என் மலர்
தலைப்புச்செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- மண்ணூர்பேட்டை, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்டிஎச் ரோடு, பாடி.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
மீஞ்சூர்: டி.எச்.ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், பி.டி.ஓ., அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்.ஆர்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், மேலூர், பட்டமந்திரி, வல்லூர், அத்திப்பட்டு, எஸ்.ஆர்.பாளையம், ஜி.ஆர். பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையன்மேடு.
அண்ணாசாலை: அங்கப்பன் தெரு, மூர் தெரு, II லேன் கடற்கரை சாலை, லிங்கிசெட்டி தெரு, ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி, எர்ரபாலு தெரு, லேன் கடற்கரை சாலை, மூக்கர் நல்லமுத்து தெரு, அங்கப்பன் தெரு, பங்குச் சந்தை, இந்தியன் வங்கி I, II, இயேசு அழைக்கிறார், HSBC, UTI, தம்பு செட்டி தெரு, ஆர்மேனியன் தெரு, எஸ்பிளனேட் சாலை, NSC போஸ் சாலை, பத்ரியன் தெரு, பந்தர் தெரு, மலையபெருமாள் தெரு, ஆண்டர்சன் தெரு, ஸ்ட்ரிங்கர் தெரு, உம்பர்சன் தெரு, குறளகம், சட்டக் கல்லூரி பம்பிங் ஸ்டேஷன், MMC ஆண்கள் விடுதி.
கொரட்டூர்: மண்ணூர்பேட்டை, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எம்டிஎச் ரோடு, பாடி, முகப்பேர் ரோடு, டிஎன்எச்பி, கேஆர் நகர், தில்லை நகர், கண்ணகி நகர், ஜம்புகேஸ்வரர் நகர்.
போரூர்: ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம், போரூர் கார்டன் முதல், இரண்டாம், ராமசாமி நகர், நகர மரம், ஆற்காடு சாலை, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்னபோரூர், சாமபுட் நகர், வானகரம், செட்டியாரகரம், பூந்தமல்லி ரோடு, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியராகரம்.
- ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
ராஜ்கிர்:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் செல்லும் முயற்சி கைகூடும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனைகள் அகலும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க முற்படுவீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம் தொழில் சம்மந்தமாக முக்கியப்புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கடகம்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும்.
கன்னி
கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மண், மனை வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உற்றார், உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் தொடர்பாக எடுத்த முடிவிற்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர்.
தனுசு
பொன்னான நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல காரியம் நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதரர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
மகரம்
நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.
கும்பம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
மீனம்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை இழுபறி நிலையில் நீடிக்கலாம். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-23 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பிரதமை இரவு 10.52 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.20 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று மகாளயபட்சம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷபப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ வியாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-உதவி
மிதுனம்-உண்மை
கடகம்-உவகை
சிம்மம்-ஈகை
கன்னி-நன்மை
துலாம்- நிறைவு
விருச்சிகம்-பாசம்
தனுசு- சாந்தம்
மகரம்-கீர்த்தி
கும்பம்-விருத்தி
மீனம்-அனுகூலம்
- உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.
சென்னை:
'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.
தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.
துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.
- இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
- ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நியூயார்க்:
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.
2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
- வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' 82வது வெனிஸ் திரைப்பட விழாவில் சில்வர் லயன் விருதை வென்றது.
பிரெஞ்சு-துனிசிய இயக்குனர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஹிந்த் ரஜப் உடைய வாழ்வின் இறுதித் தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி 29, 2024 அன்றுகாசாவில் இருந்து தப்பிச் செல்லும்போது, ஹிந்தும் அவளது குடும்பத்தினரும் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். காரில் ஹிந்த் மட்டுமே உயிருடன் இருந்தாள். கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.
ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் குண்டுகளால் துளைக்கப்பட்டு ஹிந்த் ரஜப் கொல்லப்பட்ட கார்
'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' ஆவணப்படத்தில் ஹிந்த் மீட்பு அமைப்பினரிடம் போனில் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது.
விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குனர் பென் ஹனியா, "இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை அழிக்கவோ முடியாது. ஆனால் அவளது கதை படத்தின் எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது" என்று தெரிவித்தார்.

வெனிஸ் விழாவில் படத்தை பார்த்தவர்கள் சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டி, பாலஸ்தீனத்தை மீட்போம் என கோஷங்களை எழுப்பினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற படமும் இதுவே ஆகும்.
- அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்கள் வெனின்சுலாவை நோக்கி நகர்கின்றன.
- உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்டது வெனிசுலா.
கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.
அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், "மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன" என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
- தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
- வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர்.
மேற்கு வங்காளத்தில் பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி 20 வயது பெண் ஒருவர் தனது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான ரீஜண்ட் பார்க்கில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்தின் பின் தலைமறைவான சந்தன் மாலிக் மற்றும் தீப் என்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு சந்தன் மாலிக் சில மாதங்கள் முன் அறிமுகமாகி உள்ளார். சந்தன் மாலிக் தெற்கு கொல்கத்தாவில் உள்ள துர்கா பூஜைக் குழுவின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சந்தன் தீப்பையும் அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினான். இருவருடன் அப்பெண் நட்பு பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாளை கொண்டாடலாம் என்று கூறி அப்பெண், தீப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மூவரும் அங்கேயே இரவு உணவு சாப்பிட்டனர். அதன் பிறகு, வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகக் கூறிய பெண்ணை அவர்கள் தடுத்து நிறுத்தி கதவைப் பூட்டினர். பிறகு, இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிறகு, நடந்ததை பெற்றோரிடம் அப்பெண் தெரிவித்தார். பின்னர் காவல் நிலையத்தில் பெண்ணின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
- வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
- இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
வங்காளத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று கோஷ் முன்னர் சட்டமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டி அவரின் பெயரை குறிப்பிடாமல் அப்துர் ரஹீம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்று அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன். இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் வங்காளிகள் உங்களை சும்மா விடமாட்டோம். உங்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி எரிப்போம்" என்று தெரிவித்தார்.
இந்த மிரட்டலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
- இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை இளம் இந்திய இயக்குனர் அனுபர்ணா ராய் வென்று வரலாறு படைத்துள்ளார்.
அவரது 'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' திரைப்படம் இந்த விருதை வென்றது. வெனிஸ் திரைப்பட விழாவின் Orizzonti பிரிவு போட்டியில் அனுபர்ணா சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.
Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' என்பது மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.
வாழ்வாதாரம், தனிமை மற்றும் உறவுகள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு அனுபர்ணா இந்தப் படத்தைத் எடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.
Orizzonti பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே படம் இதுவாகும். மேலும் அவ்விருதை வெல்லும் முதல் இந்திய படமாகவும் இது அமைந்துள்ளது.
- தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார்.
- அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர்ச் சூழலில் இருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இளம் பெண் ஒருவர் அமெரிக்காவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினாவில் வசித்து வந்த உக்ரைனியப் பெண் இரினா ஜருட்ஸ்கா கடந்த மாதம் 22 ஆம் தேதி, சார்லோட்டில் ஒரு உள்ளூர் ரெயிலில் பயணம் செய்டுக்கொண்டிருந்தார்.
ரெயிலில் இரினாவின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், தனது பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து இரினாவைத் தாக்கினார். கடுமையான காயங்கள் மற்றும் இரத்தப்போக்கு காரணமாக இரினா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொலை செய்த நபர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி தப்பினார். டிகார்லோஸ் என்ற அந்த நபரை அடையாளம் கண்ட போலீஸ் அவருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் கொலை செய்தததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.






