என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும்.
    • கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார்.

    மதுரை:

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ம் தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை திருநாள் (3-ந் தேதி) அன்று தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை அவமதித்ததாக ராம ரவிக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த அதே நீதிபதி கடந்த 4-ம் தேதி அன்று மீண்டும் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு இடையே நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கும், இது தொடர்பான அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை ஆஜராகும் படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    கடந்தமுறை விசாரணையின் போது மதுரை மாவட்ட கலெக்டர் சார்பிலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் சார்பிலும் ஆஜரான அரசு வக்கீல்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கோரும் கல் தீபத்தூண் அல்ல நில அளவைகல் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான வழக்கை தனி நீதிபதி பொதுநல வழக்கை போல விசாரித்து உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்கள்.

    அதற்கு நீதிபதிகள் மனுதாரர்கள் கூறும் பகுதியில் ஏன் தீபம் ஏற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வக்கீல் பல ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கோவிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கூறியுள்ளார். இதில் அவருக்கு எந்த உரிமையும் இல்லை. மலைமீது விளக்கு ஏற்றுவது வேறு, வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது வேறு. தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. கோவிலின் பராமரிப்பு அடிப்படை திட்டங்களை நிறைவேற்றும் கடமை அரசுக்கும் அறநிலைய துறைக்கும் தான் உள்ளது. கடைசியாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறை ஆகம விதிப்படிதான் நடந்து வருகிறது.

    இந்த நடைமுறையை பாரம்பரிய நடை மற்றும் வழக்கமான நடைமுறையாகும். தனி நீதிபதி இந்த விவகாரத்தில் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவித்து உள்ளார். கோவில் நிர்வாகத்தில் உயர் நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உரிமையியல் நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து அதற்கான தீர்வை பெற முடியும். திருப்பதி தேவஸ்தானத்தில் கூட ஆகம விதிகளை மீறி எதையும் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆகம விதிகளை மீறி புதிய பழக்கங்களையும் நடைமுறைகளையும் நிறைவேற்றும் போது பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளை எல்லாம் தனி நீதிபதி இந்த வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ளவில்லை. அர்ச்சனை மற்றும் பூஜையின் போது தனிநபர் தலையீடு இருக்கக்கூடாது அதுபோல தீபம் ஏற்றும் விவகாரத்திலும் ஆகம விதிகள் பொருந்தும் என்று வாதாடினார்கள்.

    அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் அறங்காவலர் குழு செயல்பாட்டில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அறநிலையத்துறை வக்கீல் ஆஜராகி கோவில் அறங்காவலர்கள் குழுவினர் கோவில் மீது பற்று இல்லாதவர்களை போல சித்தரிக்கப்படுகின்றனர் என்றார்.

    பின்னர் 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் நாகசுவாமி எழுதிய புத்தகத்தை நீதிபதிகள் முன்பு சமர்ப்பித்தனர்.

    அந்தப் புத்தகத்தில் கார்த்திகை தீபம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். மலையடிவாரத்தில் இருந்து பாதி வழியில் இறங்கி சென்றால் தீபத்தூண் ஒன்று இருப்பதை காணலாம். நாயக்கர் கால தீபத்தூண் அந்த தீபத்தூன் அனுமன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனின் தலை மீது உள்ள தூண் என அதை மக்கள் நினைக்கின்றனர். அங்கு விளக்கேற்றினால் நன்மை நடக்கும் என கூறப்படுவதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த தூண் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் தூண் தான் என்றும் அறநிலையத்துறை வக்கீல்கள் வாதாடினர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

    தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது.

    வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக பெய்த மழையில் சிக்கி காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

    மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 22-ஆம் தேதியும், நவம்பர் 30-ஆம் தேதியும் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தியிருந்தேன். அக்டோபர் மாதத்தில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதாக நான் கூறியிருந்த நிலையில், அதே நாளில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர், 16 ஆயிரம் ஹெக்டேரில் ( 40 ஆயிரம் ஏக்கர்) பயிர்கள் பாதிக்கபட்டிருப்பதாகவும், மீதமுள்ள பயிர்களையும் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆனால், அதன்பின் சுமார் 2 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படாதது ஏன்?

    டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அடுத்த 10 நாள்களில் கணக்கிடப்பட்டு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு 15 நாள்களுக்கு மேலாகியும் இன்று வரை பாதிக்கப்பட்ட பயிர்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 50% அளவுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 55% அளவுக்கும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 65% அளவுக்கும் மட்டுமே கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயிர்களுக்கான பாதிப்பு எப்போது கணக்கிடப்படும்? எப்போது இழப்பீடு வழங்கப்படும்? என்பது மில்லியன் டாலர் வினாவாக தோன்றுகிறது.

