என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • செயின் திருட்டில் ஈடுபட்டபோது கைது.
    • தொடர்ந்து 15 வருடமாக செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி வாக்குமூலம்.

    திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி, பேர்ணாம்பட்டு தெற்கு ஒன்றியம், நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவி பாரதி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் காஞ்சிபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் திரும்பியபோது, அவரின் 5 சவரன் செயினை மர்ம பெண் ஒருவர் திருடியுள்ளார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், கடந்த 15 ஆண்டுகளாகச் செயின் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும், திருடிய நகையை விற்று கிடைக்கும் பணத்தில் சொந்த ஊரில் வணிக வளாகம் கட்டி வருவதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும், திமுக ஊராட்சி மன்ற தலைவியாக ஆன பின்னரும் திருட்டு பழக்கத்தை விட சொல்லி உறவினர்கள் அறிவுறுத்தியும், தன்னால் திருட்டை விட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் திமுக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    • கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கிய 3 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    சியாச்சின்:

    லடாக் யூனியன் பிரதேசத்தின் சியாச்சின் கிரேசியர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவினர் வழக்கம்போல் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இந்நிலையில், மீட்புக் குழுவினர் மோஹித் குமார், நீரஜ் குமார் சவுத்ரி, தாபி ராகேஷ் தேவ்பாய் ஆகிய 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

    கடுமையான வானிலை மற்றும் பனிக்குவியலுக்கு இடையே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    • 15 சனிக்கிழமை, ஒரு ஞாயிறு என 16 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம், என்டிஏ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகியது, த.வெ.க. தலைவரின் பிரசார சுற்றுப் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை அளித்த பதில் பின்வருமாறு:-

    கொஞ்சம் பொறுத்திருப்போம். ஒரு முடிவு எடுத்த பிறகு கொஞ்சம் காலம் கொடுத்தீர்கள் என்றால், செட்டில் ஆவதற்கு எல்லோருக்கும் நேரம் வேண்டும். அவர்களும் வருத்தத்தில் எடுத்திருப்பார்கள். பொறுத்திருப்போம். காலம் கனிந்து வரட்டும். எல்லோரும் எங்களுடைய முயற்சியை செய்து கொண்டிருப்போம்.

    ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமியின் பத்திரிகை செய்திகளை பார்த்தேன். அவர்களுடைய கருத்தை வைத்துள்ளனர். எங்கேயும் சண்டை ஏற்படுவதற்கான சூழலை நான் பார்க்கவில்லை. காலம் இருக்கிறது. பொறுத்திருப்போம். எல்லாம் சரியாகும்.

    டி.டி.வி. விவகாரம் தொடர்பாக தோண்டி தோண்டி பேசுவது அழகல்ல. டிடிவி தினகரன் நல்ல தலைவர். அவருக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருக்காது.

    அரசியல் என்பது 24 மணி நேரமும் செய்யக்கூடிய வேலை. நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும். முழு நேர வேலையாக இருக்க வேண்டும்.

    த.வெ.க. ஒரு சீரியஸான கட்சி. திமுக-வுக்கு மாற்றான கட்சி எனச் சொல்கிறார்கள். அந்த வேகத்தை களத்தில் 24 மணி நேரமும் பார்க்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். திமுக எங்களுக்கு எதிரான என்றால் களத்தில் காட்டினால் மட்டுமே மக்கள் நம்புவார்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி திமுக-வுக்கு மாற்று என மக்கள் நம்புவதற்கு காரணம், அதன் தலைவர்களை எப்போதும் சந்திக்கக் கூடிய அளவில் இருக்கிறார்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே மக்களை பார்ப்பேன் என்றால், அவர்கள் அரசியலை எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள் என மக்கள் பார்க்கிறார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

    தவெக தலைவர் விஜய் வருகிற 13ஆம் தேதி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
    • சனிக்கிழமை மற்றும் ஒரேயொரு ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

    இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.

    வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகிறார்

    தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகிறார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன் என்றார் செங்கோட்டையன்.
    • அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் எண்ணம்.

    அதிமுக எம்.எல்.ஏ.-வும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்ததாக தகவல் வெளியானது. அதை செங்கோட்டையன் உறுதிப்படுத்தினார். மேலும், "எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன். தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினே். எங்களை பொறுத்தவரை அதிமுக என்ற இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமித் ஷாவிடம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்ததாக தெரிவித்தது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முன்னாள் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் "செங்கோட்டையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.

