என் மலர்
இந்தியா

மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் அல்ல.. ரேவந்த் ரெட்டி கருத்தால் கொந்தளித்த பாஜக
- மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது.
- முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.
பிரதமர் மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் தெலுங்கானா காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.
குஜராத்தில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதி கணக்கெடுப்பு குறித்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷன் போது பேசிய ரேவந்த் ரெட்டி, மோடி குஜராத் முதல்வராவதற்கு முன்பு வரை அவரது சாதி முன்னேறிய சாதியாக இருந்தது. மோடி தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொள்கிறார்.
உண்மையில் மோடிஜி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் சட்டப்பூர்வமாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (BC) மாற்றப்பட்டுள்ளார். முதலமைச்சரான பிறகு, மோடி ஒரு சட்டத்தை இயற்றி தனது சமூகத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்தார்.
தனது (மோடியின்) சான்றிதழில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவரது மனநிலை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
மோடி பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றால், 2021 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏன் நடத்தப்படவில்லை என்றும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை ஏன் கண்டறியப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ரேவந்த் ரெட்டி கருத்துக்கு பாஜக, ராகுல் காந்தியின் மதம் குறித்து கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது.






