என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இரு இலக்குகளையும் அடைவதற்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.
- மத்திய கூட்டுறவுத்துறையின் மூலம் நாட்டின் பல்வேறு விவகாரங்களில் புரட்சிகர மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மும்பை:
மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற 27-வது மேற்கு பிராந்திய கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார். அவை வளர்ச்சியடைந்த பாரதம் 2047 மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆகியவை ஆகும். இந்த இரு இலக்குகளையும் அடைவதற்கு கூட்டுறவுத்துறையின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.
மத்திய கூட்டுறவுத்துறையின் மூலம் நாட்டின் பல்வேறு விவகாரங்களில் புரட்சிகர மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே சமயம், மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப கூட்டுறவுத்துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
- இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 30 பேர் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறியதாவது:-
ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
- தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு நடிகையான ரூபா கொடுவாயூர் தற்பொழுது எமகாதகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். இப்படம் ஒரு அமானுஷ்ய சம்பவங்களின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியுள்ளார். படத்தை சரங் பிரதார்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
ரூபாவுடன் யூடியூப் பிரபலம் நரேந்திர பிரசாத், ஹரிதா, கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல அமானுஷ்ய காட்சிகள் டிரெய்லரில் அமைந்துள்ளது. கதாநாயகியான ரூபா மர்மமான முறையில் இறக்கிறார். இறந்த உடலில் உயிர் இருக்கும் மாதிரியான காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தை குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.
- நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளால் வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, வெயிலிலும் மழையிலும் தங்கள் கடின உழைப்பினால் விளைவித்த நெல்மணிகளுக்கு உரிய விலை வேண்டி விவசாயிகள் காலங்காலமாகப் போராடி வருகின்றனர்.
குறைந்தபட்ச கொள்முதல் விலையாகக் குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிவரும் வரும் நிலையில், நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு மிகக்குறைந்த கொள்முதல் விலையை மட்டுமே நிர்ணயித்து விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகின்றது.
அதுமட்டுமின்றி, நெல்லின் ஈரப்பதம் 20% வரை அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், இந்திய ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட 17% ஈரப்பத அளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் செய்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகள் விளைவித்துக் கொண்டுவரும் 17% குறைவான ஈரப்பதம் உடைய 40 கிலோ நெல் மூட்டைகளுக்கும், ஈரப்பதத்தினால் ஏற்படும் இழப்பினை காரணம் காட்டி 1½ கிலோ வரை கூடுதலாக எடை நிறுத்தே நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் எடுத்துக்கொள்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதாவது, சராசரியாக 1 மூட்டைக்கு 1½ கிலோவரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்ற வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் பிடித்தம் செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை என்று கூறி 1 கிலோ நெல்லுக்கு 1 ரூபாய் என ஒவ்வொரு 40 கிலோ மூட்டைக்கும் 40 ரூபாய் வரை நெல் கொள் முதல் நிலைய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் வேளாண் பெருமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதன்படி, விவசாயிகள் ஒவ்வொரு மூட்டை நெல்லுக்கும் 1½ கிலோ நெல்லும், 40 ரூபாய் பணமும் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பை உறிஞ்சும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, பாசன நீர்ப் பற்றாக்குறை, இடுபொருட்கள் கிடைக்கப்பெறாமை, உரம் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, பருவகால மாற்றம் எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.
இத்தகு துயர்மிகு சூழலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஊழல் முறைகேடுகளை அரசு அனுமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
17% ஈரப்பதம் என்பது அரசு நிர்ணயித்துள்ள விழுக்காடுதானே? அதனால் ஏற்படும் எடை குறைவையும் அரசுதானே ஏற்க வேண்டும்? அதேபோன்று ஏற்றுக் கூலி, இறக்கு கூலி, வண்டி வாடகை ஆகியவற்றையும் நெல் கொள்முதல் செய்கின்ற தமிழ்நாடு அரசுதானே ஏற்க வேண்டும்? அவற்றையெல்லாம் விவசாயிகள் தலையில் சுமத்துவது எவ்வகையில் நியாயமாகும்? ஏற்கனவே, நெல் உற்பத்தி செலவுக்கு இணையாக, அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் விலையும் உள்ளதால், வேளாண் பெருங்குடி மக்கள் சிறிதும் லாபம் இன்றியே நெல் விவசாயம் செய்து வருகின்றனர். அதனையும் அதிகாரிகள் மூலம் அரசு தட்டிப்பறிப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்து, எவ்வித கையூட்டுக்கும் இடமளிக்காமல் சரியான எடையில், சரியான கொள்முதல் விலையை வேளாண் பெருங்குடி மக்களுக்கு முறையாக வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சக்தி காந்த தாஸை நியமனம் செய்து அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
- சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது நியமனத்தை அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ், மோடியின் பதவிக்காலம் வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியத்தின் பதவி காலமும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
- இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது.
கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை மலையாள பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பேசில் ஜோசஃப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.
