என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
    • இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

    இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

    • தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக Gen-Z போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

    அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    ரிஷபம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் தொடர்பான முக்கியப் புள்ளிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இடமாற்றம், வீடு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். உறவினர் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது.

    கன்னி

    வருமானம் உயரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். சொந்தபந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

    துலாம்

    இடம் சம்பந்தமான பிரச்சனைகள் சுமுகமாக முடியலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.

    விருச்சிகம்

    திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லும் நாள். பிறர் கொடுத்த வாக்கை நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு குறையும்.

    தனுசு

    யோகமான நாள். நீங்கள் செய்த உதவிக்கு பதில் உதவி கிடைக்கும். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    மகரம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.

    கும்பம்

    எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

    • தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
    • மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.

    கொல்கத்தா:

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் 23 வயது எம்பிபிஎஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.

    மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. விமர்சித்து வருகிறது

    இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜ.க. முன்னாள் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இங்கு மம்தா பானர்ஜியின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது தலிபான், பாகிஸ்தான் ஆட்சி நடைபெறுகிறதா?

    இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார்.

    ஆபரேஷன் சிந்தூரின் போது சோபியா குரேசி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் இரவில் சென்றுதான் தாக்குதல் நடத்தினர்.

    மேற்கு வங்க பெண் முதல்வரே, பெண்களை இரவில் வெளியில் வரவேண்டாம் என்பதுதான் இன்றைய மேற்கு வங்கத்தின் நிலை.

    இதற்கு மேற்கு வங்க பெண்கள் தக்க பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    • பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
    • எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகள் பெற்று அதிபரானார்.

    விக்டோரியா:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான சீசெல்சில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

    இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.

    இந்நிலையில், இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேவல் ராம் கலவனும், பிரதான எதிர்க்கட்சியான ஹெர்மினி ஐக்கிய செஷெல்ஸ் சார்பில் பேட்ரிக் ஹெர்மினியும் போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதிபராக தேர்வு செய்யப்பட்ட பேட்ரிக் ஹெர்மனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
    • ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாக பேசி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்சனை என்று வரும்போது நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி நாளிதழ்களை படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாயில் வந்தபடி பேசிவிட்டு செல்கிறார். அவரைப் போன்று கொச்சைப்படுத்தி பேச எங்களுக்கு தெரியாது.

    கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது.

    நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது. எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    • இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
    • யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.

    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.

    அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.

    உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.

    உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்தது.
    • இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    விசாகப்பட்டினத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

    நடப்பு ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்களுடன் 1,000 ரன்களைக் கடந்துள்ளார் .

    • வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.

    புதுடெல்லி:

    வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேந்திரா ராஜ்புத் கூறுகையில், அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தேசத்தின் அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் தலைமை வகிக்கிறார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளரான செஷாத் பூனாவாலா கூறியதாவது:

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நோபல் பரிசு தரவேண்டும் என்று காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.

    99 தேர்தல்களில் தோற்றதற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு தரலாம்.

    மேலும் கபடநாடகம்,பொய்யான தகவல்களைக் கூறுதல், 1975, 1984-ல் ஜனநாயகத்தைக் கொலை செய்ததற்காக வேண்டுமானால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என தெரிவித்தார்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    விசாகப்பட்டினம்:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீராங்கனைகள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், பிரதிகா ராவல் 75 ரன்னும் எடுத்தனர்.

    ஹர்லின் தியோல் 38 ரன்னும், ஜெமிமா ரொட்ரிக்ஸ் 33 ரன்னும், ரிச்சா கோஷ் 32 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் அன்னபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டும், சோபி மோலினக்ஸ்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான அலிசா ஹீலி அதிரடியாக அடி சதமடித்தார். அவர் 107 பந்தில் 142 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எல்லீஸ் பெரி 47 ரன்னும், ஆஷ்லி கார்ட்னர் 45 ரன்னும், போபி லிட்ச்பீல்டு 40 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 3 விக்கெட்டும், தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
    • இதில் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்நெக் இறுதிச்சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வாலண்டைன் வசெரோட் உடன் மோதினார்.

    இதில் வசெரோட் முதல் செட்டை இழந்தாலும், 2 மற்றும் 3வது செட்டைக் கைப்பற்றினார்.

    இறுதியில் வசெரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    ×