என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
- காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந் தசாமி, அமர்நாத், அறிவழகன், துரைஅன்பரசன் என்கிற ராமலிங்கம், கவிஞர் ரகுமான், இரா. சின்னசாமி ஆகியோர் மறைவுக்கு சபை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சட்டசபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கரூரில் கடந்த 27-ந்தேதி அன்று த.வெ.க. கட்சியின் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
27.9.2025 அன்று கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து இந்த பேரவை அதிர்ச்சியும் தாங்க முடியாத துயரமும் கொள்கிறது. இந்த துயர செய்தி அறிந்ததும் முதலமைச்சர் அன்று இரவே கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த அமைச்சர்களை உடனே கரூருக்கு அனுப்பி வைத்தார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.
கரூர் துயர சம்பவத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த 2 நிமிடம் மவுனம் காக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகலாந்து மாநில கவர்னராக இருந்த இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் பீலா வெங்கடேசன், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர். அத்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப் பட்டது. சட்டசபை மீண்டும் நாளை காலை கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி சட்டசபை அறையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை விவாதத்தில் எழுப்ப வேண்டிய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாளை (15-ந்தேதி) காலை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் கேள்வி நேரம் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இதன் மீதான விவாதம் 16-ந்தேதி அன்று நடைபெறும். 17-ந்தேதி அன்று நிதித்துறை அமைச்சர் பதில் அளிப்பார். அதன் பிறகு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்.
இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் கரூர் துயர சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (15.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
அலமதி: கொடுவள்ளி, மாகரல், கண்டிகை, சேதுபாக்கம், குருவாயல், கரணி, அம்மனப்பாக்கம், ராமாபுரம்.
பட்டாபிராம்: ஆவடி செக்போஸ்ட், என்எம் ரோடு, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜ புரம், நேரு பஜார்.
திருமுல்லைவாயல்: தென்றல் நகர் கிழக்கு, தென்றல் நகர் மேற்கு, சரஸ்வதி நகர் மெயின் ரோடு, ஜாக் நகர், யமுனா நகர், வள்ளலார் நகர், மூர்த்தி நகர் 4-வது தெரு, அம்பேத்கர் நகர்.
ஆவடி: காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 அடி சாலை, 40 அடி சாலை, ஜோதி நகர், நாகம்மை நகர், ஆண்டனி நகர், இஎஸ்ஐ அண்ணாநகர்.
மாங்காடு: ஆவடி ரோடு, மகிழம் அவென்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், ஆட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகப்பிள்ளை நகர், கங்கை அம்மன் கோவில் தெரு, விநாயக நகர், கோரிமேடு, பஜார் தெரு, கண்ணம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோவில் தெரு, குன்றத்தூர் ரோடு.
எழும்பூர்: எழும்பூர் ஹை ரோடு, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கேப்பு ரோடு, ஜெகதமம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட்.
பாந்தியன் சாலை: மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேண்ட், பழைய ஆணையர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு.
- எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன்.
- முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனிடையே, 'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இத்தகவல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'பைசன்' படம் வெளியான பிறகு தனுஷை வைத்து தான் தன் அடுத்த படத்தை தொடங்க உள்ளதாகவும், அதனை தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன்மூலம் இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.
மேலும் மாரிசெல்வராஜ் கூறுகையில், எப்போதும் ஒரு படத்தில் கமிட்டாகும் போது கதாநாயகனிடம் கதை சொல்லி தான் கமிட்டாவேன். ஒரு படத்தில் கமிட்டான பிறகு கதையை யோசிக்கலாம் என்று இருக்க மாட்டேன். முதலில் கதையை ரெடி செய்த பிறகு தான் கதாநாயகனிடம் சொல்லி ஓகே வாங்குவேன். கமிட்டாகிவிட்டு அதன் பிறகு நான் சொன்ன கதை அந்த கதாநாயகனுக்கு பிடிக்கவில்லை என்றால் எனக்கு கஷ்டமாக இருக்கும் என்றார்.
உதயநிதி கடைசியாக நடித்த 'மாமன்னன்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் இன்பநிதியின் முதல் படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- மிரட்டல் தொடர்பாக தற்போது கூடுதலாக ஒரு வழக்கையும் போலீசார் பதிவு செய்திருக்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே உள்ளன.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, நீலாங்கரைப் பகுதியில் உள்ள நடிகர் விஜய் வீடு, சென்னையில் உள்ள திரிஷா வீடு என பிரபலங்கள் பலரது வீட்டுக்கு ஏற்கனவே இமெயில் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார்.
டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இதுபோன்ற மிரட்டல் கடிதங்களை அனுப்பி வரும் நபர் நேற்றும் தனது கைவரிசையை காட்டி உள்ளார்.
நேற்று இரவு இமெயில் மூலமாக அவர் அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
இ-மெயில் மூலம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே 60 வழக்குகள் சென்னை மாநகர போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பாக தற்போது கூடுதலாக ஒரு வழக்கையும் போலீசார் பதிவு செய்திருக்கிறார்கள்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் இமெயில் மூலமாக மிரட்டல் கடிதத்தை அனுப்பிவிட்டு உடனடியாக தனது அடையாள முகவரியை காணாமல் போய் விடும் வகையில் செய்து வருகிறார்.
இதனால் அவரை பிடிப்பது போலீசுக்கு சவாலாக உள்ளது.
இப்படி தலைமறைவாக இருந்தபடியே தினமும் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அவர் மிரட்டல் கடிதத்தை அனுப்பிக்கொண்டே இருப்பதால் போலீசாரும் மிகுந்த தலைவலிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதன் காரணமாக மிரட்டல் ஆசாமியை எப்படி யாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்பதில் அவர்கள் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்கான அதிரடி நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்.
- ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை கண்டித்து வந்துள்ளார்.
- அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஸ்பெயினில் தன்னை சந்தித்த ரசிகர்கள் விசிலடித்து கூச்சலிட்டதால் சைகை மூலம் அவர்களை நடிகரும் ரேசருமான அஜித் குமார் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
தன்னுடைய ரசிகர்கள் தவறு செய்யும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் அவர்களை தொடர்ச்சியாக கண்டித்து வந்துள்ளார். அஜித் குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அஜித்குமார் குறித்து பார்த்திபன் ஒரு நேர்காணலில் பேசிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், "அஜித் ரொம்ப தனித்துவமானவர் அவரோட decision making எல்லாம் அவ்வளவு தெளிவா இருக்கும்" என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த பார்திபன், "decision ma'KING' Ajith தான்! சலனமே இல்லாத மனிதர். கவனமே சினிமா மீதும் தன் தனிப்பட்ட வாழ்க்கை மீதும். பெரும்பலம் கொண்ட தன் சினிமா புகழையும் ரசிகக் கூட்டத்தையும் அடித்தளமாக வைத்து அரசியல் மேடை அமைக்க விரும்பாதவர். தன்னை நேசிக்கும் கூட்டத்தின் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவர். எனவே promotionக்கு கூட வராமல், தனக்கான உலகத்தில் பயணிக்கும் ஞானி மனநிலை மனிதர். ஆச்சர்யமான அபூர்வப் பிறவி. எல்லோருக்கும் நல்ல நண்பர்> எனக்கும்!" என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் அரசியலுக்காக தனது ரசிகர்களை பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதாக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பார்த்திபனும் மறைமுகமாக அதை குறிப்பிட்டு விஜயை விமர்சித்துள்ளார்.
- குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
- போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் கழிவறை உள்ளது.
இந்த கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
இதனை கழிவறைக்கு சென்ற ஒருவர் பார்த்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விக்கிரவாண்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை கழிவறை கோப்பைக்குள் அழுத்தி கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்றாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறை கோப்கைக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2-வது இன்னிங்சில் கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ரோஸ்டன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 518 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 248 ரன்னில் சுருண்டு 'பாலோ-ஆன்' ஆனது.
இந்தியா 'பாலோ-ஆன்' வழங்கியதால் 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் (87 ரன்), ஷாய் ஹோப் (66 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த கேம்ப்பெல் சிறிது நேரத்தில் தனது 'கன்னி' சதத்தை நிறைவு செய்தார். ஜடேஜாவின் பந்தில் மெகா சிக்சரோடு மூன்று இலக்கத்தை தொட்டார். 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் என்ற சிறப்பை பெற்றார்.
அணியின் ஸ்கோர் 212 ஆக உயர்ந்த போது, கேம்ப்பெல் (115 ரன், 199 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) ஜடேஜாவின் சுழலில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.
