search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம்? திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள்
    X

    ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம்? திரைமறைவில் நடக்கும் ரகசிய முயற்சிகள்

    • எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார்.
    • ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களிலும் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு ஜூன் 4-ந்தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனி அணியாக களம் கண்டதால் வாக்குகள் பிரிந்து தி.மு.க.வுக்கே அது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. வுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருந்த அ.தி.மு.க.வின் கனவு பலிக்காமலேயே போய் விட்டது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்து களம் கண்ட அ.தி.மு.க., பா.ம.க.வையும் கூட்டணியில் சேர்த்திருந்தால் தி.மு.க. கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பாரதிய ஜனதா கூட்டணியில் போய் சேர்ந்துள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் களம் கண்டுள்ள அவர் வெற்றி பெறுவாரா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தனிக்கட்சியை தொடங்கிய டி.டி.வி. தினகரனும் பாரதிய ஜனதாவோடு கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். இப்படி ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் இருவருமே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கைகோர்த்திருப்பது அந்த கட்சிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.

    அதே நேரத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கக் கூடாது என்றே அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் கட்சி மேலிடத்திடம் குறைபட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனையும் அரவணைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அ.தி.மு.க. கூட்டணி வலுவானதாகவே மாறி இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெற்று பா.ம.க.வும் அந்த கூட்டணியில் சேர்ந்திருந்தால் நிச்சயம் தி.மு.க. கூட்டணிக்கு அந்த அணி கடும் போட்டியாக இருந்திருக்கும் என்றே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போதைய சூழலில் ஓட்டுகள் பிரிந்து தி.மு.க. வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகளும் தெரிவித்து உள்ளன.


    எனவே அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தும் சில அதிரடியான முடிவுகளை அ.தி.மு.க. மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாகி இருப்பதாகவே கட்சியினர் பலர் கூறியுள்ளனர். குறிப்பாக ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை மீண்டும் உருவாக்கினால் தனித்து நின்றே வெற்றி பெற முடியும் என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமாக எடுத்துக் கூறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் கட்சிக்குள் வந்தால் மீண்டும் இரட்டை தலைமை உருவாகி விடும் என்று அஞ்சுகிறார். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னமும் முழுமையாக தீர்க்கப்படாமலேயே இருக்கும் நிலையில் அவருடன் எப்படி கை கோர்த்து செயல்பட முடியும்? என்கிற கேள்விகளையும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். இப்படி அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை மீண்டும் சேர்ப்பது தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவினால் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Next Story
    ×