என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதில்,
* கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங் தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* உயர்கல்வித்துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மதுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக சுப்ரியா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைவராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* வணிக வரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக குமார் ஜயந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோவை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* சுகாதாரத்துறை, கூட்டுத்துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* TANGEDCO தலைவர் நந்தக்குமாரை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்.
- ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?
மகா கும்பமேளாவின் போது பயண இடையூறுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகளவிலான பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பிரயாக்ராஜ்-க்கு செல்லும் சாலைகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
இது குறித்த எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அகிலேஷ் யாதவ், "மகா கும்பமேளாவின் போது, உ.பி. மாநிலத்தில் வாகனங்களுக்கு கட்டணமில்லாச் சலுகை வழங்க வேண்டும். இது பயண தடைகளையும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சிக்கலை குறைக்கும்."
"திரைப்படங்களுக்கு பொழுதுபோக்கு வரி இலவசமாக்க முடியும் என்ற போது, மகா கும்பமேளா போன்ற பிரமாண்டமான விழாவில் வாகனங்களுக்கு ஏன் கட்டணமில்லா சலுகையை வழங்கக்கூடாது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்த பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ம்ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது.
- காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர்.
- என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவில் ஒருவர் குடிபோதையில் ரெயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திறந்திருந்த பீம்பூர் ரயில்வே கேட்டை கடந்து கார் ரெயில் தண்டவாளத்திற்குள் நுழைந்தது.
ஓட்டுநர் குடிபோதையில் காரை சாலையில் கொண்டு செல்வதற்கு பதிலாக ரெயில் தண்டவாளத்தில் வேகமாக செலுத்தினார். அதிவேகமாக சென்றதால், தண்டவாளத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் நகர்ந்து, பின்னர் கற்களில் தடுக்கி கார் நின்றது.
ரெயில் தண்டவாளத்தில் கார் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ரெயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காரை நோக்கி விரைந்து சென்றனர். காரில் ஒரு தம்பதியும், மற்றும் சிலரும் இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்று அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்ததாக தெரிகிறது.
என்ன நடந்தது என்று ஓட்டுநருக்குத் தெரியவில்லை. அவர் தனது காரை ரெயில் தண்டவாளத்தில் கொண்டு சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர். அவர் உடனடியாக காரில் இருந்து இறங்கி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். கேட் கீப்பர், கட்டுப்பாட்டு அறைக்கு செய்தியை அனுப்பினார், அதன் பிறகு அதே ரெயில் பாதையை நெருங்கி டெல்லியில் இருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது.
ரெயில் சுமார் 35 நிமிடங்கள் ரயில் தண்டவாளத்திலேயே நின்றிருந்தது. தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து நிலைய கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் மீட்புப் பணியை மேற்கொண்டு, நகராட்சி ஹைட்ரான்ட்டின் உதவியுடன் காரை தண்டவாளத்திலிருந்து அகற்றினார். சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில், தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்பட்ட பின்னரே செல்ல முடிந்தது. தப்பி ஓடிய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர்.
- தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டிற்கு எதிரான ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லை.
மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையான மிரட்டலை மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியைப் பறித்தனர்.
இப்போது அதை மற்ற மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளனர். நமது மாணவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் பாடுபட்டதற்காக அவர்களைத் தண்டிக்கும் வகையில் இந்த செயல் உள்ளது.
இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான அணுகலை நெரிக்கும் அளவுக்கு இரக்கமற்றதாக இருந்ததில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீதான அநீதி மற்றும் வெறுப்பின் முகம் என்பதை பா.ஜ.க. அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம்.
- ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்த பயிர்க் கடன் தள்ளுபடி என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியதற்கு, சொன்னதையே மீண்டும் திருப்பிச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். நீங்கள் வெளியிட்ட தமிழக அரசின் கொள்கைக் குறிப்பில், கடந்த 2021 2022 முதல், 2023 2024 வரை, தள்ளுபடி செய்யபபட்ட பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறீர்கள். மீதமுள்ள தொகையை தள்ளுபடி செய்தீர்களா இல்லையா என்பது குறித்து, அரசின் கொள்கைக் குறிப்பில் குறிப்பிடப்பட வில்லையென்றால், பொது மக்களுக்கு எப்படித் தெரியும்?
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதி, ஆட்சிக்கு வந்த பின்னர், தகுதியுடையவர்களுக்கு மட்டும் நகைக் கடன் தள்ளுபடி என்று மாறியதை அமைச்சர் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைகளை கொண்டு போய் வங்கியில் வைத்துக் கடன் வாங்குங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறித்தான் தேர்தல் பிரசாரமே செய்தார்.
அப்போது தேவைப்படாத கடன் தள்ளுபடிக்கான தகுதி, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உருவாக்கப்பட்டதைத்தான், உங்கள் வாக்குறுதியை நம்பிக் கடனாளியாக நிற்கும் பொதுமக்களின் சார்பாக நாங்கள் கேள்வியாக முன்வைக்கிறோம்.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக, பல பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர், கண்துடைப்புக்காக சிறிய அளவில் கடன்களைத் தள்ளுபடி செய்துவிட்டு, அதனைப் பல கோடி செலவில் விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் ஆட்சியால், இதுவரை நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?
மழைநீர் வடிகால் என்ற பெயரில், ஆளுக்கொருகதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும், முதலமைச்சரும், மேயரும். இத்தனை ஆண்டுகள், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு காட்டி விட்டு, ஒவ்வொரு முறையும் மழையின் மீது பழியைப் போட்டு, பேரிடர் நிவாரண நிதி தரவில்லை என்று கூற வெட்கமாக இல்லையா?
