search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTVDhinakaran"

    அமமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை டிடிவி தினகரன் வெளியிட்டார். #LSPolls #TTVDhinakaran #AMMK
    சென்னை:

    டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணி பலம் எதுவுமின்றி எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் சேர்ந்து போட்டியிடுகிறது.

    எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்துள்ள அ.ம.மு.க. மற்ற 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதுபோல 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி.தினகரன் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ந்தேதி டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதில் 24 பாராளுமன்ற, 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

    9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட் டியலை வெளியிட்டார்.

    இந்த 2-ம் கட்ட பட்டியலில் தமிழகத்தில் 14 பாராளுமன்ற தொகுதிக்கும், 8 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    1. வடசென்னை- சந்தான கிருஷ்ணன் (வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்)

    2. அரக்கோணம்- பார்த்திபன் (வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)

    3. வேலூர்- பாண்டு ரங்கன் (முன்னாள் அமைச்சர்)

    4. கிருஷ்ணகிரி- கணேசகுமார் (கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர்)

    5. தர்மபுரி- பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)

    6. திருவண்ணாமலை- ஞானசேகர் (வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்)

    7. ஆரணி- செந்தமிழன் (முன்னாள் அமைச்சர்)

    8. கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன் (விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்)

    9. திண்டுக்கல்-ஜோதி முருகன் (தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள்)

    10. கடலூர்- கார்த்திக் (கழக பொறியாளர் அணி செயலாளர்)

    11. தேனி-தங்க தமிழ்ச் செல்வன் (கழக கொள்கை பரப்புச் செயலாளர்)

    12. விருதுநகர்-பரமசிவ ஐயப்பன் (கழக அம்மா பேரவை இணைச் செயலாளர்)

    13. தூத்துக்குடி- டாக்டர் புவனேஸ்வரன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளர்)

    14. கன்னியாகுமரி- லெட்சுமணன் (புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்).

    தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.



    தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருந்தார். டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பட்டது.

    ஆனால் தேனி எம்.பி. தொகுதிக்கு அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சிலரும் பாராளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் சட்டசபை இடைத்தேர்தலில் புதுமுகங்களுக்கு டி.டி.வி. தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார்.

    இன்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், பழனியப்பன், செந்தமிழன் ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி, தர்மபுரி, சோளிங்கர் தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். #LSPolls #TTVDhinakaran #AMMK
    அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும் என்று அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ADMK #TTVDhinakaran

    விழுப்புரம்:

    அம்ம மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, தியாக துருகத்தில் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-‘

    18 எம்.எல்.ஏ.க்களின் தீர்ப்பு சாதகமாக வரும் என்று நினைத்தோம். ஆனால் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனினும் மக்கள் தீர்ப்பு வழங்கும் வாய்ப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலும், அதனோடு சேர்ந்துவரும் 20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வர இருக்கிறது.

    இதில் 8 தொகுதிகளில் பழனிசாமி அணி வெற்றி பெற முடியவில்லை எனில் இந்த ஆட்சி தானாகவே முடிவுக்கு வந்துவிடும் நிலை ஏற்படும். இந்த ஆட்சியாளர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. காரணம் அவ்வளவு எதிர்ப்பாக இந்த ஆட்சியின் மீது வெறுப்பாக உள்ளனர்.

    ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் இங்கே ஆட்சியில் இருப்பவர்கள் பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டு வந்தாலாவது தலை தப்பிக்குமா? என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் ஆளும் கட்சியொடு சேர்ந்து வரப்போகின்ற அனைவருமே, ஆளும் கட்சியை போன்று பூஜ்ஜியமாகப் போகிறார்கள்.

    எத்தனை கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வந்தாலும் இவர்களால் வெற்றிபெற முடியாது. டெபாசிட் பெறுவதே கடினம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதி இல்லை என்பவர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு 2 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் சம்பளம் வழங்குகிறார்கள்.

    மக்கள் இந்த ஆட்சியை விரும்பாததால் இருக்கும் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்ற காரணத்தினால் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தால் போதும் என்று சட்டமன்ற உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவது போல 8 கோடி தமிழக மக்களின் நலனில் இவர்கள் அக்கறை காட்டவில்லை.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து ஏற்கனவே தொழில் எல்லாம் பாதிக்கப்பட்ட நிலையில் பணமதிப்பு இழப்பால் வியாபாரங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று நாட்டின் வியாபாரத் தொழிலையே ஒழித்துவிட்டார்கள். மேலும் தமிழக விவசாயிகளை குறிவைத்து மத்திய அரசு தாக்குகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TTVDhinakaran

    எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயப்படுகின்றனர் என்று கறம்பக்குடியில் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #GajaCyclone
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள மருதன்கோன்விடுதி நால்ரோடு, அம்மானிப்பட்டு, கறம்பக்குடி, புதுப்பட்டி, சூரக்காடு, வெட்டன்விடுதி ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதியில் திறந்த வேனில் டி.டி.வி. தினகரன் நின்றபடி பேசியதாவது:-

