என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு.

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட வார நாட்களை விட விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு அதிகமான மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கிய படுகாயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    முன்னதாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன."

    "காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர்," என பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    • சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் 'மன மித்ரா' என்ற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கி உள்ளது.

    இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேசுவர சாமி கோவிலில் (ஏழுமலையான் சாமி) கோவில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் 'வாட்ஸ்- அப்'பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

    • ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும்.
    • தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2 ஆள் இல்லாத ராக்கெட் மூலம் சோதனை செய்த பின்னர் 3-வது ராக்கெட் ஆள்களை ஏற்றி செல்ல இருக்கிறது. இதில் 3 இந்திய விண்வெளி வீரர்களை விசேஷமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் தாழ்வான பூமி சுற்றுப்பாதையில் அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதை நோக்கமாக கொண்ட திட்டமாகும்.

    இந்த திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட் நடப்பாண்டு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த ராக்கெட்டில் பழ ஈக்களையும் விண்ணில் அனுப்பி சோதனை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உளளனர்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யானின் முதல் பயணத்தில் வானியலாளர்களுடன் இந்தியா பழ ஈக்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 5-60 நாட்கள் என்பதால், அவை ககன்யானின் 5 முதல் 7 நாட்கள் ராக்கெட் சோதனைக்கு ஏற்றதாக இருக்கும். ஈக்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு விண்வெளியில் செலுத்தப்படும், மற்றொன்று 2-க்கும் இடையிலான பகுதியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்தப்படும்.

    தனித்தனி பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள பழ ஈக்களின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும். விண்வெளிப் பயணம் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கிறது? மற்றும் ராக்கெட் பயணத்தின்போது அவை என்ன வகையான உயிரியல் மாற்றங்களையும், அழுத்தங்களை எதிர்கொள்கின்றன? என்பதை மதிப்பிடுவதற்கு பழ ஈக்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ஈக்கள் மனிதனுக்கான மரபணுவை சுமார் 75 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் அவற்றின் உயிரியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் குழு, இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான்-1 ல் பழ ஈக்களை ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
    • கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழு மற்றும் கட்சியின் 2-ம் ஆண்டு துவக்க விழாவையும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுக்குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அப்போது இடம் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா, பொதுக்குழு நிகழ்ச்சிகளை தனித்தனியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வரும் 26-ந்தேதி த.வெ.க. முதலாம் ஆண்டு விழாவையும் அதன் பின் கட்சியின் உட்கட்டமைப்பில் நிர்வாகிகள் நியமனம் முழுமையாக நிறைவு பெற்ற பின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதனால் வரும் 26-ந்தேதி கட்சியின் முதலாம் ஆண்டு விழா மட்டும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சருக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழ் நாட்டிற்கு நிதி அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு பிளாக் மெயில் செய்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

    மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!

    "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

    எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று குறிப்பிட்டுள்ளார். 

    • பிரிக்ஸ் அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
    • பிரிக்ஸில் இணைய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு.

    அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.

    மேலும் உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது. பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது.

    கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது. சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன, மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

    • காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பிக்கிறது.
    • தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.

    புதுடெல்லி:

    காசி தமிழ்ச் சங்கமம் 3.0வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசி சென்றடைந்துள்ளது.

    இந்நிலையில், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

    மகா கும்பமேளா நடைபெறும் இந்த வேளையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.

    தமிழ்நாட்டிற்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான நீடித்த இணைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    முந்தைய இரண்டு பதிப்புகளின் போது ஏற்பட்ட மக்களின் இணக்கமான உணர்வுகளும், அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாசாரத்தின் அழகையும், இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான வலிமையான இணைப்புகளையும் காட்சிப்படுத்தின.

    காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.

    அகத்திய முனிவர் பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன்.

    நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்பதுடன் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கும் செல்வார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற ஆன்மீக தலங்களுக்கு பயணிப்பதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசி பெற்றதாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.

    வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும்.

    தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை அமண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிஸ்மோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

    இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனிஸ்மோவா 6-4, 6-3 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    • இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு 2 நாள் பயணம் வந்துள்ளார்.
    • ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் சென்றார்.

    லக்னோ:

    இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் ஆக்ராவுக்கு இரண்டு நாள் பயணம் வந்துள்ளார்.

    இந்நிலையில், ரிஷி சுனக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் சென்றார். தாஜ்மகாலைப் பார்வையிட்ட அவர், அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கருத்துகளை பதிவிட்டார்.

    ரிஷி சுனக்குடன் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, மகள்கள் மற்றும் மாமியார் சுதா மூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர்.

    இதுதொடர்பாக, ரிஷி சுனக் கூறுகையில், தாஜ்மகாலைப் போல உலகின் சில இடங்கள் ஒன்றிணைக்க முடியும். இதைப் பார்க்கும் குழந்தைகள் மறக்க மாட்டார்கள். அன்பான விருந்தோம்பலுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எங்கள் முழு குடும்பத்திற்கும் மறக்க முடியாத அனுபவம், நன்றி என தெரிவித்தார்.

    முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வருகையை முன்னிட்டு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    • முதல் கட்டமாக 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு கடத்தியது.
    • அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    சண்டிகர்:

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் 104 இந்தியர்களை பிப்ரவரி முதல் வாரத்தில் அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியது.

    அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    அவர்கள் கண்ணியமாக நாடு கடத்தப்படவில்லை, இந்திய அரசு அவர்களை அழைத்து வந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில், இரண்டாவது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.

    இவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா மாநிலத்தையும், 8 பேர் குஜராத் மாநிலத்தையம், 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒருவர் இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

    அமெரிக்காவிற்குள் மெக்சிகோ மற்றும் மற்ற எல்லை வழியாக ஊடுருவிய இவர்களது பாஸ்போர்ட்களை கிழித்து எறிந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

    • பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், செர்பிய வீரர் மெத்ஜெடோவிச் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய செர்பிய வீரர் 6-3, 6-2 என எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 1 வீரரான மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பியாவின் மெத்ஜெடோவிச், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதுகிறார்.

    • டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

    அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்

    இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×