கை போதுமானது. அண்ணா அந்த காலத்தில் இருந்தே கூறி வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை வைத்து நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். மத்திய அரசு சொல்வதைப் போல 3 மொழிகள் மட்டுமின்றி 22 ெமாழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்களும் கூறுகிறோம். ஆனால் அதில் கட்டாயம் இருக்கக்கூடாது. விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று விட்டு 3-வது மொழியில் தேர்ச்சி பெறவில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் படிக்க கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.
2 இட்லி போதும் என்கிறோம். ஆனால் 3வது இட்லியை வாயில் திணித்தால் குழந்தைகள் வாந்திதான் எடுப்பார்கள். எங்களுக்கு தேவையென்றால் நாங்கள் படிக்கிறோம். எங்களுக்கு அறிவுதான் முக்கியம். உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் ஒரு செல்போன் போதுமானது. எந்த மொழியில் கேள்வி கேட்க வேண்டும் என்றாலும் கூகுள் மூலம் மொழி பெயர்ப்பு செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். தமிழ் என்பது அடையாளம். ஆங்கிலம் என்பது வாய்ப்புகள். தமிழன் என்று கூறுவதற்கு தாய்மொழி தமிழ் உள்ளது.
உலகம் முழுவதும் எனது கருத்தை கொண்டு செல்வதற்கு ஆங்கிலம் போதுமானதாக உள்ளது என நாங்கள் கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு 3-வது மொழி என கூறி ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க பார்க்கின்றனர். சமஸ்கிருதம் வந்தால் பிற்போக்கு சிந்தனைகள் வந்து விடும். புராண கதைகளை எடுத்து கூறி மாணவர்களை அறிவியல் சார்ந்து சிந்திக்க விடாமல் மழுங்கடிக்கும் பணிகளை அவர்கள் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
- 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான ஏ.கே.65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அந்த பந்தயங்களின் அட்டவணை விவரம் வருமாறு:
செப்டம்பர் 27–28: க்ரெவென்டிக் 24H
செப்டம்பர் 30– அக்டோபர் 1: LMP3 சோதனை
அக்டோபர் 6: மஹிந்திரா பார்முலா E சோதனை:
அக்டோபர் 11–12: GT4 ஐரோப்பிய தொடர்
என மொத்தம் 4 கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் என அஜித்குமார் ரேசிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
- தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது.
- ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
"ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என பிரதமர் மோடி கூறி உள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்.
8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?
மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.
மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பதிவிட்டுள்ளார்.
- கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
- இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தும், குறைக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த வரிசையில், ஜிஎஸ்டி 2.0 வரி அமலுக்கு வந்த பிறகு கவாசாகி Z900 மோட்டார்சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி இன்லைன்-4, ஸ்டிரீட் நேக்கட் கவாசகி Z900 பைக்கின் விலை இப்போது ரூ.10.18 லட்சமாக மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.66,000 அதிகம் ஆகும். புதிய வரி விதிப்பு பெரிய பைக்குகளை வாங்குபவர்களின் திட்டங்களை நிச்சயமாக பாதிக்கும். மேலும் பல பைக்குகளின் விலைகள் உயரும்.
2025ஆம் ஆண்டிற்காக, இந்த பைக் ஏராளமான புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. 'சுகோமி' வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும், இதில், புதிய LED ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய ஃபியூவல் டேன்க் மற்றும் புதிய LED டெயில் லைட்டுடன் கூர்மையான தோற்றமுடைய டெயில் பகுதியைப் பெறுகிறது.

கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 123hp பவர் மற்றும் 97.4Nm டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய புதிய வண்ண TFT டிஸ்ப்ளே, இரண்டு பவர் மோட்கள், ரைடு மோட்கள், IMU-அசிஸ்ட், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.
இந்த பைக் ரூ.10.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் உடன் போட்டியிடுகிறது.
- வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
- சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது.
குன்னூர்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்றும், நாளையும் அவர் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
குன்னூர் பஸ் நிலையம் அருகே இன்று காலை திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
தி.மு.க ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் என எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு, ஏழை, எளிய மக்களை பற்றியோ, விலைவாசி உயர்வை பற்றியோ கவலைப்படவில்லை. ஏழை மக்களை பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். நிர்வாக திறமையற்ற முதலமைச்சராக இருக்கிறார்.
