என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சென்னையில் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போவதாகவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இதேபோல் சென்னையிலும் விஜய் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 27-ந்தேதியன்று வட சென்னையிலும், அக்டோபர் 25-ந்தேதியன்று தென் சென்னையிலும் சாலை மார்க்கமாக சென்று விஜய் மக்களை சந்திக்க அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாளில் 4 மாவட்டங்களுக்கு செல்லும் திட்டத்தை மாற்றி ஒருநாளில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தேர்தல் பிரசார பயணம் குறித்து புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியுள்ளது. அதிக வசூல் பெற்ற மலையாள சினிமா பட்டியலில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளது.
மேலும் புக் மை ஷோ செயலியில் இதுவரை அதிகம் டிக்கெட் புக் செய்யப்பட்ட மலையாள திரைப்படம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது. திரைப்படம் வசூலி உலகளவில் 250 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது.
- எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர்.
- பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்பு அம்மா தனது அயராது உழைப்பால் இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கினார். குறிப்பாக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலையை நிற்க வைத்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இந்த இயக்கத்தை வெல்ல எவருமில்லை என்ற வரலாற்றை நிரூபித்தார்.
இருபெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் தொண்டர்கள் கண்ட பொக்கிஷமாக, இருபெரும் தலைவர்கள் வடிவமாக, 8 கோடி மக்களின் நம்பிக்கையாக, எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு பொக்கிஷமாக கிடைத்தார். மேலும் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து, தமிழ்நாட்டை ஒரு குடும்பத்தில் சிக்காமல் மீட்க எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.
ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மீண்டும் மக்களாட்சி மலர எளிய தொண்டராய், களப்போராளியாய் உரிமை போராட்டத்தை எடப்பாடியார் நடத்தி வருகிறார். சாமானிய மக்களுக்களின் உரிமை குரலாக, தன்மானத்தோடு களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார். இதுவரை 150 தொகுதிக்கு மேல் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
எடப்பாடியார் செல்லும் இடங்களில் எல்லாம் நம்மை காக்க வந்த தெய்வம் என்று மக்கள் வரவேற்பதை கண்டு எதிரிகளும், துரோகிகளும் வயிற்று எரிச்சல் ஆகின்றனர். பொறாமையால் எதிரிகளும், துரோகிகளும் வசை பாடி கொண்டிருப்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிரிகள், துரோகிகள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வில் பிரச்சனை, தொண்டர்களிடம் பிரச்சனை, நிர்வாகிகளிடம் பிரச்சனை, தலைமை இடத்தில் பிரச்சனை என்று வாய்க்கு வந்ததை கூறி அவர்களே இன்றைக்கு தமிழகத்தில் பிரச்சனையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இன்றைக்கு பொதுநலத்துடன், சேவை நோக்கத்துடன் எடப்பாடியார் திகழ்ந்து எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இருபெரும் தலைவர்களின் செல்வாக்கால் எதிரிகளிடம் சிம்ம சொப்பனமாக எடப்பாடியார் போராடிக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைக்கு எதிரிகளுக்கு தூக்கம் தொலைந்து விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் நிம்மதியாக தூங்க, வளமான எதிர்காலத்தை உருவாக்க எடப்பாடியார் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இருபெரும் தலைவர்களால் விலாசத்தை பெற்றவர்கள் கூலிப்படையாக செயல்பட்டு அ.தி.மு.க.வின் விலாசத்தை சிதைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து தோற்றுத்தான் போனார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒற்றுமை என்ற பெயரில் புதிய கோஷத்தை இந்த செல்லாக் காசுகள் எடுத்து வைக்கும் சலசலப்பால் தொண்டர்கள் சொத்தான அ.தி.மு.க.விற்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள், அது ஒருபோதும் நடக்காது.
ஒவ்வொரு தொண்டர்களும் மன உறுதியுடன் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. தாய் இல்லாத பிள்ளையாக நாம் இருந்தபோது தாயாக நமக்கு கிடைத்தவர் தான் எடப்பாடியார். அவர் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். தொண்டருக்கு தொண்டராக எடப்பாடியார் நமக்கு கிடைத்துள்ளார். இதுதான் ஜனநாயகத்தின் அற்புதம், ஜனநாயகத்தின் வளர்ச்சி. இதை சர்வாதிகாரர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த சர்வாதிகாரர்கள் எடுக்கும் முடிவுக்கு சில கருங்காலிகள் துணை போகிறார்கள்.
அ.தி.மு.க.விற்கும், தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக எடப்பாடியார் உள்ளார். அவருக்கு பலவீனத்தை ஏற்படுத்த சலசலப்பை ஏற்படுத்தும் சில செல்லாக்காசுகளால் அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவும் இல்லை. தொண்டர்கள் அனைவரும் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். சர்வாதிகாரிகளுக்கும் அவர்களுக்கு துணை போகும் கருங்காலிக்கும் தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும். தொண்டர்கள் நாம் எல்லோரும் மன உறுதியோடும், விசுவாசத்தோடும் எடப்பாடியாரிடம் இருக்க வேண்டும்.
சிலர் பதவி சுகம், அதிகாரத்தை பெற பேசுகிறார்கள். அவர்கள் முகத்திரையை கிழித்து எறியவேண்டும். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் நாம் அனைவரும் சூளுரை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்த போர் 2 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே கடந்த வாரம் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்த நிலையில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடனான அவசர ஆலோசனை கூட்டத்துக்கு கத்தார் அழைப்பு விடுத்தது.
அதன்படி நேற்று அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர உச்சி மாநாடு கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்தது.
