என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    X

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    • நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
    • மிரட்டல் தொடர்பாக தற்போது கூடுதலாக ஒரு வழக்கையும் போலீசார் பதிவு செய்திருக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு கொண்டே உள்ளன.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, நீலாங்கரைப் பகுதியில் உள்ள நடிகர் விஜய் வீடு, சென்னையில் உள்ள திரிஷா வீடு என பிரபலங்கள் பலரது வீட்டுக்கு ஏற்கனவே இமெயில் மூலமாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார்.

    டி.ஜி.பி. அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இதுபோன்ற மிரட்டல் கடிதங்களை அனுப்பி வரும் நபர் நேற்றும் தனது கைவரிசையை காட்டி உள்ளார்.

    நேற்று இரவு இமெயில் மூலமாக அவர் அனுப்பிய மிரட்டல் கடிதத்தில் நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து நீலாங்கரை போலீசார் வெடிகுண்டு நிபுணர்களோடு விரைந்து சென்று சீமான் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

    இ-மெயில் மூலம் தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே 60 வழக்குகள் சென்னை மாநகர போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மிரட்டல் தொடர்பாக தற்போது கூடுதலாக ஒரு வழக்கையும் போலீசார் பதிவு செய்திருக்கிறார்கள்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் இமெயில் மூலமாக மிரட்டல் கடிதத்தை அனுப்பிவிட்டு உடனடியாக தனது அடையாள முகவரியை காணாமல் போய் விடும் வகையில் செய்து வருகிறார்.

    இதனால் அவரை பிடிப்பது போலீசுக்கு சவாலாக உள்ளது.

    இப்படி தலைமறைவாக இருந்தபடியே தினமும் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அவர் மிரட்டல் கடிதத்தை அனுப்பிக்கொண்டே இருப்பதால் போலீசாரும் மிகுந்த தலைவலிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இதன் காரணமாக மிரட்டல் ஆசாமியை எப்படி யாவது கண்டுபிடித்து விடவேண்டும் என்பதில் அவர்கள் தீவிரம் காட்டி உள்ளனர். இதற்கான அதிரடி நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×