என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
- நாளை முகூர்த்த நாள் என்பதால் தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர்.
ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் இருந்து பிச்சிப் பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.
பெங்களூரூ, ஓசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலத்து அரளி போன்ற பூக்களும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, அம்பை, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன.
மேலும் ஆரல்வாய் மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை, ராமநாயக்கன் புதூர், தோப்பூர், குமாரபுரம் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக்கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இந்த சந்தையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நேரங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி நாளை (30-ந் தேதி) முகூர்த்த நாள் என்பதால், தோவாளை சந்தையில் பூக்கள் வாங்க இன்று ஏராளமானோர் குவிந்தனர். இதன் காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் பூக்களின் விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.
ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.5 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் விற்பனையானது. அரளி பூ ரூ.200, சம்பங்கி ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.80, சிகப்பு கிரேந்தி ரூ.90, பட்டர் ரோஸ் ரூ.240, ரோஜா ஒரு பாக்கெட் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
கனகாம்பரம் கிலோ ரூ.400, முல்லைப்பூ ரூ.1500, தாமரை ரூ.20, கோழிக்கொண்டை ரூ.80, துளசி ரூ.40, பச்சை ரூ.10, மரிக்கொழுந்து ரூ.140.
- 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களை மிரட்டி வரும் 'டிட்வா' புயல் காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் 16 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தூத்துக்குடி, திருச்சி, மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 16 விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் மதுரை, திருச்சி, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
புயல் மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, புதுச்சேரி ஆகிய நகரங்களில் இன்று மொத்தம் 54 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை- மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் ர ரூ.3,129-ல் இருந்து ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது.
இதேபோல், சென்னை- திருச்சி இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,129-ல் இருந்து ரூ.55,626 வரை உயர்ந்துள்ளது. சென்னை- கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.4,351-ல் இருந்து ரூ.24,134 வரை உயர்ந்துள்ளது.
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
- டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நாளை மாலை நெருங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் நாளை 80 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நாளை மாலை நெருங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- திருவள்ளூர், ராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வடதமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கிலோ மீட்டர் தொலைவிலும், நாளை அதிகாலை 50 கிலோ மீட்டர் தொலைவிலும், மாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மற்றும் அதனை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஏனைய வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மொத்த கொள்ளளவான 3.64 டிஎம்சியில் தற்போது 3.25 டிஎம்சியும் நீர் இருப்பு உள்ளது.
- நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.
சென்னை:
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 2 மணியளவில் 2,000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
வானிலை மைய முன்னறிவிப்பின் படி வரக்கூடிய மழை அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதை தவிர்க்க படிப்படியாக சென்னையின் தாழ்நிலை பகுதிக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிக்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து 17.11.2025 காலை 8.00 மணி அளவிலிருந்து வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
உபரி நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு 20.11.2025 அன்று முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் குடிநீர் வழங்கல் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்க கொள்ளளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 2164 அடியாகவும், கொள்ளளவு 3025 மில்லியன் கனஅடியாகவும் (82.99%) உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து நண்பகல் 12 மணி நிலவரப்படி 150 கனஅடியாக உள்ளது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த முன்னறிவிப்புகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் 28.11.2025, 29.11.2025 மற்றும் 30.11.2025 ஆகிய நாட்களில் சென்னை குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவு கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாலும் முன்னெச்சரிக்கையாக நீர்த்தேக்கங்களின் தற்போதைய கொள்ளளவை குறைக்கும் நடவடிக்கையாக (Pre Empty) ஏரியிலிருந்து 29.11.2025 நண்பகல் 12.00 மணி அளவில் வினாடிக்கு 1200 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நீர் வெளியேற்றம் படிப்படியாக காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் புயலின் நகர்வினை பொறுத்து அதிகரிக்கப்படும்.
- ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
கோவாவில் நடைப்பெற்ற 56 வது சர்வதேச திரைப்பட விழாவில் தனது 50 வருட கலைப் பயணத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெற்றார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச திரைப்பட விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள
தமிழ்த் திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
50 ஆண்டுகளாக தனது திரை ஆளுமையால் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, உலகம் முழுக்க மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை என்றும் ஈர்க்கும் வல்லமை கொண்ட ரஜினிகாந்த் அவர்களின் எண்ணற்ற திரைச் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- அன்புமணியால் பணம் கொடுத்து தான் கூட்டம் கூட்ட முடியும்.
- தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி.
கடந்த சில மாதங்களாக பா.ம.க. தலைவர் யார் என்பதில் குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், பா.ம.க. தலைவர் அன்புமணி தான் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
இதனை தொடர்ந்து, 'அன்புமணி தலைவர் இல்லை' என ராமதாஸ் அளித்த மனுவை, ஆணையம் நிராகரித்துவிட்டது. தேர்தல் ஆணையம் செய்தது ஜனநாயக படுகொலை. தேர்தல் ஆணையத்தை கண்டித்து டெல்லியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக பா.ம.க. கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ராமதாஸ்,
* அன்புமணியின் பா.ம.க. தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
* தேர்தல் ஆணையத்தை பணம் கொடுத்து அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார்.