    கஜா புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டபோது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவே அனைவரும் நம்பினோம். ஆனால், புயல் பாதிப்பிற்குள்ளாகி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மின்சாரம், குடிநீர் உள்பட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

    நிவாரண முகாம்களில் உள்ள டெல்டா பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படாததால் துன்பப்பட்டு வருகின்றனர். தார்ப்பாய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. விளம்பர பதாகைகளை கட்டி குடியிருக்க வேண்டிய நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

    புயலை வைத்து நான் அரசியல் செய்வதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு தொண்டு நிறுவனம்போல் செயல்பட்டு நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எதிர்ப்புகள் அதிகமாகி வருவதால் மக்களை சந்திக்கவே அ.தி.மு.க. அமைச்சர்கள் பயன்படுகின்றனர். அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை மக்கள் விரட்டி அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தானே புயலின்போது மறைந்த ஜெயலலிதா அரசு செயல்பட்டதைபோல, தற்போதைய புயலின்போது அரசு செயல்படவில்லை. இதனால் மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #TTVDhinakaran #GajaCyclone
    எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி.தினகரன் என்னிடம் பேரம் பேசினார் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். #OPanneerselvam #TTVDhinakaran

    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது.

    கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மதுரை ஒரு ராசியான மாவட்டம். இங்கே தொட்டது துலங்கும். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய பின் முதல் முறையாக போட்டியிட்டது மதுரை மாவட்டத்தில்தான். அதனால்தான் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்கினோம். தொடர்ந்து 32 மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

    சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத் தேர்தலை சந்திக்கிறோம். கடந்த தேர்தலைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற வேண்டும். அதற்கு அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற அ.தி.மு.க. வினர் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த வெற்றி தான் அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி அம்மா தலைமையில் அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்தோம். ஆனால் அம்மா உடல்நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது நான் முதல்- அமைச்சராக பொறுப்பேற்று இருந்தேன்.

    ஆனால் இந்த ஆட்சி நடக்கக்கூடாது என்று எண்ணத்தில் ஒரு கும்பல் செயல்பட்டது. என்னிடம் இருந்து முதல்-அமைச்சர் பதவியை பிடுங்க திட்ட மிட்டனர். அவர்களது சதி திட்டம் தெரியவந்ததால் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன்.

    இதைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. எம்.எல்.ஏ.க்களை கூவத்தூருக்கு அழைத்து சென்று அடைத்து வைத்திருந்தனர். சசிகலாவும் முதல்-அமைச்சராகி விட வேண்டும் என்று பல சதிகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் சசிகலா சிறைக்கு சென்று விட்டார். புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். ஆனாலும் அந்த கும்பல் தொடர்ந்து பதவி ஆசையுடன் சுற்றி திரிந்தது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் டி.டி.வி.தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் எனக்கு 11 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

    டி.டி.வி.தினகரன் என்னிடம் வந்து தனக்கு ஆதரவாக 42 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். உங்களிடம் 11 பேர் இருக்கிறார்கள் எனவே நம்மிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விடுவோம் என்று பேரம் பேசினார். ஆனால் என் மனசாட்சி இதற்கு சம்மதிக்க வில்லை.

    புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் துரோகத்தை செய்ய விரும்பவில்லை. ஆகையால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுத்தேன். இதையடுத்து டி.டி.வி.தினகரன் பக்கம் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. அவரது ஆட்சி கவிழ்ப்பு திட்டமும் நம்மிடம் எடுபடவில்லை. இனியும் எடுபடாது.

    கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை புரட்சித்தலைவி அம்மா கட்சியில் இருந்து நீக்கினார். சசிகலா மட்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சசிகலா கட்சி பணிகளில் ஈடுபடமாட்டார் என்று எங்களிடம் அம்மா கூறினார்.

    தற்போது டி.டி.வி.தினகரன் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற துடிக்கிறார். எவ்வித மன்னிப்பு கடிதமும் கொடுக்காமல் கட்சியில் சேர்ந்ததாக தொண்டர்களை ஏமாற்றி வருகிறார். தினகரன் எப்போது கட்சியில் சேர்ந்தார்? என்பது குறித்து அவர் முதலில் சொல்லட்டும்.

    இதுநாள்வரை தினகரன் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருக்கவில்லை. இதுதான் உண்மை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் கட்சியில் சேர்க்கப்படாமலே அ.தி.மு.க. எனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியுமா?.

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றி போலியானது. 20 ரூபாய் நோட்டில் கையெழுத்துபோட்டு கொடுத்து ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அவர் கொடுத்ததாக தொகுதி முழுவதும் பேசுகிறார்கள். ஆனால் திருப்பங்குன்றத்தில் அந்த 20 ரூபாய் நோட்டு ஜெயிக்காது. இங்கே உள்ள மக்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவின் விசுவாசிகள். இரட்டை இலை சின்னத்தை தங்கள் உயிர்போல நினைக்கிறார்கள்.

