search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததால் காய்கறிகள் தேக்கம்
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வருகை குறைந்ததால் காய்கறிகள் தேக்கம்

    • கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
    • அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று 450 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.அதிகாலையில் மழை பெய்ததால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் இன்று காலை வெறிச்சோடியது. தக்காளி, கத்தரிக்காய், முட்டை கோஸ், சுரக்காய், காலி பிளவர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கியது. இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்தனர். கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பீன்ஸ் இன்று ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கிலோ ரூ80-க்கு விற்ற அவரைக்காய் ரூ.50-க்கும், ரூ70-க்கு விற்ற உஜாலா கத்தரிக்காய் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் இஞ்சி இன்று ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனையானது. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை(கிலோவில்) :- தக்காளி-ரூ.30, நாசிக் வெங்காயம்-ரூ.19, சின்ன வெங்காயம்-ரூ.80, ஊட்டி கேரட்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.40, முருங்கைக்காய்-ரூ.25, பாகற்காய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.28, முட்டை கோஸ்-ரூ.13, புடலங்காய்-ரூ.25, பட்டை கொத்தவரங்காய்-ரூ.30, சுரக்காய்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15.

    Next Story
    ×