* எனது உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது.
* எனது உரிமையை யாராலும் திருட முடியாது.
* இனி வெல்லப்போவது ராமதாஸ் தான்.
* சட்டமன்றத்தில் பா.ம.க. பிரநிதித்துவம் குறைந்ததற்கு காரணம் அன்புமணியின் செயல்பாடுகளால் தான்.
* அன்புமணியால் பணம் கொடுத்து தான் கூட்டம் கூட்ட முடியும்.
* தான் உருவாக்கிய கட்சியை அன்புமணி அபகரிக்க முயற்சி.
* கட்சி விவகாரத்தில் அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்தான் என்றார்.
- தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
- அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?
தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!
அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்!
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ.க. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்!
- தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள்.
- நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சென்னை:
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர். இளங்கோ, தயாநிதி மாறன், வில்சன், தமிழச்சி தங்கப்பாண்டியன், கிரிராஜன், டாக்டர் கனிமொழி, சோமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
* எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக கவர்னர்களை நியமித்து, பா.ஜ.க. அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது எனக் கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளைத் தனது அன்றாட "அரசு நடவடிக்கைகளாக" ஆக்கிக் கொண்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரைத் திட்டங்களும் தராமல் மறுத்து, அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, "ஒன்றிய-மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில்-உறவில்" ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
* புதிய ரெயில் திட்டங்களும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரெயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை என்று தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வருகிறது.
* தமிழ்நாட்டிற்கு ரெயில்வே திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்காமல் வெறுக்கிறார்கள். புதிய திட்டங்களையும் அறிவிக்க மறுக்கிறார்கள். ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரெயில்வே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தைப் பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரெயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.
மேலும், இந்த மெட்ரோ ரெயில் திட்டங்கள் வருவதற்கு அ.தி.மு.க. துளியளவும் துணை நிற்கவில்லை என்றாலும், "கைக்குட்டையும் கையுமாகச் சென்று" பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துவிட்டு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பா.ஜ.க. அரசின் வஞ்சகத்திற்குத் துணை போக வேண்டாம் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தர வேண்டும்.
* கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன் வடிவுக்குக் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கவும், கவர்னருக்குக் கால நிர்ணயம் செய்யவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பது.
* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
* கல்வியில் காவிக் கொள்கையைத் திணிக்கும் பேயாட்டத்தை நிறுத்தி ரூ. 3548.22 கோடி சமக்ர சிக்சா நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
* தொழிலாளர்களின் உரிமைகளை-அவர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் "நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை" கொண்டு வந்துள்ளதையும், நாட்டிலேயே மிகச்சிறந்த தொழிலாளர் நலன் காக்கும் அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கியுள்ள தமிழ் நாட்டின் தொழிலாளர் நலத் திட்டங்களை முடக்கும் வகையில் அமைந்துள்ளதையும், நம் மாநிலத்தில் உள்ள அமைப்பு சாரா நலச் சட்டமே தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் என்ற நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்து வைத்த கருத்துகளை ஏற்று இதுவரை விலக்கு அளிக்காமலும் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
* கிராமப் புற ஏழை மக்களுக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை உடனடியாக தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
- திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும்.
சென்னை:
'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், தூத்துக்குடியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். சென்னையில் நாளை அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும் நெல்லை, குமரியிலும் நாளை தரைக்காற்றின் வேகம் அதிகரிக்கும். குறைந்த பட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது.
- 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை.
- பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நாளை மறுநாள் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அரசை வலியுறுத்தி 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக SIR பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் 100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி வரவில்லை. கல்விக்காக SSA வழியாக வரவேண்டிய அந்த நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க இருக்கிறோம்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதற்காக ஒரு குழு வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால் எந்த பதிலும் இல்லை. சமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டத்திலும் நான் வலியுறுத்தி இருக்கிறேன். அந்த பிரச்சனையையும் பாராளுமன்றத்தில் எழுப்புவோம்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது. அதையும் எழுப்ப இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய, நாட்டிற்கு முக்கியமாக இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
SIR என்பது அடித்தட்டு மக்கள், BLO-க்கள் மீது அக்கறையின்றி, மனிதாபிமானமே இல்லாமல் நடத்தக்கூடிய ஒரு திட்டமாக உள்ளது.
பல மாநிலங்களில் BLO-க்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டிற்கு மிக குறுகிய அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முடிக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டமாகத்தான் இந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் எல்லா அதிகாரிகளும் மழையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அங்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு இங்கு SIR பணியில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள்.
மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் இந்த நேரத்தில் குறுகிய காலத்தில் போதிய அவகாசம் தராமல் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.
- டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
- கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
'டிட்வா' புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், வீடுகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து இன்று காலை விநாடிக்கு 1000 கனஅடியாக திறக்கப்பட்ட உபரிநீர் தற்போது விநாடிக்கு 1500 கனஅடியாக திறக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்வா புயல் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என்பதால் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.






