என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
    • அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் சுடசுட தயாராகி வருகிறது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    'NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • MGNREGA நிதி ரூ.4034 கோடி தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
    • 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற "தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் "திமுக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது, "தமிழ்நாடு மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை ஒன்றிய அரசிடம் பெற வேண்டும்" என்றும்; அத்துடன் 'ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்பிட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    தலைவர் அறிவுரைக்கிணங்க, "ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காதது குறித்து நேற்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் - தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட (MGNREGA) நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் 29.3.2025 சனிக்கிழமை காலை அனைத்து திமுக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலை வாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்ட திமுக நிர்வாகிகள் - திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், திமுக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள்- நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு துரைமுரகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.
    • இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்"

    உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிக்கப்பட்ட ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. வாழ் மதுபிரியர்கள் ஒயின் ஷாப்களுக்கு படையெடுத்து வருகின்றனர். நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்கும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விவகாரம் உ.பி. பாஜக அரசு மீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் கலால் துறையின் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விதிகளின்படி, மதுபான ஒப்பந்ததாரர்கள் தங்கள் முழு இருப்பையும் அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும்.

    இல்லையெனில் மீதமுள்ள மதுபானங்கள் அரசாங்கக் கணக்கில் சேர்க்கப்படும் மற்றும் அதன் விற்பனை தடை செய்யப்படும். இந்தக் காரணத்திற்காக, மதுபான விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ஆஃபரை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து நோய்டாவை ஒட்டியுள்ள தலைநகர் டெல்லி அரசியலிலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது.

    இந்த வீடியோவை பகிர்ந்து பதிவிட்டுள்ள டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவருமான அதிஷி, "நீங்கள் ஒரு பாட்டில் இலவச மதுபானத்தைப் வழங்குகிறீரங்கள்… இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இப்போது பாஜகவினர் வருவார்கள் என நம்புகிறேன். இந்த ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதம் வரை சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு.
    • தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரூ.8000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த இரு வெளிநாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் சாதகமான சூழல் இல்லை என்று கூறி, ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கின்றன.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக திமுக அரசு கூறி வந்த நிலையில், தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கேரியர் என்ற உலகின் முன்னணி குளிரூட்டி நிறுவனம் அதன் உற்பத்தி மையத்தை சென்னை புறகரில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்போது சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீ சிட்டி பகுதியில் அமைக்க முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திர அரசுடன் விரைவில் கையெழுத்திடவுள்ளது.

    அதேபோல், தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி நிறுவனம் தென்னிந்தியாவில் ரூ. 5000 கோடி மதிப்பில் அதன் முதல் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தை விட ஆந்திரத்தில்தான் முதலீட்டு சூழல் சிறப்பாக இருப்பதாகக் கூறி அங்கு முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. அதனால், அதற்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் 6 நிறுவனங்களும் ரூ.2000 கோடி மதிப்பிலான தங்களின் உற்பத்தி ஆலைகளை ஸ்ரீசிட்டியில் அமைக்க முடிவு செய்துள்ளன.

    தொழில் தொடங்குவதற்கான அனுமதி ஆந்திரத்தில் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதால்தான் இந்த நிறுவனங்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்கள் அதற்கான அரசின் அனுமதியையும், ஒப்புதலையும் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அவை உண்மை என்பதை தமிழ்நாட்டுக்கு வந்திருக்க வேண்டிய இரு முதன்மை நிறுவனங்களும், 6 துணை நிறுவனங்களும் ஆந்திராவுக்கு சென்றிருப்பது காட்டுகிறது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலீடுகளை ஈர்க்கும் திறன் தமிழ்நாட்டுக்கு குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.

    தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை தமிழக அரசு செய்யவில்லை என்பதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதலீடுகள் குவிவதைப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய திராவிட மாடல் அரசு மறுக்கிறது.

    எனவே, பயனற்ற செய்வதை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, வெளிநாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வைப்பொறுத்தவரை தி.மு.க.வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.
    • தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து மனு கொடுத்தோம்.

    * அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை தி.மு.க.-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

    * தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. எல்லா முயற்சிகளும் எடுக்கும்.

    * தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்றார்.

    இதனிடையே, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என்று கூறினார். 

    • அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும்.
    • வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந்தேதி அன்று அவரவர்களின் வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 2-ந்தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    • நீஷம் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
    • செய்ஃபர்ட் 38 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசினார்.

    பாகிஸ்தான் அணி ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.

    நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சல்மான் ஆகா தாக்குப்பிடித்து 39 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதாப் கான் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 11 ரன் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் நீஷம் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டும், பென் சியர்ஸ் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் அபாரமாக விளையாடினார் மறுமுனையில் பின் ஆலன் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சாப்மேன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். செய்ஃபர்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 97 ரன்கள் விளாச நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபர்ட் 6 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியுள்ளது. நீஷம் ஆட்டநாயகன் விருதம், டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

    • மேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
    • ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.

    பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.

    • 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று ராகுல் காந்தி குற்றசாட்டு
    • ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது.

    மக்களவையில் தனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    மக்களவையின் கண்ணியத்தை நிலைநிறுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளை ராகுல் காந்தி பின்பற்றவேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டு கொண்டார். சபாநாயகர் இந்தக் கருத்தைச் எதற்காக கூறினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை.

    சபாநாயகர் கூறியது குறித்து பேசிய ராகுல் காந்தி, "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரிடம் என்னை பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் என்னைப் பேச விடவில்லை. அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற தகவலை கூறினார். பின்னர் தனக்கு பேச வாய்ப்பளிக்காமல் அவையை ஒத்திவைத்தார்.

    மக்களவையில் நான் எழுந்து நிற்கும் போதெல்லாம், எனக்குப் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. 7-8 நாட்களாக எனக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லை. அன்று, பிரதமர் மோடி, கும்பமேளா பற்றிப் பேசினார். நான் அதில் கூடுதல் தகவல்களை கூற விரும்பினேன். வேலையின்மை பற்றிப் பேச விரும்பினேன், ஆனால் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜனநாயக விரோத முறையில் மக்களவை நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், சபாநாயகரைச் சந்தித்து இது குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை.
    • வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்பட பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த சங்கத்தில் சுமார் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக சுமார் 6 ஆயிரம் டேங்கர் லாரிகள் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகின்றது.

    குறிப்பாக பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இந்த லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் பழைய ஒப்பந்த காலம் முடிவடைகிறது. அடுத்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 2025-ம் ஆண்டு முதல் 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தது.

    அதில் பல்வேறு விதிமுறைகள் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக சங்க உறுப்பினர்களுடன் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தி ஆலோசனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில விதிமுறைகளை தளர்த்துமாறு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எண்ணெய் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளில் சாதகமாக ஏதும் இல்லை. பாதகமாகத்தான் உள்ளது. விதிமுறைகளை தளர்த்த நாங்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. புதிய ஒப்பந்தத்தின் விதிமுறையால் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தில் எங்களால் டேங்கர் லாரிகளை இயக்க முடியாது. அதனால் நாளை (27-ந்தேதி) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். 4 ஆயிரம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயங்காது. எரிவாயு ஏற்றும் 10 இடங்களில் லோடுகளை ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பிற மண்டலத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம. அவர்களும் போராட தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×