என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட கைகர் மாடல் காரை இந்திய சந்தையில் ரூ.6.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் சற்றே சக்திவாய்ந்த டர்போ வேரியண்ட் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிரைபர் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்தைத் தொடர்ந்து எஸ்யூவியின் சமீபத்திய மாடல் வருகிறது.
இந்திய சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எஸ்யூவிகளில் ஒன்று கைகர். தோற்றத்தில் தொடங்கி, ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் அதன் முந்தைய மாடலை விட சிறிதளவு மாற்றங்களுடன் வருகிறது. இது இப்போது மெலிதான கிரில்லைச் சுற்றி டி.ஆர்.எல்.களுக்கான நேர்த்தியான வடிவமைப்புடன் வித்தியாசமான கவர்ச்சியை வழங்குகிறது.
மையத்தில் நிறுவனத்தின் புதிய லோகோ இடம்பெற்றிருக்கிறது. மேலும், ஃபாக் லேம்ப்-களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட பம்பருடன், ஹெட்லேம்ப் ஹவுசிங்கின் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், 16 இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய வடிவமைப்புடன் வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றம் அப்படியே உள்ளது. இவை அனைத்தும் ஒரு புதிய பச்சை நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
உட்புறத்தில், புதுப்பிக்கப்பட்ட எஸ்யூவி கிட்டத்தட்ட அதே அமைப்பைப் பெறுகிறது. எனினும், டேஷ்போர்டில் பிளாக் மற்றும் கிரே நிறங்களைக் கொண்ட புதிய டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயமாக, 8 இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த எஸ்யூவி-க்கான அம்சங்களின் பட்டியலில் வென்டிலேட் செய்யப்பட்ட முன் இருக்கைகள், 360-டிகிரி கேமரா, ஆட்டோ விளக்குகள் மற்றும் வைப்பர்கள், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் பல உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக, இந்த எஸ்யூவி-இல் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக, ESP, டயர் பிரஷர் மானிட்டர், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் பல போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் ஃபேஸ்லிஃப்ட் இப்போது 72 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் மற்றும் 100 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் எஞ்சின் AMT உடன் கிடைக்கிறது, அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் எஞ்சின் CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
- பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.
கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது.
- சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
சென்னை:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை கொடுத்து வருகிறார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்லும் பொருட்களுக்கு50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இந்திய பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 100 அமெரிக்க டாலர்களுக்கு மேலான இந்திய பொருட்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அமெரிக்காவில் சுங்க வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் சுமார் ரூ.70 ஆயிரம் (800 டாலர்) வரையிலான பொருட்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும் 29-ந்தேதி முதல் அனைத்து தபால் பொருட்களுக்கும் அதன் மதிப்புக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சுமார் 9 ஆயிரம் மதிப்புள்ள (100 டாலர்) பொருட்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் இந்தியா அதிர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் இந்திய பார்சல்களை அனுமதிக்க கூடாது என்று சுங்கத்துறை அறிவித்தது. அமெரிக்காவின் சுங்கத்துறையால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெளிவான விவரங்கள் இல்லாததால் நாடு முழுவதும் இன்று முதல் பார்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய தபால் துறை இந்த அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தபால் நிலையங்களில் அமெரிக்காவுக்கு பார்சல் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடும்பங்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அமெரிக்காவை தவிர மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை நடந்தது. ஆனால் அமெரிக்காவில் உள்ள எந்த நகரங்களுக்கும் தமிழகத்தில் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் உள்ள 2000 தபால் அலுவலகங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் பதிவு செய்வது வழக்கம். சென்னையில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம், கடற்கரை தபால் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலங்களிலும் அமெரிக்காவுக்கு பார்சல் பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அதிகாரி கூறியதாவது:-
தமிழகத்தில் அஞ்சல் துறைக்கு சொந்தமான 200 தபால் அலுவலகங்கள் உள்ளன. அந்த அலுவலகங்களில் எல்லாம் இன்று முதல் அமெரிக்காவுக்கு மட்டும் பார்சல் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிடம் இந்திய அரசு தெளிவான தகவல்களைப் பெற்று கூடுதலாக வரி விதிப்பு பற்றிய முழு விவரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள். மத்திய அரசிடம் இருந்து இது பற்றிய தகவல் வந்த பிறகுதான் பார்சல் சேவை தொடங்கும். அதுவரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுக்கு பார்சல் சேவை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் சனிக்கிழமை வரை பதிவு செய்த பார்சல்கள் 29-ந்தேதிக்கு முன்னதாக சென்று விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்சல் சேவை அமெரிக்காவுக்கு நிறுத்தப்பட்டதால் அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து மளிகை பொருட்கள், துணிமணிகள், தின்பண்டங்களை உறவினர்கள் அனுப்புவது வழக்கம். அதிகபட்சமாக 20 கிலோ பார்சல் வரை அனுப்புவதற்கு அனுமதி உண்டு.
அமெரிக்காவிற்கு 20 கிலோ பார்சல் அனுப்புவதற்கு ரூ.17,440 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண பார்சல் ஆகவும், ஸ்பீட் போஸ்ட் பார்சல் ஆகவும் ரெண்டு பிரிவாக பதிவு செய்யப்படுகிறது.
இந்திய தபால் துறையிடமிருந்து அடுத்த கட்ட தகவல் வரும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்ப முடியாமல் உறவினர்கள் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
- அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சார்பில் தங்கள் கட்சி கொடியை அகற்றுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சவுந்தர், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார். அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார்.
