என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் நிறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்
    X

    ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் நிறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

    • உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார்.

    சென்னை:

    'தமிழ்நாடு வளர்கிறது' (டி.என்.ரைசிங்) என்ற பயணத்தின் கீழ் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டார். அங்கு அவர், முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    பின்னர் அவர், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 2-ந் தேதி லண்டன் சென்றார். அங்கு அந்நாட்டு மந்திரியும், நாடாளுமன்ற துணை செயலாளருமான (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.

    இதனையடுத்து உலக புகழ்பெற்ற லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். லண்டன் ஆக்ஸ்போர்டு வால்டன் தெருவில் அமைந்துள்ள தமிழின் பெருமையை உலகறிய செய்த மேலைநாட்டு தமிழறிஞர் ஜி.யு.போப்பின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

    'சட்ட மேதை' அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த இல்லத்துக்கு சென்று அங்குள்ள அரிய புகைப்படங்களை பார்த்து வியந்தார். 'தத்துவ ஞானி' என்று போற்றப்படும் கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தை பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

    தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக்கொண்டு லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார்.

    துபாய் வழியாக அவர் இன்று (திங்கட்கிழமை) காலை 8.05 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைகிறார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்கிறார்கள். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    வரவேற்பு நிகழ்வுக்கு பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்தித்து, 'ஜெர்மனி, லண்டனில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீட்டு விவரங்களை பட்டியலிடுவார் என்று தெரிகிறது.

    Next Story
    ×