search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது- மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி தரப்பு வக்கீல் வாதம்
    X

    ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது- மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி தரப்பு வக்கீல் வாதம்

    • ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தனி நீதிபதி கூறி உள்ளது தவறு.
    • அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளதும் தவறானது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதற்கு நீதிபதிகள் இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், நர்பதா சம்பல் ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் ஆஜரானார்கள். அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது.

    முதலில் எடப்பாடி பழனிசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடினார். அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளதை தனி நீதிபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

    ஜூலை 1-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தனி நீதிபதி கூறி உள்ளது தவறு. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று தனி நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளதும் தவறானது. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது.

    கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோர எந்த புள்ளி விவரங்களும் இல்லை எனவும், ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் எண்ணத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி கூறி உள்ளது யூகத்தின் அடிப்படையிலானது.

    தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வம் என்ற தனிநபர் பயன் அடையும் வகையில் தான் தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்கள் பயன் அடையும் வகையில் அல்ல. தனி நீதிபதியின் உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

    2,190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி நடக்கும் என்று ஜூன் 23-ந்தேதி அறிவிக்கப்பட்டது. 2,539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    கட்சியின் பொதுக்குழு உச்சபட்ச அமைப்பு என்பதால் ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவும் இல்லை என்று கூற முடியாது. ஒன்றரை கோடி அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் ஏதும் முன்வைக்கவில்லை.

    ஜூன் 23-ந்தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கவில்லை. கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதாரணமானது.

    ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு குறித்து ஜூன் 23-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. 2539 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தனித்தனியாக தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் அளித்துள்ளனர்.

    கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக்கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.

    ஜூன் 23-ந்தேதி பொதுக்குழுவில் ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பு ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் இருந்தார். பொதுக்குழு ஜூன் 23-ந்தேதி நடந்தது என்பதிலோ, அதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் என்பதிலோ அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி நடக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டதிலோ பிரச்சினையும் இல்லை.

    பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. கட்சி விதிகளின்படிதான் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டுவது தொடர்பான கட்சி விதிகளில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

    உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் படிவத்தில் கையெழுத்திட ஓ.பன்னீர்செல்வம் மறுத்ததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடினார்.

    அவர் வாதாடுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் அ.தி.மு.க. செயல்பட முடியாத நிலை ஏற்படும். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்பட முன் வரமாட்டார்கள் என்பதால் கட்சி நடவடிக்கைகள் முடங்கிவிடும். அடிப்படை தொண்டர்களின் கருத்துக்களை பெறவில்லை என தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு.

    அடிப்படை உறுப்பினர்கள் முடிவு எடுக்க கட்சியில் அதிகாரமில்லை. பொதுக்குழுவுக்கு அடிப்படை உறுப்பினர்களை அழைப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தான் வழக்கே தொடரப்பட்டது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படவில்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுவர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவு கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கூட்டம் நடத்த கூடாது என ஒருங்கிணைப்பாளர் வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் இணைந்து தான் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டது விபரீதமானது. இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதால், ஒரு தரப்பு நீதிமன்றத்துக்கு வந்து கூட்டங்களை கூட்டுவது குறித்து நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டி வரும்.

    எனவே தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் தலையிடும் வகையில் வழக்கு கோரிக்கையை மீறி உள்ளதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதாடினார்.

    தொடர்ந்து வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. இன்று பிற்பகலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் வாதாடுகிறார்கள்.

    Next Story
    ×