என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
    • அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    சண்டிகர்:

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.

    அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    இவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒருவர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவிய இவர்களது பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், செர்பிய வீரர் மெத்ஜெடோவிச் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதுகிறார்.

    • டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்

    இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் நடக்கிறது.
    • கராச்சியில் தொடங்கும் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வரும் 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் துபாயில் அரங்கேறுகிறது.

    கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் (19-ம் தேதி) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 529 ரன்கள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் 173 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

    இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், விராட் கோலி இந்தத் தொடரில் இன்னும் 37 ரன் அடித்தால் 14,000 ரன்களை கடந்த 3-வது வீரராக சாதனை படைப்பார். இந்தத் தொடரில் இன்னும் 263 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    • டெல்லி ரெயில் நிலையத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் 14 மற்றும் 15 நடைமேடைகளில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். பெண்கள் பலர் மயக்கம் அடைந்தனர்.

    கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் குவிந்ததால் டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டது.

    தகவலறிந்து 4 தீயணைப்பு வண்டிகளில் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பத்ம விருதுக்கு தேர்வாகினர்.
    • அவர்களுக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாராட்டு விழா நடைபெற்றது.

    சென்னை:

    இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது.

    அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கிண்டி ராஜ்பவனில் இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடையும், கேடயமும் வழங்கி கவுரவித்தார்.

    நடிகர் அஜித் கார் ரேசில் ஈடுபட்டு வருவதாலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    • முதலில் ஆடிய மும்பை அணி 19.1 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி கடைசி பந்தில் 2 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த மும்பை 164 ரன்களில் ஆல் அவுட்டானது. நாட் சீவர் பிரண்ட் 80 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி 22 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டெல்லி சார்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 18 பந்தில் 43 ரன்கள் குவித்தார். நிக்கி பிரசாத் 35 ரன்னும், சாரா பிரைஸ் 10 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்து டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரனி ஜோடி, சீனாவின் ஜியாங் ஜின்யு-தைவானின் வூ பாங் ஜோடியுடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 7-5, 7-6 (12-10) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது.
    • முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.

    பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ஐதராபாத்தில் தெலுங்கானா காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.

    குஜராத்தில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதி கணக்கெடுப்பு குறித்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் போது பேசிய ரேவந்த் ரெட்டி, மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது. மோடி தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்கிறார்.

    உண்மையில் மோடிஜி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (BC) மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.

    தனது (மோடியின்) சான்றிதழில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று அவர் கூறினார்.

    மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால், 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை ஏன் கண்டறியப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக, ராகுல் காந்தியின் மதம் குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. 

    • தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்கள் இருந்த உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.
    • யாத்ரீகர்கள் உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா வருகிற 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.

    நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான முகாம்கள், உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

    செக்டார் 19 இல் அமைந்துள்ள லவ் குஷ் சேவா மண்டல் முகாமில் இன்று மாலை 6:15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    அதிகாரிகளின் கூற்றுப்படி, தீ விபத்தில் ஏழு கூடாரங்கள், அதில் தங்கியிருத்த யாத்ரீகர்களின் போர்வைகள் உள்ளிட்ட உடைமைகள் எரிந்து எரித்து நாசமாகின.

    தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தீ தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாக்ராஜ் கூடுதல் பொது மேலாளர் பானு பாஸ்கர் தெரிவித்தார்.

    முன்னதாக,

    ஜனவரி 19: செக்டார் 19 இல் உள்ள கீதா பத்திரிகையாளர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 180 கூடாரங்கள் எரிந்து நாசமானது.

    ஜனவரி 30: செக்டார் 22-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து நாசமாயின.

    பிப்ரவரி 7: செக்டார் 18 இல் உள்ள சங்கராச்சாரியார் மார்க்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பந்தல்கள் எரிந்து சாம்பலாயின.

    பிப்ரவரி 15: செக்டார் 18-19 இல் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.

    • ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
    • இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-

    தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

    ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.

    ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.

    25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.

    நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.

    மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.

    இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

    • மோடி AI குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில் நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறுகிறார்கள்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை, ஆனால் இளைஞர்களைப் பணியமர்த்தவும் தொழில்நுட்பத் துறையை முன்னேறவும் வலுவான உற்பத்தித் தளம் தேவை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 9 நிமிட வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ட்ரோன்கள் போர்க்களத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. பேட்டரிகள், மோட்டார்கள் மற்றும் ஒளியியல் ஆகியவற்றை இணைத்து ட்ரோன்கள் போரில் புதிய உத்திகளை உருவாகியுள்ளன.

    ட்ரோன்கள் வெறும் ஒரு தொழில்நுட்பம் மட்டுமல்ல. அவை ஒரு வலுவான தொழில்துறை அமைப்பால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகள்.

    துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் மோடி இதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார். அவர் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து 'டெலிப்ராம்ப்டர்' பார்த்து உரையாற்றும் வேலையில், நமது போட்டியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

    இந்தியாவுக்கு வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை.

    இந்தியாவுக்கு மகத்தான திறமை, வாய்ப்பு மற்றும் உந்துதல் உள்ளது. நமது இளைஞர்களுக்கு வேலைகளை வழங்கவும், இந்தியாவை எதிர்காலத்தில் வழிநடத்தவும் நமக்கு தெளிவான தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான தொழில்துறை வலிமையை உருவாக்க வேண்டும் என்று அதில் பதிவு செய்துள்ளார்.

    இதற்கிடையே இந்திய குடிமக்கள் தங்கள் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள 'ஆவாஸ் பாரத் கி' என்ற முன்னெடுப்பை ராகுல் காந்தி தொடங்கியிருந்தார்.

    இதில் தற்போது AI மற்றும் ட்ரோன்கள் துறையில் பணிபுரிந்தால் அல்லது இந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏதேனும் ஆலோசனை வழங்க விரும்பினால் அதையும் பகிர்ந்து கொள்ளுமாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

    ×