    எனவே 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். எதிர்க்கட்சியையும், துரோகியையும் திருப்பரங்குன்றம் மக்கள் புறக்கணிப்பார்கள். அந்த வகையில் நம் தேர்தல் பணி அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #TTVDhinakaran

    தி.மு.க.வுடன் கை கோர்த்துக்கொண்டு அ.தி.மு.க.வை அழிக்க துடிக்கும் தினகரனின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDhinakaran #Jayakumar

    சென்னை:

    வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றியை விளக்கப் பொதுக்கூட்டம். மாவட்ட செயலாளர் டி. ஜி. வெங்டேஷ்பாபு எம் பி தலைமையில் கொளத்தூர் தொகுதி மங்காரம் தோட்ட பகுதியில் நடந்தது. கூட்டத்தில் மீன் வளம் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ஆர்.கே.நகரில் பொது மக்களிடம் 20 ரூபாய் நோட்டை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற தினகரன் மீது இப்போது அப்பகுதி மக்கள் கோபத்தில் உள்ளனர்.


    தினகரன் எப்படிப் பட்டவர் என்பதை தெரிந்து தான் அம்மா சுமார் 10 வருட காலம் போயஸ் கார்டன் பக்கமே வரவிடவில்லை. தி.மு.க.வுடன் தினகரன் கை கோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை அழித்து விடலாம் என்று எண்ணுகிறார். அவரது கனவு ஒரு நாளும் பலிக்காது. அ.தி.மு.க. இரும்பு கோட்டை அதை யாராலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாடி மா.ராசு, அமுதா, சிந்தை ஆறுமுகம், ஓட்டேரி பி. கே ஜெயக்குமார், செங்கை கோவிந்தராஜ், எஸ்.அமீனுதீன், எ.எல் நடராஜன், எஸ் எ. அண்ணாமலை, பத்மேடு சாரதி, எம். மகேந்திரன், வெற்றி நகர் ஜீவா, எம் சந்திரசேகர், பி.வேலு, உஷாராணி, சமிம்பானு, அருணகிரி, புரசை ராஜாராம், தனராஜா, மல்லிகா சுப்புராஜ், செந்தில்குமார், எம்.இமாச்சலபதி, பி.அரசு, ஐ.அம்பேத்கர், திருமங்கலம் மோகன், புரசை கே.சேகர், ஜி.ஆர். பி. கோகுல், சாந்தி, எஸ் சத்தியநாராயணன், முனிரத்தினம், வேணு, அயன்புரம் முரளிதரன், திருமங்கலம் பிரபு, தங்கம் துரைசாமி, கொளத்தூர் கிருபா. அகரம் ரவிச் சந்திரன், உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கொளத்தூர் கே. கணேசன் நன்றி கூறினார். #TTVDhinakaran #Jayakumar

    நடிகர் கமல்ஹாசனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி அமைப்பது குறித்து காலம் முடிவு செய்யும் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார். #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆறுதல் கூறினார். அதன் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடைக்கானலில் நடந்த கோடை விழாவின் போது அமைச்சர் சீனிவாசன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து வணங்கியுள்ளார். முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முதுகெலும்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக யார் காலில் விழுவதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழக அரசு சிறப்பாக ஆட்சி செய்து வருவதாக முதல்வரும், துணை முதல்வரும் பேசியுள்ளனர்.

    மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக நலன்களை அடகு வைக்கவும் துணிந்து விட்டனர். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அக்கறை கிடையாது.

    ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பிடிப்பார் என்று உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளதாம். சமுக வலைதளங்களில் பரவும் செய்திகளை வைத்து யாரும் கனவு காண முடியாது. டி.டி.வி. தினகரன் முதல்வர் ஆவார் என்று முன்பே சமூக வலைதளங்களில் வெளியானது.


    ஆனால் அதனை நாங்கள் பொருட்படுத்தாமல் மக்கள் பணியில் தீவிரம் காட்டியதால்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் அமோக வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றி மேலும் தொடரும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்து உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என்பதை மக்களுக்கு நிரூபிப்போம்.

    நடிகர் கமல்ஹாசனின் விவசாயிகள் கோரிக்கை குறித்த மாநாட்டில் டி.டி.வி. தினகரன் பங்கேற்றார். இந்த கூட்டணி தொடருமா? என்று இப்போது சொல்ல முடியாது. மக்கள் நலன் காக்கும் விவசாயிகளை பாதுகாக்கும் கூட்டணியில் அவரும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்தாலும் வியப்பில்லை.

    கோவா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் குறைந்த இடங்களை பிடித்த போதும் பா.ஜ.க. தனது அரசை அம்மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்தியது. ஆனால் கர்நாடகாவில் அவர்களது சூழ்ச்சியை முறியடித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியை பிடித்துள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை காவிரி தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதமாக கூறி வந்தனர். தற்போது மீண்டும் அந்த கூட்டணிதான் ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளபடி ஆணையத்தை விரைவாக அமைத்து காவிரி நீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TTVDhinakaran #ThangaTamilSelvan #KamalHaasan

    ×