search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க முடியாது.. பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி
    X

    செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க முடியாது.. பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

    • செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.
    • கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததையடுத்து, அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பகிர்ந்தளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து கவர்னருக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அதில் மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மது விலக்கு ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக அளிப்பதாக பரிந்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லாததால் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பரிந்துரையை கவர்னர் ஏற்று அதற்கான உத்தரவை பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்தார். அதில் கடிதத்தை திருப்பி அனுப்பியது அரசியல் சட்டத்துக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது எனவும், அமைச்சர்களின் இலாகாக்களை பிரித்துக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும், அரசமைப்பு சட்டத்தை பின்பற்றியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    முதலமைச்சரின் இந்த கடிதம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்த ஆளுநர் இன்று மாலையில் தனது முடிவை அறிவித்தார். அதில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.

    செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது. குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதால் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

    Next Story
    ×