என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது.
    • இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பணி செய்வதற்கு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.

    தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இந்தத் தேர்வினை எழுதி தகுதியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர் வினை 4 லட்சத்து 24 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

    தற்காலிக விடை குறிப்பிற்கு தேர்வர்கள் இணைய வழியில் தங்களது ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

    பாட வாரியாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின் பாட வல்லுனர் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடை குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.

    சமீபத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண் விகிதம் குறைக்கப்பட்டன. 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை தேர்ச்சி பெறக்கூடிய மதிப்பெண் குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

    இறுதி விடை குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு வருகிற 2-ந்தேதி பிற்பகல் முதல் அவர்களது தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.gov.in ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

    • எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்.
    • இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது.

    இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை கொடுத்து அதனை பூர்த்தி செய்து பெற்றனர்.

    இந்த படிவங்களில், கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் இடம் பெற்றிருந்த சட்டசபை தொகுதிகளின் விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தன.

    இந்த படிவத்தை, பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சுமார் 40 நாட்கள் நடந்த இந்த பணி, டிசம்பர் மாதம் 14-ந் தேதி நிறைவடைந்தது. அதன் தொடர்ச்சியாக 18-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த எஸ்.ஐ.ஆர். பணி தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பின்பு வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். அதாவது சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 27 லட்சம் பேர் ஆகும். நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 45 ஆயிரம் பேர்.

    இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் மற்றவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்தது.

    நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் எனக்கூறி நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரும் மீண்டும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 6-ம் எண் படிவத்தை கொடுக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதற்கான கால அவகாசமும் வழங்கி சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஆனால் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30-ந் தேதி(நேற்று) என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதால், கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்ற நிலையில் அதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை.

    இதுபோன்ற சூழ்நிலையில் டிசம்பர் 18-ந் தேதி முதல் நேற்று வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16 லட்சத்து 72 ஆயிரத்து 874 பேர் விண்ணப்பம் கொடுத்து இருக்கிறார்கள்.

    மேலும், இந்த தேதிக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆக மொத்தம் சுமார் 22 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

    அதில் தோராயமாக 2½ லட்சம் மனுக்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க அளிக்கப்பட்ட மனுக்கள் (18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்) ஆகும். மீதமுள்ள 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஏற்கனவே நீக்கப்பட்டவர்கள் அளித்துள்ள மனுக்கள் என மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

    ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்அப்படியென்றால் நீக்கப்பட்ட 66 லட்சத்து 45 ஆயிரம் பேரில் இப்போது, 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பம் அளித்து இருக்கிறார்கள்.

    சுமார் 47 லட்சம் பேர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வம் இல்லாமல் மனு கொடுக்கவில்லை.

    இந்த புதிய மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படலாம் என தெரிகிறது.

    ஒருவேளை இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தற்போதைய நிலையில் தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் இப்போது மனு கொடுத்தவர்கள் 22 லட்சம் பேர் அப்படியே சேர்ந்தாலும், வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 65 லட்சத்து ஆயிரம் பேர் மட்டுமே இருப்பார்கள்.

    அதேவேளையில், இந்த வரைவு பட்டியலில் பெயரை நீக்கம் செய்வதற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இந்த பெயர்கள் நீக்கப்பட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் தோராயமாக 5 கோடியே 63 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெறுவார்கள் என தெரிகிறது.

    இந்த இறுதிப்பட்டியலின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களில் 47 லட்சம் பேர் மீண்டும் பெயரை சேர்க்க மனு அளிக்காதது அரசியல் கட்சிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
    • ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் மேற்கொள்வீர்களா?

    பதில்: இன்னும் நேரம் உள்ளது. கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வேன்.

    கேள்வி:- சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்: தலைமை அறிவித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    கேள்வி:- தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: பீகாரில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததுபோல், தமிழகத்திலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

    கேள்வி:- ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?

    பதில்: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.

    கேள்வி:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு என்ன பொருள்?

    பதில்: அவரது கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். என்ன அழுத்தம் என்று எனக்கு புரியவில்லை. அவர் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    கேள்வி:- தேசிய திரைப்பட விருதும், தமிழக திரைப்பட விருதும் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: என்ன என்று அவரைத்தான் கேட்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    • கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது
    • நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். கரூர் சம்பவம் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் இதுவரை பேசாமல் இருந்தநிலையில் தற்போது இந்த சம்பவம் குறித்து அவரது மனநிலையை தெரிவித்துள்ளார்.

    என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது

    * நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

    * எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்வினை ஆற்றுவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.
    • சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிறப்பு சான்றிதழ்களில் பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ப.செந்தில்குமார் பொது சுகாதாரத் துறை இயக்குனருக்கும், அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாகவே பிறப்பு சான்றிதழ் பதிவு செய்ததில் இருந்து 15 ஆண்டுகளுக்குள் அதில் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

    அதன் பின்னர் அத்தகைய வாய்ப்பு வழங்கப்படாது. இந்த நிலையில் கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்தவர்களும், அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக பெயர்களை சேர்ப்பதற்கான அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    தற்போது இறுதி வாய்ப்பாக வருகிற செப்டம்பர் 26-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அனைவரும் பெயர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    இதுதொடர்பான பரிந்துரைகளை பிறப்பு, இறப்பு பதிவு தலைமை பதிவாளர் அரசுக்கு அனுப்பியிருந்தார். அதனை பரிசீலித்த அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • வரும் கூட்டத்தை பார்த்தீர்களா?
    • தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கியது முதல் வெற்றி.

