என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
    • குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன்.

    சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.

    மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது.

    இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.  

    • இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று இராணுவ அணிவகுப்பை நடத்தியது.
    • சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினர்.

    இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது அமெரிக்க அதிபர்  டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார் என்று டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

    தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுதொடர்பாக டிரம்ப், "நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று கிண்டலாக பதிவிட்டார்.

    மேலும், இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியதாகவும், ஜின்பிங் அரசாங்கம் அந்த தியாகங்களை மதிக்கிறதா என்றும் டிரம்ப் வினவினார்.

    சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும், சீனா அவர்களின் தைரியத்தையும் தியாகங்களையும் நினைவில் கொள்ளும் என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறினார். 

    • தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லி மற்றும் பஞ்சாப் பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது.

    டெல்லியில் யமுனை நதி அபாய அளவைத் தாண்டி ஓடி வருவதால், பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தெருக்கள் நீரோடைகளாகவும், சந்தைப் பகுதிகள் குளங்களாகவும் மாறி வருகின்றன.

    மஞ்சு கா தில்லா-விலிருந்து மதன்பூர் காதர் மற்றும் பதர்பூர் வரை வசிக்கும் பல குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளன.

    இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி யமுனை நதி 207 மீட்டர் உயரத்தை எட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். பலர் சாலைகளில் அமைக்கப்பட்ட சிறிய கூடாரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    • இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
    • நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

    இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

    இதற்கிடையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் அவற்றை அறிவித்தார்.

    அதன்படி, "5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன.

    5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    மேலும் 5, 18 சதவீதத்துடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரிவிதிப்பும் அமையும். இதைத்தவிர்த்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12%  ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், பிரட், பன்னீர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

    அனைத்து மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். டிராக்டர்கள், வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

    வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்" என்று தெரிவித்தார். 

    • உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி.
    • இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது.

    இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது.

    தனுஷின் 'இட்லி கடை' படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயன்ட் நிறுவனம் உறுதிசெய்தது. மேலும், இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

    இந்நிலையில், இன்பநிதிக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், திமுகவினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
    • கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம்.
    • பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரிட்டனில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இதில், வில்சன் பவர் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. திருப்பூர், நாமக்கல்லில் முதலீடு செய்வதன் மூலம் 543 புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    பிரிட்டானியா ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    மேலும், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தனது செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடல்சார் மேலாண்மை, காப்பீடு, கப்பல் கண்காணிப்பு பகுப்பாய்வு ஆகிய வற்றுக்காக லாயிட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்தது.

    சண்டிகர்:

    வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

    சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, வெள்ளம் காரணமாக செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது.

    ஹராரே:

    இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா-குசால் மெண்டிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    பதும் நிசங்கா அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 38 ரன்னில் வெளியேறினார். இதற்கு பின் விரைவில் விக்கெட்கள் விழுந்ததால் இலங்கை அணி தடுமாறியது.

    கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிரடி காட்டினார். அவர் 16 பந்தில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
    • அதிபர் ஜி ஜின்பிங் தியான்மென் சதுக்கத்தில் நடந்துசென்று வீரர்களுடன் கைகுலுக்கினார்.

    பீஜிங்:

    இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80-வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் சீனா இன்று மிக பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை நடத்தியது. இந்த அணிவகுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தியான்மென் சதுக்கத்தில் நடந்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங், தியான்மென் சதுக்கத்தில் நடந்து சென்று வீரர்களுடன் கைகுலுக்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மியான்மர், ஈரான், மங்கோலியா, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், நேபாள பிரதமர், மாலத்தீவு அதிபர், மலேசியா, இந்தோனேசியா, ஜிம்பாப்வே, மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் உள்பட 26 நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டனர்.

    சீனா முதல் முறையாக நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தியது. போர் விமானங்கள், பிரமாண்டமான போர் டாங்கிகள், அதிவேக ஏவுகணைகள், ரோபோ டிரோன்கள் உள்ளிட்டவைகளின் அணிவகுப்பு நடந்தது. சீனா தனது ராணுவ ஆயுத பலத்தை உலகுக்கு காட்டும் வகையில் இந்த அணிவகுப்பை நடத்தியது.

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது என தெரிவித்தார்.

    • 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
    • மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, விக்டோரிஸ் என்கிற புதிய எஸ்யுவி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    ப்ரீமியம் எஸ்யூவி காரை விரும்புவோருக்கு இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கார் மாருதி பிரெஸ்ஸா காரை விட பெரியது, மாருதி கிராண்ட் விட்டாரா காரை விடச் சிறியதாகும்.

    மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் என இரண்டு விருப்பங்களில் கார் கிடைக்கிறது. இதேபோல், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் அல்லது சிவிடி தேர்விலும் விக்டோரிஸ் கார் கிடைக்கிறது.

    Bharat NCAP தர குறியீடு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கன பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.

    இந்த காரில் மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான இருக்கைகள், பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    மேலும், 360 டிகிரி கேமரா உள்பட 60க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல பிரீமியம் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாளராக இது கருதப்படுகிறது.

    மாருதி சுசூகியின் விக்டோரிஸ் காரின் விலை குறித்து அறிவிக்கப்படவில்லை. என்றாலும், பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய விக்டோரிஸ் காரின் விலை சுமார் 10- 11 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    • நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.
    • நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

    அதன்படி, சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில்," நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×