என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
    • முதன்மைக் கண்காணிப்பாளர்களாக ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள்.

    சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக N.ஆனந்த், கழகப் பொதுச்செயலாளர், K.A செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர், கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன.
    • மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்பட்டன.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

    எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் மாம்பலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மாம்பலத்தில் நாளை முதல் ஏப்.6 வரை நின்று செல்லும். மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது.
    • புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை 3 வகையாக நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதிநாட்கள் மற்றம் பண்டிகைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முழு ரெயிலையும் தனியாக வாடகைக்கு எடுப்பது (சார்ட்டர்டு சிறப்பு ரெயில்) என்று மூன்று வகைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டண ரெயில்களில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வீதம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.150 மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1000, 2-வது வகுப்பு கட்டணம் ரூ.550 வீதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ரெயில்களின் கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதிகரிக்கப்படவில்லை.

    ஆனால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயிலின் இயக்க செலவுகள், பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்து உள்ளன.

    இதனை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரெயில் பிரிவில் சாதாரண ரெயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சாதாரண ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். மற்றபடி முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

    மேலும் ஏற்கனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். அதற்கு கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது. இன்று முதல் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.

    ஊட்டி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரெயில்கள் ஆகியவற்றின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது.
    • மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர்.

    கடலூர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது, மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்.

    எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அரசியலுக்கு வரவில்லை.

    தி.மு.க. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக தி.மு.க. இருக்கிறது.

    நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் த.வெ.க. கோட்டையாக இருக்கும். தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் தி.மு.க. 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்.

    தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பிப்ரவரி 20-ந்தேதி (நேற்று) தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடைசி சட்டசபையாக இருக்கும்.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உண்மையான விவரம் தெரிய வரும். சமூக நீதி கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்த கூட்டணியில் உள்ளவர்களும் இதுவரை கேட்கவில்லை. பா.ஜனதா போல், தி.மு.க.வுக்கும் அந்த எண்ணம் இல்லை.

    விஜய் முதலமைச்சர் ஆன பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்று கூறும், தி.மு.க.வினர், பேப்பர், நிர்வாகிகள் இல்லாமல், விஜய்யுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த தயாரா? தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி. பழம் நழுவி பாலில் விழும் என்பது அவுட் ஆப் சிலபஸ், பழம் நழுவி கெட்டுப்போன பாலில் விழுந்துள்ளது. கெட்டுப்போன பாலை யாரும் குடிக்கமாட்டார்கள். ஜி.பே. மூலமாக தான் தி.மு.க. கூட்டணி ஓடுகிறது. விஜய்யை ஜெயிக்க ஷேர் ஆட்டோவில் ஏற்றுவது போல கட்சிகளை ஏற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றில் 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. கருணாநிதி இருக்கும் போதே நடக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் போதா நடக்கப்போகிறது என்றார்.

    நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், 45 ஆண்டுகால அரசியலுக்கு பிறகு தூக்கி எறிந்த என்னை தூக்கி பிடித்தவர் தலைவர் விஜய். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு 3-வது தலைவராக விஜய் ஆள போகிறார்.

    நம்மை வீழ்த்த எவராலும் முடியாது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும். தி.மு.க.வை வீழ்த்த த.வெ .க. தலைவரால் மட்டுமே முடியும். 234 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் என்றார்.

    • சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார்.
    • பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன் (வயது 55). இவர் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் தமிழகம், பாண்டிச்சேரியில் பர்னிச்சர் டீலராகவும் இருந்து வருகிறார்.

    இவர் வேடசந்தூர் கோவிலூர் பிரிவில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி தாமரைசெல்வியுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் ஸ்ரீகாந்த், சச்சின் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் தந்தையின் தொழிலையே கவனித்து வருகின்றனர். இவரது தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து கட்சி பணிகள் ஆற்றி வந்தார். தினந்தோறும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.