திருமணம் ஆன ஹரி கிருஷ்ணன் லாஸ்லியாவுடன் தொடர்பு வைத்துள்ளார். லிஜோமோல் , லாஸ்லியா மற்றும் ஹரி கிருஷ்ணன் இந்த மூவருக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது.
- இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்சினை காரணமாக இரு அணிகளும் நேரடி போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான நிலையில் விளையாட உள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே ஏறக்குறைய அரையிறுதிக்கு செல்வது உறுதியாகி விடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்படுகிறது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் போட்டியை கண்டு ரசிக்குமாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
- இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன்.
- திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் பாடலான காதலே, ஆசம் ஃபீலு மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் தண்ணீர் கேன் வியாபாரம், அதில் உருவாகும் பிரச்சனை யாக கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ளது. டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் விஷ்ணு வரதன் அவர்களது எகஸ் தளத்தில் வெளியிட்டனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை.
- இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர் ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசினார். மேலும் சவுதி அரேபியாவில் அமெரிக்கா, ரஷியாவின் உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அமெரிக்காவின் முந்தைய ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்துவந்த நிலையில் அந்த நிலைப்பாட்டிலிருந்து டிரம்ப் விலகி வருகிறார்.
இதனால் டிரம்பை ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து ஜெலன்ஸ்கியை சர்வாதி காரி என டிரம்ப் கூறினார்.இந்த நிலையில் ஜெலன்ஸ்கியை டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது,
ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நன்றாக இருந்தது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஜெலன்ஸ்கி இருப்பது அவசியமில்லை என்று கருதுகிறேன். அவர் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தையில் கடுமை காட்டி வருகிறார்.
இதனால் நான் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் ஜெலன்ஸ்கியோ வேறு உக்ரைன் அதிகாரிகளோ இடம்பெற வேண்டிய அவசியமில்லை. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டுவர புதினும், ஜெலன்ஸ்கியும் நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும். ஜெலன்ஸ்கியின் பிடிவாதப் போக்கை இனியும் தொடரவிடப்போவதில்லை.
உக்ரைன் எல்லா வகையிலும் ஒரு துணிச்சலான தேசம் என்பதையும் பதிவு செய்கிறேன். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் விரும்புகிறார். அவர் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று தெரிவித்தார்.
உக்ரைனுக்கான ஆதரவு நிலையில் டிரம்ப் விலகி செல்வதையடுத்து ஐரோப்பா தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தி இருந்தனர்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறும்போது, உக்ரைன் போரை நிறுத்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும், பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் எதுவும் செய்யவில்லை என்றார். இதற்கிடையே இந்த இரு தலைவர்களும் அடுத்த வாரம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
- தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பெயரில் 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
'பெற்றோரை கொண்டாடுவோம்' மாநாட்டில் 'அப்பா' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலி மற்றும் விழா மலரையும் அவர் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் தேசிய கல்விக்கொள்கையை ஏற்காமல் இருப்பதே சரி.
தமிழக மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு வைக்கும் வேட்டு புதிய கல்விக்கொள்கை" என்றார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பேருக்கு மேல் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டை சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் "எங்கள் கல்வி எங்கள் உரிமை" என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், " பெற்றோர்கள் தான் நமது முதல் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தான் நமது இரண்டாவது பெற்றோர்" என்றார்.
- அவர்கள் அங்கு இருப்பதை மணல் லாரி ஓட்டுநர் அறிவில்லை
- கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார்
மகாராஷ்டிராவில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபத்தில் 5 தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜல்னா மாவட்டத்தின் ஜாப்ராபாத் தாலுகாவில் உள்ள பசோடி-சந்தோலில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் தொழிலாளர்கள் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கு இருப்பதை அறியாத மணல் லாரி ஓட்டுநர், அவர்களின் கொட்டகையின்மீது லாரியில் இருந்த மணலை இறக்கியுள்ளார். இதில் ஒரு சிறுவன் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
- தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா.
- தற்பொழுது ரியோராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் தவிர்க்க முடியாதவர் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த ஆண்டு இவர் இசையில் வெளியான தி கோட் திரைப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானது. இசையமைப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். தற்பொழுது ரியோராஜ் நடிக்கும் ஸ்வீட்ஹார்ட் திரைப்படத்தை தயாரித்துள்ளார். கடைசியாக விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியான நேசிப்பாயா படத்தில் இசையமைத்தார்.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் #ராண்டம் யுவன் பாட்டு என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதில் நெட்டிசன்கள் அவர்களுக்கு பிடித்த யுவன் பாடல்களின் வீடியோவை பதிவிட்டு இந்த ஹாஷ்டாகை உபயோகித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து யுவன் ஷங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது " யார் இந்த டிரெண்டை ஆரம்பித்தார்கள் என தெரியவில்லை ஆனால் நீங்கள் காட்டும் அன்பில் நான் நெகிழ்ச்சியாக உணர்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






