என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- மார்ச் மாதம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் மூலம் தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உண்மையான ராஜா வாழ்க என எழுதப்பட்டு இருக்கிறது.
- இந்த வீடியோ மிக வேகமாக வைரல் ஆனது.
அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை (HUD) அலுவலகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எலான் மஸ்க்-இன் கால்களை முத்தமிடும் வீடியோ ஒளிபரப்பானதால் பரபர சூழல் உருவானது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவின் மீது "உண்மையான ராஜா வாழ்க" என எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவை உருவாக்கியது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் அரசு அலுவலக தொலைகாட்சியில் இந்த வீடியோ ஒளிபரப்பானது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிலர் இணைய சேவைகள் ஹேக் செய்யப்பட்டு வீடியோ ஒளிபரப்பப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். வெறும் எட்டு நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ மிக வேகமாக வைரல் ஆனது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த HUD துறை செய்தித் தொடர்பாளர் கேசி லொவெட், "வரி செலுத்துவோர் பணம் மற்றும் நேரம் வீண்விரயமானது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.
- தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
- டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை :
தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார்.
- மாற்றுக்கட்சியினர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை 10 மணிஅளவில் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்துள்ளனர். தொடக்க விழாவிற்கு வரும் நிர்வாகிகளுக்கு புகைப்படத்துடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுள்ளது. QR Code-ஐ பயன்படுத்தி அனுமதிக்கப்படும் தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் மாமல்லபுரத்திற்கு வருவதன் காரணமாக அப்பகுதியில் காலையில் இருந்தே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு உரை நிகழ்த்த உள்ளார். தேர்தல் வியூகம், சுற்றுப்பயணம், கூட்டணி உள்ளிட்டவை தொடர்பாக விஜய் உரையாற்றலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, பா.ஜ.க. வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரமாக போராடி காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 பேர் உடல்களை மீட்டனர்.
காரில் வந்தவர்கள் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் செல்வராஜ், மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோரும் காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
செல்வராஜ் குடும்பத்தினர் ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோவிலுக்கு சென்ற போது விபத்து நேரிட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.
- வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழர்களின் தனித்துவமான குணம் என்பது சுயமரியாதை உணர்வு, அதை சீண்டி பார்க்க நினைக்காதீர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் பா.ஜ.க. வஞ்சகம் தொடர்கிறது.
திராவிட இயக்கத்திற்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது; தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாக கருதி அழித்ததில்லை, பிறமொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதனை ஒருபோதும் அனுமதித்ததில்லை.
இந்தியை நீங்கள் திணிப்பதால் எதிர்க்கிறோம். வஞ்சகத்தை எதிர்ப்போம்; வளமான தமிழ்நாட்டை காப்போம் என கூறியுள்ளார்.
- திரிவேணி சங்கமத்தில் கோடிக் கணக்கானோர் புனித நீராடியுள்ளனர்.
- பிரயாக்ராஜில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஏராளமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தந்த நிலையில், அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர உத்தரபிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுபெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது.
கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுக்க தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜிக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது.
- மர்ம நபர் செல்போனில் பேசிய படி காணப்பட்டார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வீட்டில் செருப்புடன் சேர்த்து மர்ம பொருள் வீசி எறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று த.வெ.க. கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற உள்ளதை அடுத்து, விஜய் வீட்டில் மர்ம பொருள் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. செருப்புடன் மர்ம பொருளை வீசிய நபர், செல்போனில் பேசிய படி அங்கிருந்து புறப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.
- உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருப்பாகவும், சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு சுலவேசியை உலுக்கிய 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
- இன்று சுபமுகூர்த்த தினம். மகா சிவராத்திரி.
- திருவண்ணாமலை ஸ்ரீ அரி ஸ்ரீ பிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-14 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி காலை 10.18 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.51 மணி வரை
பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மகா சிவராத்திரி. திருவண்ணாமலை ஸ்ரீ அரி ஸ்ரீ பிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. மூங்கிலணை ஸ்ரீ காமாட்சியமமன் பெருந்திருவிழா. ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்தாசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் கோவில்களில் ஸ்ரீ சிவபெரு மான் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நலம்
மிதுனம்-நன்மை
கடகம்-வெற்றி
சிம்மம்-சுகம்
கன்னி-ஆர்வம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- அமைதி
மகரம்-அன்பு
கும்பம்-விவேகம்
மீனம்-சிறப்பு
- பொதுத்தேர்வு கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- தேர்வு நுழைவுச் சீட்டு காட்டி இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் வீடு அமைந்துள்ள பகுதியில் இருந்து தேர்வு மையத்திற்கு இலவசமாக பயணிக்கலாம். தேர்வு நுழைவுச் சீட்டு காட்டி இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பஸ்களிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.