    மேலும், தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல முடியாது. நயினார் நாகேந்திரனிடம் எனது போன் எண் உள்ளது. அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை.

    பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் பச்சன், தனது பிரபல தன்மை உரிமைகள் (Publicity & Personality Rights) காப்பதற்காக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    மனுவில், தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் AI மூலம் உருவாக்கப்பட்ட போலியான, அவதூறான காட்சிகள் அனுமதியின்றி பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி (Aishwarya-வுக்கு சார்பாக) நீதிமன்றத்தில் வாதாடியதாவது:

    "ஐஸ்வர்யா ராயின் பெயர், உருவம், புகைப்படங்களை யாரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்த உரிமையில்லை."

    "முழுமையாக போலியாக உருவாக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன."

    "ஒருவர், என் வாடிக்கையாளர் பெயர் மற்றும் முகத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். கூடுதலாக, இவை சிலர் தங்களது பாலியல் ஆசையைத் திருப்தி செய்ய பயன்படுத்துகின்றனர். இது மிகுந்த மோசமானது."

    இதற்கு பதிலளித்த நீதி. தேஜஸ் காரியா,

    "அனுமதியின்றி ஐஸ்வர்யா ராய் பச்சனின் படங்கள் அல்லது உருவம் பயன்படுத்தும் இணைய தளங்களுக்கும், தனிநபர்களுக்கும் தடை விதிக்கப்படும்" எனக் குறிப்பிட்டார்.

    • போராட்டம் எதிரொலியாக பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • பிரதமரை தொடர்ந்து ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதையடுத்து இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதையடுத்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், பிரதமர் சர்மா ஒலியை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவுடல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் நேபாள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றிலும் ஆட்சி கலைப்பு நடவடிக்கைகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தொடக்க வீரர் சஞ்சு சாம்சனா?, சுப்மன் கில்லா? என கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. நாளை இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் களம் இறங்குவது உறுதியாக உள்ளது. அவர் தொடக்க வீரராக களம் இறங்கக் கூடியவர். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சூர்யகுமார் யாதவ் "Sir, ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ள வீரர்கள் பட்டியலை உங்களுக்கு மெசேஜ் செய்வேன். உண்மையிலேயே அவரை நாங்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறோம். கவலைப்பட வேண்டாம். நாளை நாங்கள் சரியான முடிவை எடுப்போம்" என்றார்.

    சஞ்சு சாம்சனும், சுப்மன் கில்லும் அணியில் இடம் பிடித்தால் யார் தொடக்க வீரராக களம் இறங்குவது? என்பதிலும் சிக்கல் நீடிக்கும்.

    • முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.
    • மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின.

    நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

    இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் முன்னாள் ஆளுங்கட்சியான பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய காட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மாலை 3 மணி நிலவரப்படி 96% வாக்குகள் பதிவாகின. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் விரைவில் தெரிந்து விடும். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

    • ஒரு கோடி குடும்பங்கள் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.
    • கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்

    திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "தேர்தல்னு வந்துட்டா தி.மு.க.காரங்களை அடிச்சிக்க ஆளே இல்ல"-னு தமிழ்நாடே சொல்லும்!

    நம் மண் - மொழி - மானம் காக்க ஒரு கோடி குடும்பங்கள் '#ஓரணியில்_தமிழ்நாடு' முன்னெடுப்பில் இணைந்துள்ளன.

    வரும் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த இக்குடும்பங்கள் கூடி உறுதிமொழி ஏற்பது என்றும், 20-ஆம் நாளன்று ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் மாபெரும் கூட்டங்கள் நடத்தி உறுதிமொழி ஏற்பது என்றும் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கழகத்தின் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் முப்பெரும் விழா-வுக்கு உங்கள் எல்லோரையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    செப் 17 அன்று கரூரில் திரள்வோம்! கழக வெற்றி நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
    • ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றார்.

    துபாய்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது. இந்திய அணி நாளை துபாயில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி ஆசியக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறதே என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

    இதற்கு பதிலளித்த சல்மான் ஆகா, டி20 கிரிக்கெட்டில் எந்த அணியையும் ஃபேவரிட் என நான் நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் சிறப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இது ஒரு வேகமான விளையாட்டு. ஓரிரு மணி நேரம் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் என தெரிவித்தார்.

    ×