    என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * நான் 30 வருடமாக நட்சத்திரமாக இருந்து, தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். நட்சத்திரமாக இருந்து அரசியலுக்கு திரும்புவது எளிதானது அல்ல.

    * தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கியது முதல் வெற்றி. தேர்தல் வெற்றிக்கான முதல் தெய்வீக முன்னுரையாக கருதுகிறேன்.

    * நான் வெற்றி பெறுவேன். நான் ஏன் கிங் மேக்கராக இருக்க வேண்டும்?. வரும் கூட்டத்தை பார்த்தீர்களா?

    * நான் ஷாருக்கானின் ரசிகர்.

    * எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்தான் ரோல் மாடல்.

    * ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாததால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளருக்காக வருத்தப்படுகிறேன்.

    * எனது அரசியல் காரணமாகத் தனது திரைப்படம் குறிவைக்கப்படலாம்.

    * இது போன்ற ஒன்று நடக்கும் என்று எதிர்பார்த்தேன். அதற்கு மனதளவில் தயாராகவே இருந்தேன்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    பெரம்பலூர்:

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நடைபெறும் பல்வேறு விசேஷங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    குறிப்பாக பூச்சொரிதல், தைப்பூசம், சித்திரை திருவிழாக்களின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.

    அதேபோல் திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (31-ந்தேதி) தெப்பத்திருவிழாவும், நாளை (1-ந்தேதி) கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடும், அன்று இரவு வட திருக்காவேரி கரையில் ரெங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து நேற்று காலை ஒரு குழுவாக சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தவாறு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுமார் 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பெண் பக்தர்கள் மரண ஓலக்குரல் ஒலித்தது.

    இதைப்பார்த்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நடந்து வந்த பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அதேபோல் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தொழார் குடிக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (வயது 35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), சேலம் மாவட்டம், கெங்க வல்லியை சேர்ந்த மருத முத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் தொழார் குடிக்காட்டை சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிய பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.
    • வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.

    என்டிடிவி நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * 33 ஆண்டு கால சினிமா வாழ்வை விட்டு விலகுவது எளிதான முடிவு அல்ல.

    * கொரோனா காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக ஆலோசித்தேன்.

    * அரசியலுக்கு வரும் முடிவு திடீரென எடுத்த முடிவு அல்ல.

    * அரசியல்தான் எனது எதிர்காலம்.

    * எனது அரசியல் பயணம் நீண்ட கால பயணம்.

    * வரவிருக்கும் தேர்தலில் வெல்லவே அரசியல் களத்திற்கு வந்துள்ளேன்.

    * கரூர் சம்பவம் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

    * கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தற்போது வரை என்னை துரத்தி கொண்டிருக்கிறது

    * நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது.

    * எல்லாவற்றிற்கும் நான் உடனடியாக எதிர்விணை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    • தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
    • இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.

    சென்னை:

    நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.

    அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.

    எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.

    இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

    • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

    அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
    • தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும்

    உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு காலத்தில் கடிதம்தான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்தது. நாளடைவில் வளர்ந்து வரும் நவீன உலகில் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்கள் என கருத்துக்களை பரிமாற்றம் செய்ய ஏராளமான வசதிகள் வந்துவிட்டது.

    இருப்பினும் தபால் கடிதங்களை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லவும், அந்த கடிதம் எழுதும் பழக்கத்தின் மூலம் பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் இருக்கும் போதை பழக்கங்களில் இருந்து அவர்கள் விடுபடவும் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என யார் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்களோ, அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு இந்த சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

    பல மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்தில் குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை மற்றும் அதனால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிடும் நிலை குறித்தும், வாழ்வில் தினம் தினம் தங்கள் அனுபவிக்கும் வலிகளை வரிகளாக உணர்ச்சி பொங்க எழுதி இருந்தனர்.

    நான் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட பகிர்ந்துகொள்ள முடியாத அளவில், நீங்கள் போதைப் பழக்கத்தால் ஆட்படும் நிலை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று மாணவிகள் தங்களின் தந்தைக்கு கடிதம் எழுதி இருந்தனர். தங்களின் இன்ப துன்பங்களை மாணவ, மாணவிகள் கடிதங்களில் எழுதி இருந்ததோடு, "வெறும் வார்த்தைகள் அல்ல எங்களின் வலிதான் இந்த வரிகள் என்பதை புரிந்து உடனே மனம் திருந்தி போதை பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்" என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    அவர்கள் எழுதி இருந்த கடிதங்களில் பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் தாங்கள் எழுதிய கடிதங்களை போதை பழக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக தபால் நிலையத்தில் சென்று அஞ்சல் பெட்டியில் செலுத்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.

    மாணவ-மாணவிகள் தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஏற்கனவே இதுபோன்று மாணவ, மாணவிகள் இதே பள்ளியில் கடிதம் எழுதியதின் பயனாக சில பெற்றோர் தங்களின் போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

    ×