மேலும் தற்போது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சொகுசு பன்க்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் வாழ்ந்து வந்தது அந்த பங்களாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
EMI கட்டாததால் பங்களாவை ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விடப்பட்டது. ஆனால் அதனை வாங்க ரவி மோகன் தரப்பு மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் மீது படத்திற்கு ஒப்பந்தம் செய்து 6 கோடி ரூபாய் முன் பணம் வாங்கியும் படத்திற்கு நடிக்க வராமல் கால் ஷீட் கொடுக்காமல் இருக்கிறார் என அந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை...
- எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்...
சென்னை:
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
தன்னுடைய உணர்ச்சிமிகு நடிப்பால் வெகுஜன மக்களை ஈர்த்த திரை ஆளுமை,
எளிய மக்கள் மீது உண்மையான அக்கறையோடு செயல்பட்ட பண்பாளர்,
தனது கடின உழைப்பால் பொதுவாழ்விலும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், உள்நோக்கமற்ற அவரின் ஈகை குணத்தையும், மறைந்தும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும் அவர் மீதான அன்பையும் நினைவுகூர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
- மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தே.மு.தி.க.வின் "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0" வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 2.45 மணிக்கு கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாசார் கிராமத்தில் நடைபெறுகிறது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் மெத்வதேவ், பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தில் பெஞ்சமின் வெற்றி பெற்றார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான மெத்வதேவ் (ரஷியா) இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெஞ்சமின் போன்சி 6-3, 7-5, 6-7, (5-7), 0-6, 6-4 என்ற செட் கணக்கில் மெட்வதெவை போராடி வீழ்த்தினார்.
தோல்வியால் விரக்தியடைந்த மெத்வதேவ் தனது டென்னிஸ் பேட்டை அடித்து உடைத்தார். சிறிது நேரம் அமைதியாக சுற்றி பார்த்து விட்டு மீண்டும் பேட்டை அடித்து உடைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.
அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.
108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
- சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் குறைந்தபாடில்லை.
காதல் திருமணங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துள்ளன. ஆனாலும் காதல் திருமணங்களை நம் சமூகம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் ஆணவக்கொலை செய்யப்படும் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், சாதி மாறி காதலிக்கும் ஜோடிகள் சிபிஎம் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்ய தனி ஏற்பாடு இல்லை. காதலர்களுக்காக மார்க்ஸிஸ்ட் அலுவலகங்கள் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.
- சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகள் எந்தவிதத்திலும் மாசு அடையாது.
- களிமண் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எடை அதிகமாக இருக்கும்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாரம்பரிய இசையை இனிதாய் அளித்திடும் கடம் முதல் மண்பானைகள், அகல் விளக்குகள், குடிநீர் பாண்டம் என வியக்க வைக்கும் வகையில் தயாராகும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை வாங்க தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வீடுகள் தோறும் வைத்து வழிபடும் வகையில் களிமண் மூலம் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மானாமதுரை ராம் நகரில் உள்ள கோவில்களுக்கு சுவாமி சிலைகள் வடித்து கொடுக்கும் சிற்பி முத்துராமலிங்கம் என்பவர் சுற்றுசூழல் பாதிப்படையாத வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு பொருட்களை வைத்து 5 அடி முதல் 10 அடி வரையிலான வித, விதமான விநாயகர் சிலைகளை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆர்டரின் பேரில் வடிவமைப்பு செய்து வருகிறார். ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இந்த சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.
களி மண்ணால் ஆன சிலைகள் ரூ.10 ஆயிரம் முதலும், பிளாஸ்ட் ஆப் பாரீஸ் எனப்படும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ரூ.25 ஆயிரம் முதலும் விற்பனையாகும்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு கூறிய விதிமுறைகள் பின்பற்றி மரவள்ளிக்கிழங்கு மாவு பொருளை வைத்து விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது. இந்த சிலைகள் மிகவும் தத்ரூபமாக உள்ளதாலும், விலை குறைவு என்பதாலும் பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதற்காக ரசாயணம் மற்றும் பெயிண்ட் ஏதும் இல்லாமல் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை விழாவில் பயன்படுத்தப்படும் கலர் பொடிகளை மட்டும் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
இவ்வாறு தயார் செய்வதால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகள் எந்தவிதத்திலும் மாசு அடையாது. களிமண் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எடை அதிகமாக இருக்கும். அதனை பக்குவமாக வாகனங்களில் கொண்டு செல்ல சிரமம் ஏற்படும். நான் மரவள்ளிக்கிழங்கு மாவு பொருளை வைத்து தயார் செய்து அனுப்பி வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் எளிதாக கரையும். அதுமட்டுமின்றி அவை கரைந்த பின்னர் மீன்களுக்கும் உணவாகும் என்றார்.
- இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
- இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.
கிராமத்து பின்னணியுடைய படங்கள் மிகவும் அரிதாகி விட்டன. இதை எடுக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே எனலாம். கிராமத்து பின்னணி படங்களை முதன்மையாக எடுப்பதில் கைத்தேர்ந்தவர் இயக்குநர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன்,குட்டி புலி,விருமன், போன்ற படங்களே இதற்கு சாட்சி.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த கொம்பனும்,விருமனும் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆர்யா நடித்து வெளியான 'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாக தனது மகனை அறிமுகப்படுத்த இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு சுள்ளான் சேது என தலைப்பு வைத்துள்ளனர்.
மேலும் படத்தில் சமுத்திரகனி மற்றும் பிரிகிடா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி படத்தின் டீசர் வரும் 27 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் இசையை ஜென் மார்டின் மற்றும் ஜிப்ரான் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