இதில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி, துருக்கி அதிபர் எர்டோகன், பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை தடுக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் முடிவு செய்து உள்ளன.
- எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
- துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. தான் என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல என்று கூறினார்.
மேலும் டி.டி.வி. தினகரன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.
* கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டதால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார்.
* கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் வேட்பாளர் பெயர் குறிப்பிடாமல் கையெழுத்து வாங்கச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியது 122 எம்.எல்.ஏ.க்கள் தானே தவிர பா.ஜ.க. அல்ல. சசிகலா கூறியதால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
* ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்ததால் தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.
* அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சராக முடியவில்லை.
* எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு கேள்வி கேட்க வேண்டாம்.
* பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக்கூறியவர்தான் எடப்பாடி பழனிசாமி.
* துரோகத்தை தவிர வேறு எதுவுமே தெரியாத எடப்பாடி பழனிசாமி நன்றி பற்றி பேசுகிறார்.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என இதுவரை அமித்ஷா குறிப்பிடவில்லை.
* நீங்கள் விரும்புபவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அமித்ஷா எங்களிடம் கூறியிருந்தார்.
* டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறிமாறி திருட்டுத்தனமாக அமித்ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி.
* அதிமுகவிற்கு தற்போது உள்ள 20 சதவீத வாக்குகளும் வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறையத்தான் போகிறது.
* 2026 சட்டமன்ற தேர்தலில் பழனிசாமி தோற்பதற்கு நாங்கள் காரணமில்லை. அவர்தான் காரணம்.
* தன்மானம் தான் முக்கியம் என பேசிவரும் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்றது ஏன்?
* எடப்பாடி பழனிசாமியை தாக்கிப்பேசினால் அவரால் தாங்க முடியாது என்று கூறினார்.
- வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
- மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வைரமுத்து மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் வைரமுத்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், இருவருக்கும் சில மாதங்களில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண் தான் பணிபுரிந்து வரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு வழக்கம்போல் வைரமுத்து வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வைரமுத்துவை ஓட ஓட விரட்டி சென்று, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதலியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் அடியமங்கலம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ் தற்போது கிஸ் படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார் .டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். படத்தின் இசையை படக்குழு வெளியிட்டுள்ளது. மக்கல் பாடலை ரசித்து வருகின்றனர். குறிப்பாக என்னலே என்னலே இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிஸ் திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாகிறது.
- திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது.
- தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் கடந்த 13-ந்தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது.
திருச்சியை குலுங்கும் அளவுக்கு மக்கள் கடலில் விஜய் நீந்தி சென்றார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவரின் பிரசார வாகனம் மரக்கடை பகுதிக்குச் செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட உத்தேசித்து, திட்டமிட்டே மரக்கடையில் இருந்து பிரசாரத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது.
காரணம், ஏற்கனவே எடுத்த பல சர்வே முடிவுகள் திருச்சி கிழக்கு தொகுதி தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிதும் சாதகமாக இருப்பதை தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த யார் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதனால் தாமே களம் இறங்கினால் எளிதில் வெற்றி வாகை சூடலாம் என கருதுகிறார்.
இந்த சட்டமன்ற தொகுதியில் 20 சதவீதம் இஸ்லாமியர் வாக்குகளும், 18 சதவீத கிறிஸ்தவர் வாக்குகளும், 18 சதவீத பிள்ளைமார் வாக்குகளும், 10 சதவீத தாழ்த்தப்பட்டோர் வாக்குகளும், 8சதவீத நாயுடு வாக்குகளும், 6சதவீத செட்டியார் வாக்குகளும், 6 சதவீத கோனார் வாக்குகளும், 5 சதவீத முக்குலத்தோர் வாக்குகளும் மற்றும் ஆசாரி, உடையார் ,வன்னியர், பிராமின், முத்தரையர் , ரெட்டியார், சௌராஷ்டிரா, நாடார், முதலியார், தேவேந்திரர் உள்ளிட்ட இதர வாக்கு வங்கிகள் 27 சதவீதம் இருப்பதும் கணக்கிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு சர்வேக்களில் விஜய்க்கு முதல் தர மாநகரங்களான சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் செல்வாக்கு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
அதேபோன்று வட தமிழகம், கொங்கு பகுதிகளிலும் நல்ல செல்வாக்கு இருப்பதாக அந்த கருத்துக்கணிப்புகள் உறுதிபட தெரிவித்துள்ளன. ஆனால் திருச்சி கிழக்கு தொகுதி தவிர்த்து டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் அவருக்கு செல்வாக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கும் பட்சத்தில் அதன் தாக்கம் குறைவாக இருக்கும் டெல்டா மாவட்டங்களில் வாக்கு வங்கியை உயரச் செய்யும் என விஜய் நம்புகிறார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளதால் திமுகவும் உஷாராகியுள்ளது. தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும் டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள நட்சத்திர வேட்பாளரை களமிறக்கவும் தி.மு.க. தயாராகி வருகிறது. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் தகவல் பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார்.
- நாளை பிரதமர் மோடியின் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் மெஸ்சி. இவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக திகழ்கிறார். இவரது தலைமையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது.
மெஸ்ஸி இந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை மெஸ்ஸி சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக அவருக்கு தனது கையொப்பமிடப்பட்ட 2022 FIFA உலககோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை மெஸ்ஸி அன்பளிப்பாக அனுப்பியுள்ளார்.
நாளை பிரதமர் மோடி தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், நமது சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
- 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.
புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் தொடங்கியுள்ளார். இதனை அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.






