search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    கோரிக்கைகளை ஏற்றதால் வணிகர்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான்- விக்கிரமராஜா அறிவிப்பு

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் இடம் பெற்று இருப்பதால் அவர்களுக்குதான் ஆதரவு என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா பேரிடர் கால வணிகர்களின் பாதிப்புகள் குறித்தும், எதிர்வரும் தேர்தலில் வணிகர்களின் நிலைப்பாடு குறித்தும், மாநிலம் தழுவிய கலந்தாய்வுக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.

    அக்கூட்டங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, வணிகர்கள் நலன் சார்ந்து முன் வைக்கின்ற கோரிக்கைகளை தனது தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து, அவற்றை நிறைவேற்றிட முன்வருகின்ற அரசியல் கட்சிக்கே வணிகர்களின் வாக்கு என்ற நிலை, ஒருமனதாக முன்னெடுக்கப்பட்டது.

    அனைத்து அரசியல் கட்சிகளும் நமது பேரமைப்பின் கோரிக்கைகளை கேட்டு பெற்றிருந்த நிலையில், அவற்றை சீர்தூக்கிப் பார்த்ததில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் இடம் பெற்று இருக்கின்றன.

    கோரிக்கைகளில் குறிப்பாக சிறு, குறு ஏழை, எளிய வணிகர்களுக்கு குறைந்தது 15 ஆயிரம் ரூபாய் வட்டியில்லாக் கடனாக அளிப்பது, வணிகர் நல வாரியம் சீரமைக்கப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் இயங்கும், வணிகவரி வழக்குகளில் 25 சதவீத முன்வைப்புத்தொகை என்பது தளர்த்தப்படும்,

    நகராட்சி, உள்ளாட்சிக் கடைகளின் வாடகை உயர்வு விகிதங்கள், மறு ஆய்வு செய்யப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும், சிறு,குறு அடித்தட்டு வணிகர்களையும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என கூறியிருப்பதை வணிகர் சமுதாயம் முழுமனதுடன் வரவேற்கின்றது.

    இதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. அமைய உள்ள புதிய அரசில் வணிகர்களின் நலனும் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நமது வணிக சமுதாயம், வணிகர்களுக்கான ஒரு அரசை அமைத்துக்கொள்ள உங்களின் வாக்குரிமையை, எதிர்வரும் தேர்தலில் 100 சதவீதம் பயன்படுத்தி, புதிய வணிக விடியலுக்கு அடித்தளம் அமைத்திடுமாறு தமிழக வணிகர்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×