வாகன வருகை நிபந்தனைகளால் ஊட்டி, குன்னூர் பகுதி வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தை நாடி, வியாபாரிகளின் நிலைமையை எடுத்து சொல்லி, வாகன நிபந்தனைகளை நீக்க நடவடிக்கை எடுப்போம்.
சுற்றுலாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அ.தி.மு.க அரசு இருந்தது. ஆனால் தி.மு.க அதை கண்டுகொள்ளவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 2026-ல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தமிழகம் போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.
நகராட்சி பகுதிகளில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி பகுதிகளில் குடிநீர் வரி, வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டது. கொள்ளையடிக்கும அரசாக இந்த தி.மு.க அரசு உள்ளது. தி.மு.க ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது. ஆனால் செலவுகள் அதிகரித்து விட்டது.
தி.மு.க. ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளிலும் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 1½ கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வசூல் செய்கின்றனர்.
அப்படி கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி டாஸ்மாக் கடை மூலமாக வருமானம் வருகிறது. ஒரு மாதத்துக்கு 450 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. வருடத்துக்கு 5,400 கோடி ரூபாய் வருகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் முறைகேடு நடந்துள்ளது.
10 ரூபாய் வாங்குவது உண்மை தான் என அந்த துறையின் அமைச்சரே சொல்லிவிட்டார். இந்த பணம் எங்கு போகிறது. எந்த கணக்கில் இருக்கிறது. எத்தனை பாட்டில் திரும்ப பெற்றீர்கள். எவ்வளவு வசூல் வந்தது. இது எதற்கும் அவர்களிடம் கணக்கு இல்லை.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் டாஸ்மாக் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தருவோம். அ.தி.மு.க அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களை எல்லாம் தி.மு.க நிறுத்தி விட்டது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.
அ.தி.மு.க அலுவலகம், டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் வீட்டில் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறுகிறார். அவர் கனவு கண்டாரோ என்னவோ தெரியவில்லை. அ.தி.மு.க அலுவலகம் சென்னையில் தான் உள்ளது. வேண்டும் என்றால் வந்து பார்த்து கொள்ளுங்கள். நீங்களும் ஆள் வைத்து உடைத்து பார்த்தீர்கள். ஆள் வைத்து அ.தி.மு.க கட்டிடத்தை நொறுக்கி பார்த்தீர்கள். ஆனால் நொறுக்க முடியவில்லை. அ.தி.மு.க. அலுவலகத்தை உடைக்க தி.மு.க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது.
நீங்கள் அ.தி.மு.க.வை உடைக்க, அ.தி.மு.க.வை பிளக்க எத்தனையோ சதி செய்து பார்த்தீர்கள். எத்தனையோ பேரை கொம்பு சீவி பார்த்தீர்கள். ஆனால் அது அத்தனையையும் எங்களது தொண்டர்கள் முறியடித்தனர்.
அ.தி.மு.க உழைப்பால் உயர்ந்த கட்சி. தொண்டர்களால் உருவான கட்சி. முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் அதி.மு.கவை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. அத்தனை தொண்டர்களும் அ.தி.மு.கவை தாங்கி பிடித்து கொண்டுள்ளனர்.
அ.தி.மு.கவுக்கு எவ்வளவோ சோதனையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அவை அத்தனையும் தொண்டர்களால் தூள்தூளாக்கப்படும்.
இதே நேரத்தில் தி.மு.க.வுக்கு சோதனை வந்தபோது, தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உங்கள் கட்சி அலுவலகத்தை கைப்பற்ற நினைத்த போது அதனை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா. தி.மு.க 2 ஆக போனது. கருணாநிதி தடுமாறி கொண்டிருந்தார். அப்போது பிரிந்து சென்றவர்கள் தி.மு.க அலுவலகத்தை கைப்பற்ற முயன்றனர். அதனை காப்பாற்றி கொடுத்தது அ.தி.மு.க தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
அ.தி.மு.கவுக்கு எப்போதும் மற்றவர்களுக்கு உதவி செய்து தான் பழக்கம். தி.மு.க.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் மக்களுக்கு உதவி செய்த வரலாறு எப்போதும் கிடையாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