4-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப்புடன், கேப்டன் ரோஸ்டன் சேஸ் இணைந்தார். இருவரும் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். அபாரமாக ஆடிய ஷாய் ஹோப் பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 3-வது சதத்தை எட்டினார். டெஸ்டில் 8 ஆண்டுக்கு பிறகு அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். ஆனால் செஞ்சுரிக்கு பிறகு நிலைக்கவில்லை. முகமது சிராஜ் வீசிய பந்தை ஷாய் ஹோப் (103 ரன், 214 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்த போது பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது பங்குக்கு 40 ரன்கள் (72 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் 12 ரன்னில் வெளியேற்றப்பட்டார். ஒரு கட்டத்தில் அந்த அணி 311 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் 10-வது விக்கெட்டுக்கு ஜஸ்டின் கிரீவ்சும், ஜெய்டன் சீல்சும் கைகோர்த்து இந்திய பவுலர்களுக்கு 'தண்ணி' காட்டினர். 22 ஓவர்கள் சமாளித்த இவர்கள் தங்களது முன்னிலை ஸ்கோரை 100-க்கு மேல் தாண்ட வைத்து அசத்தினர். தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ஒரு வழியாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவர் வீசிய பந்தை தூக்கியடித்து சீல்ஸ் (32 ரன், 67 பந்து) கேட்ச் ஆனார்.
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 118.5 ஓவர்களில் 390 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கடைசி விக்கெட்டுக்கு இவர்கள் 79 ரன்கள் திரட்டினர். கிரீவ்ஸ் 50 ரன்களுடன் (85 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியாவுக்கு 2-வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (8 ரன்) வாரிகனின் சுழலில் சிக்கினார்.
இதன் பின்னர் லோகேஷ் ராகுலும் (25 ரன், நாட் அவுட்), சாய்சுதர்சனும் (30 ரன், நாட் அவுட்) மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்தது.
இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. சாய் சுதர்சன் 39 ரன் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்த வந்த கேப்டன் சுப்மன் கில் 13 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 35.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 -வது டெஸ்டின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவும் இந்த தொடரின் தொடர் நாயகனாக ஜடேஜாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
- அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, அருள் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து பேசியுள்ளனர். சட்டமன்ற குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
முன்னதாக, சட்டசபை தொடங்குவதற்கு முன்பு, அன்புமணி தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி மனு அளித்தனர்.
ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
- ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. இன்று தொடங்கியுள்ள சட்டசபை கூட்டம் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ம.க. சட்டமன்றக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஜி.கே.மணியை நீக்கக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜி.கே.மணியை மாற்றுவது தொடர்பாக சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்களான சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
- இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.
மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் இன்று கூடியது.
சட்டசபை கூடியதும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புரட்சிமணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், அறிவழகன், ராமலிங்கம், கலுலுர் ரஹ்மான், சின்னசாமி மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இன்று முதல் வரும் 17-ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
- சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
- 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.
2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்கக் கோரி தென் மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 9-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதனால் சுத்திகரிப்பு நிலையங்களில் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைநிறுத்தம் காரணமாக 75 ஆயிரம் டன் சமையல் கியாஸ் சுத்திகரிப்பு நிலையங்களில் தேக்கம் அடைந்து உள்ளது.
- தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த 7-ந் தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தொட்டது. அதன்பின்னரும் விலை ஏற்றம் கண்டது. இதனால் கடந்த 11-ந் தேதி ஒரு சவரன் ரூ.92 ஆயிரம் என்ற உச்சத்தையும் தொட்டது. இந்தநிலையில், நேற்றும் தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது. அந்தவகையில் நேற்றும் 2 முறை தங்கம் உயர்ந்து இருந்தது.
அதன்படி, காலையில் கிராமுக்கு ரூ.25-ம் சவரனுக்கு ரூ.200-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் அதிகரித்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 245 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,825 ரூபாய்க்கும் சவரனுக்கு 1,960 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,600-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உச்சம் அடைந்து வருகிறது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640
12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720
09-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
13-10-2025- ஒரு கிராம் ரூ.197
12-10-2025- ஒரு கிராம் ரூ.190
11-10-2025- ஒரு கிராம் ரூ.190
10-10-2025- ஒரு கிராம் ரூ.184
09-10-2025- ஒரு கிராம் ரூ.177