    பயிர் பாதிப்புகளை கணக்கிடுவதற்கு போதிய மனிதவளம் இல்லாதது தான் கணக்கெடுப்பு தாமதமாவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உதவி வேளாண் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரால் அதிகபட்சமாக 3 வருவாய் கிராமங்களில் உள்ள பயிர்களை மட்டுமே கணக்கெடுக்க முடியும். ஆனால், ஒவ்வொரு உதவி வேளாண் அலுவலருக்கும் 14 முதல் 16 வருவாய் கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அவர்கள் பாதிப்பை கணக்கிடுவதற்கு இன்னும் பல நாள்கள் ஆகும். உழவர்கள் கடன் வாங்கி சாகுபடி செய்திருக்கும் நிலையில், இழப்பீடு வழங்குவதை தாமதித்துக் கொண்டே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    அதுமட்டுமின்ன்றி, காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு ஏக்கர் சம்பா, தாளடி பயிர்களுக்கான சாகுபடி செலவு ரூ.40,000 ஆகும் நிலையில், ஏக்கருக்கு ரூ.8000 மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 2014-ஆம் ஆண்டின் சாகுபடி செலவுகளை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தொகையை 11 ஆண்டுகளுக்குப் பிறகும் உழவர்களுக்கு வழங்குவது பெரும் அநீதி.

    கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.8,000 என்ற இழப்பீடு போதாது என்பதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும்.
    • பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும்.

    புதுடெல்லி:

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்வது தொடர்பாக டெல்லியில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், மேலிட பார்வையாளர்கள் கிரிஸ்சோடங்கர், சூரஜ் ஹெக்டே, ஆலுவா ஆகியோர் இன்று கூடி ஆலோசித்தனர்.

    இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் மற்றும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கேட்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்துள்ளார்கள். அப்போது 40 தொகுதிகள் கேட்டு வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இந்த ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் முன் தயாரிப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதித்தோம். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தான் நீடிக்கிறது. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்வதே எங்கள் இலக்கு.

    டெல்லியில் நாளை (செவ்வாய்)யும் தொடர்ந்து ஆலோசிக்க இருக்கிறோம். தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு பேச்சுவார்த்தை தொடரும். பேச்சுவார்த்தையில்தான் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும் என்றார்.

    பேட்டியின்போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
    • நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை சர்வதேச விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் அமையும் ஹஜ் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

    ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

    நாளொன்றுக்கு 400 ஹஜ் பயணிகள் தங்கும் வகையில் தமிழ்நாடு ஹஸ் இல்லம் அமைக்கப்பட உள்ளது. 

    • இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
    • நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    திருச்சி:

    திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

    மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர்.
    • முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர்.

    பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா டெல்லியில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பெரும்பிடுகு முத்தரையரின் தபால் தலையை வெளியிட்டார்.

    இந்த நிலையில், பெரும்பிடுகு முத்தரையருக்கு நினைவு தபால் தலை வெளியிட்டதற்காக பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தான் கண்ட போர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடிய மாவீரர், முத்தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரிய தமிழ்வேந்தர், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பெரும் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்திய அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டமைக்கு மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தமிழக மக்களின் சார்பிலும்,

    அ.தி.மு.க. சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார். 

    • அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் எதிர்காலம் அ.தி.மு.க. தான். அப்படிப்பட்ட வலிமையான இயக்கத்தை என்ஜின் இல்லாத கார் என்றும் அதை பா.ஜ.க. என்ற லாரி கட்டி இழுக்க முயன்று வருகிறது என்றும் திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி. இந்த கூட்டணியால் தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கலங்கி போய் ஒரு நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி உள்ளார்.

    இன்றைக்கு உதயநிதி ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு தடையாக இருப்பது அ.தி.மு.க. தான்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை கண்டு நடுங்கிப் போயிருக்கும் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி 54 ஆண்டு பொது வாழ்வில் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து வந்த அ.தி.மு.க.வையும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வசை பாடி விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    வாரிசு அரசியலில் டெல்லியில் முடிவுரை எழுதப்பட்டு தற்போது பீகாரிலும் வாரிசு அரசியலுக்கு முடிவுரை எழுதி மக்கள் தந்த தீர்ப்பை கண்டு தான் ஸ்டாலினும், உதயநிதியும் அரண்டு போய் உள்ளார்கள்.

