என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்
    X

    மரவள்ளிக்கிழங்கால் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்

    • சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகள் எந்தவிதத்திலும் மாசு அடையாது.
    • களிமண் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எடை அதிகமாக இருக்கும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிக அளவில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. பாரம்பரிய இசையை இனிதாய் அளித்திடும் கடம் முதல் மண்பானைகள், அகல் விளக்குகள், குடிநீர் பாண்டம் என வியக்க வைக்கும் வகையில் தயாராகும் மானாமதுரை மண்பாண்ட பொருட்களை வாங்க தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

    தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வீடுகள் தோறும் வைத்து வழிபடும் வகையில் களிமண் மூலம் சிறிய, பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மானாமதுரை ராம் நகரில் உள்ள கோவில்களுக்கு சுவாமி சிலைகள் வடித்து கொடுக்கும் சிற்பி முத்துராமலிங்கம் என்பவர் சுற்றுசூழல் பாதிப்படையாத வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு பொருட்களை வைத்து 5 அடி முதல் 10 அடி வரையிலான வித, விதமான விநாயகர் சிலைகளை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஆர்டரின் பேரில் வடிவமைப்பு செய்து வருகிறார். ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இந்த சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    களி மண்ணால் ஆன சிலைகள் ரூ.10 ஆயிரம் முதலும், பிளாஸ்ட் ஆப் பாரீஸ் எனப்படும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் ரூ.25 ஆயிரம் முதலும் விற்பனையாகும்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு கூறிய விதிமுறைகள் பின்பற்றி மரவள்ளிக்கிழங்கு மாவு பொருளை வைத்து விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகிறது. இந்த சிலைகள் மிகவும் தத்ரூபமாக உள்ளதாலும், விலை குறைவு என்பதாலும் பலர் ஆர்டர் கொடுத்து உள்ளனர். இதற்காக ரசாயணம் மற்றும் பெயிண்ட் ஏதும் இல்லாமல் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை விழாவில் பயன்படுத்தப்படும் கலர் பொடிகளை மட்டும் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

    இவ்வாறு தயார் செய்வதால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகள் எந்தவிதத்திலும் மாசு அடையாது. களிமண் மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் எடை அதிகமாக இருக்கும். அதனை பக்குவமாக வாகனங்களில் கொண்டு செல்ல சிரமம் ஏற்படும். நான் மரவள்ளிக்கிழங்கு மாவு பொருளை வைத்து தயார் செய்து அனுப்பி வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் எளிதாக கரையும். அதுமட்டுமின்றி அவை கரைந்த பின்னர் மீன்களுக்கும் உணவாகும் என்றார்.

    Next Story
    ×