என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது.
    • 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை வெப்பம் முன் கூட்டியே பதிவாகத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சூரியன் சுட்டெரித்தது. அந்தவகையில் ஈரோட்டில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), கரூர் 102.2 டிகிரி (39 செல்சியஸ்), மதுரை 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்), சேலம் 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), திருப்பத்தூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்), திருச்சி 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்), வேலூர் 100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) என மொத்தம் 7 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி வரை இதே நிலைதான் நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

    • படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார்.
    • பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.

    தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டி கடைக்காரரிடம் குச்சி ஐஸ் ஒன்றை வாங்கி, கவரை பிரித்துள்ளார். அப்போது அதில் வித்தியாசமாக ஏதோ ஒட்டியிருப்பதைக் கவனித்து உற்றுப் பார்த்தவர் அதிர்ந்து போனார். ஒரு சிறிய பாம்பு ஐஸ் கட்டியில் உறைந்து போய் இருந்தது.

    இதைப் பார்த்தவர் பதறிப் போனார். நல்ல வேளை வாயில் வைத்து சுவைக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். பின்னர் அதை படம் பிடித்து வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பதிவு 9 ஆயிரத்து 100 பேரால் பகிரப்பட்டு வைரலானது.

    பல ஆயிரம் பேர் கருத்து பகுதியில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். கலவையான கருத்துகளை பதிவிட்டனர். ஐஸ்கிரீம் பிரியர்கள்தான் ஐசுக்குள் பாம்பும் இருக்குமா? என்று உறைந்து போயிருக்கிறார்கள்.

    • ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.
    • நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவுடன் நிறைவடைகிறது.

    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.

    அந்த வகையில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தொடங்கியது.

    இந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

    தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.

    • ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.
    • தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

    எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராக்கெட் ஏவுதலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.

    இதையடுத்து தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் உள்ள வான்பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களின் தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ், "ராக்கெட் திட்டமிடப்படாத பிரிதலை எதிர்கொண்டு அதன்பிறகு அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட் வெடித்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது," என தெரிவித்துள்ளது.

    ஸ்டார்ஷிப் ராக்கெட் தோல்விக்கான மூல காரணத்தை நன்கு புரிந்து கொள்ள இன்றைய விமான சோதனையில் இருந்து தரவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். எப்போதும் போல, நாம் என்ன கற்றுக் கொள்கிறோமோ அதில் இருந்து தான் வெற்றி கிடைக்கும். அந்த வகையில், இன்றைய சம்பவம் ஸ்டார்ஷிப் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த நமக்கு கூடுதல் பாடங்களை கற்பிக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.



    • ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
    • சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    நாட்டில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கும், 150-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56-வது ஆண்டு விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள இந்த படையின் மண்டல பயிற்சி மையத்தில் இன்று நடைபெறுகிறது.

    விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். விழாவில் அவர், ஜம்மு-காஷ்மீரில் 32 அறைகள் அடங்கிய சி.ஐ.எஸ்.எப்-ன் முகாம் அலுவலகம், கொல்கத்தாவில் ஆயுதங்கள் வைப்பிடம், நொய்டாவில் 240 வீரர்களுக்கான குடியிருப்பு, சிவகங்கையில் உள்ள 4-வது பட்டாலியன் பிரிவில் 27 அதிகாரிகள் தங்கும் விடுதி மற்றும் 128 வீரர்களுக்கான குடியிருப்பு, ஐதராபாத்தில் தீயணைப்பு நிர்வாக கட்டிடம் ஆகிய பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் அவர், காணொலி வாயிலாக, குஜராத் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து சி.ஐ.எஸ்.எப். வீரர்களின் கன்னியாகுமரி வரையிலான 6,553 கி.மீ. தொலைவிலான சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சி.ஐ.எஸ்.எப். இயக்குனர் ஜெனரல் ஆர்.எஸ்.பாட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது.
    • தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது.

    ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது.

    அப்போதெல்லாம், இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை நிறுத்தவில்லை.

    பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது.

    'இந்தி திவஸ்' கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பா.ஜ.க.வினரும் தெரிவிக்கிறார்கள்.

    இதன் உள்நோக்கத்தைத் தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான் எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

    தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பா.ஜ.க. வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்குக் குறைவாக இருக்கிறார்கள்?

    இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில நெறியாளரிடம் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் - என் அன்பிற்குரிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வைத்தார்.

    ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, அன்னைத் தமிழைக் காத்திடச் சூளுரைத்துள்ள தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியினர் முழுமையாக இணைந்து நிற்கிறனர். அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்தக் கட்சிகள் அனைத்திற்கும் என் நன்றி.

    தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.

    தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன், உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன்.

    இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்!

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 



    • டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.
    • ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார் மதுபான நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்நிலையில் டாஸ்மாக் அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக தொடர்கிறது.

    சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்.என்.ஜே. டாஸ்மாக் ஒப்பந்ததாரர் தலைமை அலுவலகம், எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

    ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

    கால்ஸ் மதுபான ஆலையில் நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-23 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நண்பகல் 2.03 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: மிருகசீர்ஷம் பின்னிரவு 3.38 மணி வரை பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் காவடி உற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-சிறப்பு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-வரவு

    கன்னி-போட்டி

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- உறுதி

    மகரம்-வரவு

    கும்பம்-செலவு

    மீனம்-வாழ்வு

    • காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை தள்ளிவிட்டனர்.
    • இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின் போது சத்தம் இல்லத்தில் அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பிரிட்டன் வெளியுறவு துறை அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சத்தம் இல்லத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சத்தம் இல்லத்தில் இருந்து வெளியேறிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கிய ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில், அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கி ஓடிவந்த காலிஸ்தான் ஆதரவாளரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்த பாரிகார்டு அருகே தள்ளிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    "வெளியுறவுத் துறை அமைச்சரின் பிரிட்டன் வருகையின் போது சத்தம் இல்லத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கு பிரிட்டன் அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. எனினும், பொது நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுப்பது அல்லது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஈடுபட்டனர். எங்களது தூதரக விருந்தாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



    • தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • மீனவர்களின் விசைப்படகையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி பாம்பன் மீனவர்கள் 14 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை மன்னார் தெற்கு கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர்.

    முதல்கட்ட விசாரணைக்கு பின் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்கள் 14 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

    இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    ஜப்பான் வீராங்கனையும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.

    இதில் நவோமி ஒசாகா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகியவை மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
    • அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட மாநிலங்கள் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கின்றன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அனைத்து மாநில அரசுகளும் ஏற்று அமல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், இதுதொடர்பாக பா.ஜ.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

    தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளி கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை எளிய பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை திட்டம்.

    இதனை அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஏற்க மறுக்கின்றன. மத்திய அரசு கொண்டுவரும் சட்ட திட்டம் அனைத்து மாநில அரசுகளுக்கும் பொருந்துவது என்பது மட்டுமின்றி, அத்தகைய கொள்கையை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

    இலவச கல்வி என்பது அரசியலமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமை. இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதினால் மாநில அரசு, சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×