search icon
என் மலர்tooltip icon

  தமிழ்நாடு

  அ.தி.மு.க.வை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது- எடப்பாடி பழனிசாமி
  X

  அ.தி.மு.க.வை உடைக்கும் முயற்சி வெற்றி பெறாது- எடப்பாடி பழனிசாமி

  • தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
  • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

  காஞ்சிபுரம்:

  அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் காஞ்சிபுரம் வந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

  திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

  ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்ன அந்த பொன்மொழியை அ.தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்து அதை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

  இன்று ஸ்டாலின் போற பக்கமெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க. 3 ஆக போய் விட்டது 4 ஆக போய் விட்டது என்கிறார். மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு வந்து பார்க்கட்டும் அண்ணா பிறந்த மண், அண்ணா கண்ட கனவை நினைவாக்கும் கட்சி அ.தி.மு.க. காஞ்சிபுரமே குலுங்குகிற அளவுக்கு இன்று மக்கள் வெள்ளம். அ.தி.மு.க.வை பிரிக்க பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. உங்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

  அண்ணா கண்ட கனவை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம். அது எங்களது இரு பெரும் தலைவர்களுடைய கொள்கை, லட்சியம். அதை நிறைவேற்றுவது தான் எங்களை போல் உள்ள தொண்டனுக்கு பெருமை.

  இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். உழைப்பாளர்கள் நிறைந்த இந்த பூமியிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  விவசாயம், நெசவுத்தொழில் இரண்டு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள காஞ்சி மாவட்டம் மென்மேலும் வளருவதற்கு நம்முடைய வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் வெற்றி பெற வேண்டும்.

  இன்றைக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதிலே அ.தி.மு.க.தான் முன்னிலையில் இருக்கும். இந்த மண்ணிலே எத்தனையோ தலைவர்கள் பிறக்கின்றார்கள். வாழ்கிறார்கள். இறக்கின்றார்கள்.

  இடைப்பட்ட காலத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்ற தலைவர்கள்தான் மக்கள் உள்ளத்திலே வாழ்வார்கள். அப்படி நமது முப்பெரும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா இந்த மண்ணிலே மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். இன்னும் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிற தலைவர்கள். யார் என்று உங்களுக்கு தெரியும்.

  இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்கிறார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவே அ.தி.மு.க. ஆட்சி தான் இதற்கு காரணம்.

  ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மணிமங்கலத்தில் நான் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறையில் இருக்கிறது. அதில் சுமார் 6,211 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் கொண்டு வந்து முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு திட்டத்தை நிறைவேற்றினோம். இதற்கு மட்டும் சுமார் ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கினோம்.

  இந்த குடிமராமத்து திட்டம் மூலமாக ஏரிகள் ஆழமாக்கப்பட்டது. மழை நீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

  இந்த அற்புதமான திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

  இங்கு 40 வருடத்திற்கு ஒருமுறை அத்திவரதர் மக்களுக்கு அருள் புரிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அத்திவரதர் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். அந்த விழாவில் 60 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த காஞ்சிபுரம் நகரமே சிறப்பு பெற்றது.

  அப்படி அத்திவரதரை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வந்து குழுமி பத்திரமாக வீடு திரும்பினாார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை பிரதிபலித்தது.

  இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டு தொழிலும் நலிவடைந்துள்ளது. இந்த தொழிலை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. கைத்தறி நெசவு படிப்படியாக சரிந்து விட்டது. விசைத்தறி அதோடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

  அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும். நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்று இந்த தொழில் சிறக்க பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பார்.

  பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

  ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களை பாதுகாத்தோம். கைத்தறி நெசவு தொழில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டது.

  காஞ்சி என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் பட்டு நெசவு இங்குதான் அதிகமாக உள்ளது.

  இந்த தொழில்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த மக்களுக்கு தேவையான திட்டங்களை எதுவும் இதுவரை செய்யவில்லை.

  இன்று கடுமையான மின் கட்டண உயர்வு உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்ந்து விட்டது. விசைத்தறி மற்றும் கடைகளுக்கு பயன்படுத்துகிற கட்டணம் 'பீக் ஹவர்' என்று கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

  மின் கட்டண உயர்வினால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி பாதிக்கப்பட்டு விட்டது. கடைகளுக்கு அதிக வரி போடப்பட்டுள்ளது.

  தி.மு.க. அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்து விடும். இது கோடை காலம். அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரத்தை தந்தோம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டில் விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டது. இன்று 1 கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்து விட்டது. எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பருப்பு, சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை அனைத்தும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது. வேலையில்லை. வருமானம் இல்லை. செலவு அதிகம். மக்கள் இன்றைக்கு படாதபாடுபடுகிறார்கள்.

  இப்படிப்பட்ட அவல நிலைதான் தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பேசும்போது என்ன சொல்கிறார், தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்கிற ஆட்சி என்று சொல்கிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசு மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. அரசை பார்க்கிறார்கள்.

  தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சி மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. மக்கள் படும் துன்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே ஏழை மக்களுக்கு உதவி செய்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. அரசுதான்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×