    இதனால் அவரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே கட்சியினர் தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். இன்று காலை அவரது உறவினரான குளத்தூர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வீராசாமிநாதனிடம் கொடுத்து விட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இருந்த போதும் வீராசாமிநாதனின் பின் தலையிலும் குத்தினார். உடனே அருகில் இருந்த நாச்சிமுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது நாச்சிமுத்துவையும் அவர் கத்தியால் குத்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் சத்தம் போடவே அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த வீராசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் உடனடியாக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வீராசாமிநாதன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் எரியோடு பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (27) என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தேர்தல் முன்விரோதம் காரணமாக குத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீராசாமிநாதனை கத்தியால் குத்திய சம்பவம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். பிடிபட்ட வாலிபரின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
    • மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்து சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பலத்த காற்று குறைந்த உடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

    • ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    • வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.

    • தங்கம் விலைதங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பிறகு ஏற்ற-இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதியில் இருந்து தொடர்ந்து 3 நாட்கள் விலை சரிந்து காணப்பட்டது.

    தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் அதிரடியாக உயந்தது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 160-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,15,360-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,420-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.1,17,440-க்கும், கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ரூ.14,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    19-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

    18-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

    17-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    16-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-02-2026- ஒரு கிராம் ரூ.270

    19-02-2026- ஒரு கிராம் ரூ.270

    18-02-2026- ஒரு கிராம் ரூ.260

    17-02-2026- ஒரு கிராம் ரூ.265

    16-02-2026- ஒரு கிராம் ரூ.265

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
    • மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.

    திருச்சி:

    தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க-காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. தலைமையில் மற்றொரு அணியும், தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைத்தோ அல்லது தனியாகவோ களமிறங்குகிறது. இதில் வழக்கம்போல் தனித்த அடையாளத்துடனும், உறுதியான கொள்கை நிலைப்பாட்டுடன் நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து களம் காண்கிறார். ஆகவே தமிழக அரசியல் களத்தில் நான்குமுனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

    நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டையொட்டி அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு ஆலம்பட்டி புதூரில் இருந்து திருச்சி மாநகர் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்சி கொடிகள், தோரணங்கள், பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக வந்தனர்.

    பின்னர் அவர்கள் தலைவர்களின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாநாடு சரியாக மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான மேடை 200 அடி நீளம், 64 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப்போர் தியாகிகள், தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்கள், தமிழுக்காக போராடியர்கள் என மொத்தம் 570 தலைவர்களின் பதாகைகள் மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ளன.

    வாகனங்கள் நிறுத்த 47 ஏக்கரில் பிரமாண்ட பார்க்கிங் வசதி, 38 மாவட்ட நிர்வாகிகள் தனித்தனியாக அமர இருக்கைகளுடன் கேபின்கள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் அமர தனி கேபின், வெளிநாட்டவர்கள் அமர தனி இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டு திடல் முழுவதும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலிக்கிறது.

    ஒயிலாட்டம், கரகாட்டம், பரதம் பறை போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் இரண்டு மணி நேரம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மாலை 6 மணி அளவில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கொடியேற்றி வைக்கிறார். அதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் அவரது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி மற்றும் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்கள்.

    நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சி உரை ஆற்றுகிறார். அப்போது பிரம்மாண்ட மேடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்துகிறார்.

    இந்த தேர்தலில் சீமான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான காரைக்குடியில் களமிறங்கும் தகவலையும் வெளியிடுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 17 சதவீத வாக்குகளை காரைக்குடி அவருக்கு பெற்றுத்தந்தது. ஆகவே இந்த முறை காரைக்குடியில் வெற்றி கொடியை நாட்ட வேண்டும் என அவர் திட்டமிட்டு அங்கு களம் காண்கிறார்.

    தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் ஆளுமைகள் இருந்த காலத்தில் அரசியலுக்கு வந்து தனக்கான தனி இடத்தை பெற்றிருப்பவர் சீமான். ஒவ்வொரு தேர்தலிலும் தனக்கான வாக்கு வங்கியை உயர்த்திக் காண்பித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து வருகிறார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் அடுத்த பாய்ச்சலாக மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு அமையும் என்பதில் சீமான் உறுதியாக உள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் நேற்று இரவு திருச்சி வருகை தந்தார்.

    • சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
    • மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.

    அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.

    அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.

    மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று உலகத் தாய்மொழிகள் நாள்!
    • நம் தமிழைக் காத்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழே நீ வாழ்ந்திடு!

    இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

    நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது

    உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×