    அந்த காரில் சென்றார், இந்த காரில் சென்றார் என காரின் மீது கவனம் செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் தமிழக இளைஞர்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறார்கள் என்று கவனம் செலுத்த வேண்டும். வகுப்பு அறையில் மாணவிகள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். சக மாணவர்களால் மாணவன் அடித்து கொலை.

    இப்படி எங்கே செல்கிறது இளைய சமுதாயம்? அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், இளைஞரணி என்ற பெயரில் அ.தி.மு.க.வை பற்றியும் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் வசை பாடி தான் கலங்கி நிற்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

    இதற்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி என்ற சாமானியர் முடிவுரை எழுதும் வகையில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். அ.தி.மு.க.வை வெற்றிப்பாதை அழைத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எத்தனை கோடி விமர்சனங்கள் வைத்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்வார்கள். தமிழக மக்கள் உங்கள் விமர்சனத்தை புறம் தள்ளுவார்கள்.

    2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அமர்வார். தி.மு.க.விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியல் அநாகரீகம் இன்றி எத்தனை விமர்சனம் செய்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள், எள் முனையளவும் பின் வாங்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். 

    • திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கேரள நடிகைகள் கூட்டமைப்பு முடிவு
    • பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பப்பட்டது

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தில் நடிகர் திலீப்பின் `பறக்கும் தளிகா' படம் ஒளிபரப்பியதை கண்டித்து பெண் பயணி ஒருவர் சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து படம் பாதியில் நிறுத்தபப்பட்டது.

    இதனால் படத்தை ஆர்வமுடன் ரசித்து பார்த்து வந்த சில ஆண் பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த பெண் பயணிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாள் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.

    நடிகை பாலியல் வழக்கு தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள சமயத்தில் கேரளாவில் இச்சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

    • இவ்வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
    • ஞானசேகரனின் தாயார் கங்காதேவி வழக்கு தொடர்ந்தார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. 2-வது போட்டியில் விளையாடிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக ஜோஸ் டங் அணியில் இடம் பிடித்துள்ளார். மற்றப்படி எந்த மாற்றமும் இல்லை.

    3-வது போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும் நிலையில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

    இங்கிலாந்து அணியில் ஆடும் லெவன்:-

    க்ராலி, டக்கெட், போப், ரூட், ப்ரூக், ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கார்ஸ், ஆர்ச்சர், ஜோஷ் டோங்.

    • தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது.
    • எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார்.

    ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் கடந்த வாரம் வெளியானது. கலவையான விமர்சங்களை பெற்றுள்ள இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது.

    இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை என்று இசையமைப்பாளர் தமன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

    அகண்டா 2 பட நிகழ்கை ஒன்றில் பேசிய தமன், "தெலுங்கு சினிமாவில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். அவர்கள் தெலுங்கு படங்கள் மீதான விருப்பத்தால் வேலை செய்யவில்லை. பணத்திற்காக வேலை செய்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • 2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

    கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

    நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.

    இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை என பாதிக்கப்பட்ட நடிகை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வலியைப் பொய் என்றும் இது பொய்யான வழக்கு என்று கூறியவர்கள் இப்போது உண்மையைப் புரிந்து கொள்வார்கள்.

    முதல் குற்றவாளி எனது தனிப்பட்ட ஓட்டுநர் என்று இன்னுமே சிலர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் பொய்.. அவர் எனது ஓட்டுநர் அல்ல.எனக்குத் தெரிந்தவரும் இல்லை.

    2016-ல் நான் நடித்த ஒரு படத்தில் மட்டும் எனக்கு ஏதோ ஓட்டுநராக இருந்தவர். ஆதலால் தயவுசெய்து தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துங்கள்.

    2020-ம் ஆண்டிலேயே இந்த வழக்கில் ஏதோ சரியில்லை என்பதை நான் உணரத் தொடங்கினேன்.

    அதனால் தான் விசாரணை நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்பதாலேயே பலமுறை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகினேன். இருப்பினும், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதற்கான கோரிக்கை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதில்லை. அனைத்து நீதிமன்றங்களும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை என உணர்ந்துள்ளேன். என் மீது அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள், வாங்கிய காசுக்கு சுதந்திரமாக பணியை தொடரட்டும் என பாதிக்கப்பட்ட நடிகை கூறினார்.

    ×