search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வில் புதிய மாற்றங்கள்... பொதுக்குழுவில் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டம்
    X

    அ.தி.மு.க.வில் புதிய மாற்றங்கள்... பொதுக்குழுவில் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி திட்டம்

    • முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களை பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

    டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டியது வழக்கமான நடைமுறை தான்.

    இருந்தாலும் இந்த பொதுக்குழுவில் கட்சியின் எதிர்கால நலனை மையமாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் குறித்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    கூட்டணி இல்லாமலும் அ.தி.மு.க. தனித்து வெற்றி பெறுவதற்கு கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து புதிய வியூகத்தை அமைத்துள்ளார். முக்கியமாக மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.

    2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 117 மாவட்ட செயலாளர்களை பொறுப்புக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 72 மாவட்டங்களாக இருந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

    அதே நேரம் முன்னாள் அமைச்சர்களான மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களை பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

    செல்லூர் ராஜூ, நத்தம் விசுவநாதன், காமராஜ், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்பட சிலர் 4 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு செயலாளர்களாக இருக்கிறார்கள். தொகுதிகளை குறைத்தால் தங்கள் வலிமை குறைந்து விடும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

    அதிகமான தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருந்தும் தேர்தல் நேரத்தில் இவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். கூடுதலான தொகுதிகளை கைப்பற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. அதற்கு காரணம் மாவட்ட செயலாளர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதல்தான் என்று தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மீது கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே புகார் தெரிவித்துள்ளார்கள். பெரும்பாலான புகார்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றவர்களை வளரவிடுவதில்லை என்பதுதான்.

    இதுவே தேர்தல் வெற்றிக்கும் தடையாக இருப்பதால் மாவட்டங்களை பிரிப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

    இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்றால் தேர்தலில் அவர் நிச்சயம் வெற்றி பெற கடுமையாக உழைப்பார். அவருக்கு கீழ் உள்ள மற்றொரு தொகுதியையும் கைப்பற்ற உழைப்பார்கள். இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை எளிதாக கைப்பற்றி ஆட்சிக்கு வர முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. எனவே இதுபற்றி பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்கிறார்கள்.


    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் முறையில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது கட்சி முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் வந்து விட்டதால் பொதுச்செயலாளர் தேர்வில் சில திருத்தங்கள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 2,665 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்புச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4 ஆயிரம் பேருக்கு அழைப்புகள் அனுப்பப்படும் என்கிறார்கள்.

    மேலும் கூட்டணி தொடர்பாகவும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    விரைவில் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் பற்றியும் முடிவு செய்கிறார்கள். இப்போது மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பாளர் என நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    இனி சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளார்கள்.

    புதுமுகங்கள் பலருக்கு பொறுப்புகள் வழங்கி கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×