தமிழத்துக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்காக, தமிழக மக்களால் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள், தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக எதுவும் கேட்டிருக்கிறார்களா? கேன்டீன் செல்வதற்காகவே டெல்லி வரை செல்கிறார்கள் என்று பொதுமக்கள் கேலி செய்யும் அளவில்தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது.
இப்படி, ஒதுக்கப்பட்ட நிதியையும், சிலை வைக்கிறோம், பெயர் வைக்கிறோம் என்று வீணடித்துவிட்டு, பாராளுமன்றத்தில் மத்திய அரசிடம் கேட்டுப் பெறும் பொறுப்பையும் தவறவிட்டு, ஆண்டில் 11 மாதங்கள் நீங்கள் விளம்பர நாடகமாடிக் கொண்டிருப்பீர்கள். ஒவ்வொரு ஆண்டும், பொது மக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா?
அமைச்சர் பெரியகருப்பனுக்கு நான் பணிவன்புடன் கூறிக்கொள்வதெல்லாம், உங்கள் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. நீங்கள் நள்ளிரவில் பதிலளித்தாலும், நண்பகலில் பதிலளித்தாலும், உண்மையான பதில் வரும்வரை கேள்விகள் தொடரும். இது ஒவ்வொரு துறை அமைச்சருக்கும் பொருந்தும். அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது
- பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. பல தொகுதிகளில் பாஜகவிடம் தோல்வி அடைந்த ஆம் ஆத்மி வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தை விட அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஒருவேளை ஆம் ஆத்மி கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்தால் மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடித்திருக்கலாம் என்று தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு கூறுகின்றன.
இந்நிலையில் டெல்லி தேர்தலில் பாஜக வெற்றிக்கு ராகுல் காந்தியை வாழ்த்தியுள்ளார் கேடி ராமா ராவ்.
காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா மாநில எதிர்க்கட்சியான பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த கேடி ராமா ராவ் கூறுகையில், ராகுல் காந்தி பாஜக மற்றும் பிரதமர் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்.
பிரதமர் மற்றும் பாஜக கையில் உள்ள ராகுல் இப்போது செய்துகொண்டிருப்பதை தொடர்ந்து செய்து வருவது கே.சி.ஆர். கெஜ்ரிவால், மம்தா, பினராயி விஜயன் மற்றும் ஸ்டாலின் போன்ற வலுவான மாநில தலைவர்களை பலவீனப்படுத்துகிறது.
டெல்லி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, குறைந்தபட்சம் இப்போதாவது காங்கிரஸ், அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும், நாட்டிற்கு, குறிப்பாக பாஜகவைத் தடுத்து நிறுத்தும் வலுவான மாநில சக்திகளுக்கு ஏற்படுத்திய சேதத்தையும் உணர்ந்துள்ளது என்று கூறினார்.
மேலும் "பாஜகவுக்காக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்துக்கள்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
- வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தபோது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்று அப்பெண்ணைத் தாக்கி, வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம், சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தப் பெண்ணிற்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் ரேவதிக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரேவதியின் முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஹேமராஜ் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேவதியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார்.
- அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டப் பேரவை தேர்தல் வரை, கவர்னர் ஆர்.என்.ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும் என்றார்.
இது பற்றி தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, தி.மு.க.வினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.
அண்ணாமலை ஜுரம் முதல்வர் ஸ்டாலினை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார். அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துவக்க வீரர் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியின் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகிறார்.
- மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான்.
- பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்குக் கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் படி பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
10 வருடங்களாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியை தழுவியுள்ளது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தத்தமது தொகுதிகளில் தோல்வியை தழுவினர். 10 வருடங்களாக ஆம் ஆத்மி வசம் இருந்த டெல்லி தற்போது கைநழுவியுள்ளது.
இதற்கிடையே பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நடந்து வரும் ஆம் ஆத்மியின் பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, பகவந்த் மான் ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவர் பாஜகவுக்கு மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் பிரிவில் விரிசல் ஏற்படக்கூடும் என்று பஜ்வா கணித்ததுள்ளார். மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை உடைத்து பாஜக பக்கம் சாய்ந்ததை போன்ற முடிவை, பகவந்த் மான் தனது அரசியல் எதிர்காலம் கருதி எடுக்கக்கூடும் என்று மறைமுகமாக பஜ்வா தெரிவித்துள்ளார்.
"இந்த மகாராஷ்டிரா விமானம் சண்டிகரில் தரையிறங்கும்போது, ஏக்நாத் ஷிண்டேவாக மாறும் முதல் பயணி பகவந்த் மான் ஆவார்" என்று பஜ்வா கூறினார். மேலும் பஞ்சாபைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும் பஜ்வா கூறியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் - பகவந்த் மான் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து டெல்லி தேர்தலை எதிர்கொண்டிருந்தால் முடிவுகள் மாறியிருக்க அதிக வாய்ப்பிருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
- இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
- துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
பிஜப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் துப்பாக்கி சண்டையில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் சிறப்புப் பணிப் படையைச் சேர்ந்த ஒருவர் என 2 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
கடந்த ஜனவரி 16-ந்தேதி தெற்கு பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகளில் நடந்த என்கவுண்டரில் 12 நக்சலைட்டுகளும், கடந்த 2-ந்தேதி பிஜாப்பூா் மாவட்டத்தின் கங்களூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராகன் திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது.
- டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக "டிராகன்" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் 'ரைஸ் ஆஃப் தி டிராகன்' மற்றும் 'வழித்துணையே' பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

'டிராகன்' திரைப்படம், வருகிற பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில்,டிராகன் படத்தின் டிரெய்லர் பிப்ரவரி 10-ம் தேதி மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
டிராகன் திரைப்படம் வெளியாகும் இதே நாளில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






