என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களிலும் விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது சுற்றுலாப் பயணிகள் செல்வது தடை விதிக்கப்படுவது நடைமுறை, கடந்த சில நாட்களாக சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்துச் சென்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திருமூர்த்தி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. மேலும் பஞ்சலிங்க அருவியின் மேற்பகுதியில் மேகமூட்டம் காணப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று சீரான அளவில் தண்ணீர் வந்ததை அடுத்து பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.

    • சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
    • ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலர் பதவியில் இருந்தும் அக்கட்சியில் இருந்தும் மல்லை சத்யா நீக்கப்பட்டார்.

    இதையடுத்து புதிய கட்சியின் பெயர் நவ.20-ந்தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் சென்னை அடையாறில் நடந்த கூட்டத்தில் மல்லை சத்யா தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார். அவர் 'திராவிட வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கினார்.

    ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

    தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.

    • கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.
    • மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.

    தமிழகத்தில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்த திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின. இதற்கு தமிழகத்தில் அதிருப்தி கிளம்பியது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரெயிலைக் கொண்டு வருவோம் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் பதில் அளித்துள்ளார்.

    * தமிழக அரசின் மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டது.

    * மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை.

    * தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரெயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை.

    * கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை.

    * கோவைக்கு பரிந்துரைத்த 7 மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை.

    * சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டத்திற்கு மத்திய அரசு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கியதை முதலமைச்சர் மறைத்துவிட்டார்.

    * மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும்போது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.

    இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 



    • இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
    • கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில், கடலோர காவல்படை வீரர்களே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கியுடன் தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.

    அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

    கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இரு குழுக்களாக மீனவர்கள் உதவியுடன் கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் கடலுக்கு சென்று மீனவர்கள் போர்வையில் எவரேனும் புதிய ஆட்கள் உள்ளனரா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6மணி வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

    • பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான்.
    • மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். என்பது பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்துகிற ஒரு கூட்டுச் சதி. அவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான ஒரு செயல் திட்டமாகவும் எதிர்ப்பு வாக்குகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான ஒரு செயல் திட்டமாகவும் இதை வடிவமைத்திருக்கிறார்கள்.

    எனவே, இது உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை. இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். பழைய முறைப்படி எஸ்.ஆர்.என்கிற திருத்த முறையையே இந்த தேர்தலுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

    பீகார் தேர்தல் முடிவு என்பது ஜனநாயகத்தை கொன்று புதைக்கிற ஒரு சதி திட்டத்தின் விளைச்சல் தான். பாராளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பகத்தன்மையை சிதைப்பது என்கிற அடிப்படையில் தான் அது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

    மேலோட்டமாக வாக்காளர் பட்டியல் சீராய்வு என்று சொல்லப்பட்டாலும் குடியுரிமையை பறிக்கிற தேசிய குடிமக்கள் பேரேட்டை உருவாக்குகிற சட்டத்தை நடை முறைப்படுத்துகிற சதி முயற்சிதான் இது. வெளிப்படையாக அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை என்பதை உணர வேண்டும். இது நாட்டுக்கு நல்லதல்ல.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.
    • இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி 2 நாட்கள் (இன்றும், நாளையும்) நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு ஆகிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 6 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் மீனவர்களிடம், சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தர வேண்டும் என அறிவுறுத்தினர்.

    இன்று காலை தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் "சாகர் கவாச்" என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
    • ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு.

    கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?

    கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?

    கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?

    உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கனவுகளுடன் காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கொலையுண்ட சம்பவம் ராமேஸ்வரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.
    • ராமேஸ்வரம் கோர்ட்டில் இரவில் நீதிபதி முன்பு முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்-கவிதா தம்பதியின் மூத்த மகள் ஷாலினி ராமேஸ்வரம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த முனியராஜ் என்பவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஷாலினியை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    மாணவி கொலையை கண்டித்தும், கொலையாளி முனியராஜை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ராமநாதபுரம் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கைதான கொலையாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இரவு வரை மருத்துவமனைக்குள் முற்றுகையில் ஈடுபட்டனர். போலீசார் பிரேத பரிசோதனை முடிந்ததும் உடலை ஒப்படைக்க உறவினர்களிடம் கேட்ட பொழுது வாங்க மறுத்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிவகாமி நகர் நவீன தகன மேடையில் வைத்து சடங்குகள் செய்து தகனம் செய்தனர். பல்வேறு கனவுகளுடன் காலை பள்ளிக்குச் சென்ற மாணவி கொலையுண்ட சம்பவம் ராமேஸ்வரத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட முனியராஜிடம் ராமேஸ்வரம் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கொலையாளி முனியராஜூக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ராமேஸ்வரம் கோர்ட்டில் இரவில் நீதிபதி முன்பு முனிராஜ் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, கைதான முனியராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்துச் சென்ற போலீசார் ராமநாதபுரம் சிறையில் நள்ளிரவில் அடைத்தனர். முன்னதாக நேற்று கொலை நடந்தது முதல் இரவு வரை கொலையாளியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாணவியின் உறவினர்கள் வலியுறுத்திக் கொண்டே இருந்தனர்.

    இதனால் இரவில் முனியராஜை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போதிலும், நள்ளிரவில் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போதிலும் திடீரென்று வழி மறித்து தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவியதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த கொலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவரும் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். 

    • பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அவர்கள் கூறியதாவது:-

    தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் மற்றும் 430 தீயணைப்பு வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகிறது.

    பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பஸ்களின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை பொருத்து 40 பஸ்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக 24 தற்காலிக பஸ் நிலையங்களும், 130 கார் பார்க்கிங் இடங்கள் அமைக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக போலீஸ் உதவி மையங்கள், குடிநீர், மின்விளக்கு வசதிகள் மற்றும் தகவல் பலகைகள் ஏற்பாடு செய்யப்படும்.

    கார்த்திகை தீபத்தன்று மழை பெய்தால் தேங்கி நீங்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவல பாதைக்கு தனியார் கல்லூரிகளின் 220 பஸ்கள் இலவசமாக இயக்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரூ.10 சலுகை விலையில் 90 மினி பஸ்கள் இயக்கப்படும். கார் நிறுத்தும் இடங்களில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படும்.

    திருவண்ணாமலைக்கு ஏற்கனவே 16 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கார்த்திகை தீபத்தன்று மேலும் 16 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். 25 கிலோமீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் ரூ.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 கிலோ மீட்டருக்கு மேல் இருந்தால் ரூ.60 வசூலிக்கப்படலாம். அதிகப்படியான கட்டண வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆட்டோக்களை கண்காணிக்க போக்குவரத்து ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    மாட வீதி மற்றும் கிரிவலப் பாதையில் 90 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும். கோவிலுக்குள் 7 மருத்துவ குழுக்கள் 45 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 5 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2 விருந்தினர் இல்லங்கள் மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும். மேலும் தேவையான உபகரணங்களுடன் கூடிய மருத்துவர் குழுவும் இருக்கும். இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
    • பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சாரரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரலில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரெயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    * எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரெயிலும் என மொத்தம் 49 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணைபடி இயங்கும்.

    * வருகிற 23-ந்தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் -அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்-திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்-ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்-கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
    • விபத்தில் காயமடைந்தவர்கள் இளைஞர்கள் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை காரைகாட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் தினேஷ் (வயது 20). வேலூர் ரங்காபுரம் ஏகாம்பர தெருவை சேர்ந்த அல்லாபக்சா மகன் ஷாஜகான் (26). ஆற்காடு காந்திநகரை சேர்ந்த தமிழரசன் மகன் பாலமுருகன் (19).

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் வாலாஜாவில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். ராணிப்பேட்டை நாவல்பூர் புதிய ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது எதிரே சிப்காட் பகுதியிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் பைக் மீது மோதியது.

    இதில் பைக்கில் வந்த தினேஷ், ஷாஜகான், பாலமுருகன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஷாஜகான், பாலமுருகன் ஆகியோரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஷாஜகான் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட பாலமுருகனும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் 3 வாலிபர்களின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களான 3 வாலிபர்கள் விபத்தில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×